உகாண்டா நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான ஃபெயித் பாட்ரிசியா அரியோகோட் (Faith Patricia Ariokot) என்பவர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று, தனது கைகளை மரத்தடியைச் சுற்றி 16 மணி நேரம் 6 வினாடிகள் வரை பிடித்திருந்து கின்னஸ் சாதனையைச் செய்திருக்கிறார்.
இதற்கு முன்பாக, இச்சாதனைக்கு அவர் இரு முறை முயற்சி செய்த போதும், அது அவருக்குச் சாதகமாக அமையவில்லை. 29 வயதான ஃபெயித் பாட்ரிசியா இச்சாதனைக்கான முதல் முயற்சியில் பெரும்பகுதியைப் பதிவு செய்யத் தவறியதால், அவரது சாதனை ஏற்கப்படவில்லை. இரண்டாவது முயற்சியின் போது, இடியுடன் கூடிய மழையால், அவரது சாதனை நிகழ்வு இடையிலேயேத் துண்டிக்கப்பட்டது. மூன்றாவது முயற்சியில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
மரங்களை நடுவதற்கு அனைவரையும் ஊக்குவிக்கவும், மரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மனிதர்களுக்கு எடுத்துரைக்கவும், இந்தச் சாதனையினைச் சவாலுடன் தான் நிறைவேற்றியிருப்பதாக அவர் தெரிவிக்கிறார். மேலும் அவர், மரங்களின் மேல் காதல் கொள்ள வேண்டும், மரங்களின் மேல் கொள்ளும் அன்பு, நம்மையும், இந்தப் பூமியையும் இயற்கையோடு இணைந்து, நீண்ட காலம் நாம் வாழ வழிவகுக்கும் என்கிறார்.
உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெய்த் 16 மணி நேரம் 6 வினாடிகள் என்று அதிக நேரம் மரத்தைக் கட்டிப்பிடித்துச் (Longest Tree Hug) செய்த கின்னஸ் சாதனையைப் போன்று, இந்தியாவில் 4620 பேர் மரத்தைக் கட்டிப்பிடித்து அதிகமானவர்கள் மரத்தைக் கட்டிப்பிடித்த (Largest Tree Hug) கின்னஸ் சாதனையை 2017 ஆம் ஆண்டில் நிகழ்த்தியிருக்கின்றனர்.
ஆசியாநெட் நியூஸ் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட், இந்தியா (Asianet News Network Pvt. Ltd. (India)) எனும் செய்தி நிறுவனம், திருவனந்தபுரம் ஜவஹர்லால் நேரு வெப்பமண்டலத் தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (Jawaharlal Nehru Tropical Botanic Garden and Research Institute - JNTBGRI) சேர்ந்து, 'எனது மரம், எனது வாழ்க்கை' எனும் கருப்பொருளில் மரத்தைக் கட்டிப்பிடித்துச் சாதனை செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தது.
அந்த வேண்டுகோளைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் (United Nations) அவையின் பன்னாட்டுக் காடுகள் நாளான (International Day of Forests) மார்ச் 21 அன்று, திருவனந்தபுரம் ஜவஹர்லால் நேரு வெப்பமண்டலத் தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் காடுகள் பகுதியில் அமைந்திருக்கும் மரங்களை 4620 பேர் முழுமையாகக் கட்டிப்பிடித்துக் கின்னஸ் சாதனையைச் செய்திருக்கின்றனர்.
இந்தச் சாதனைக்கான விதிகளின்படி, ஒவ்வொரு பங்கேற்பாளரும் குறைந்தபட்சம் 60 வினாடிகளுக்கு ஒரு மரத்தைக் கட்டிப்பிடித்திருக்க வேண்டும், முழு முயற்சியிலும் தங்கள் கைகளை மரத்தின் உடற்பகுதியைச் சுற்றிப் பரப்ப வேண்டும். விதிகளைப் பின்பற்றாத பலரும் மொத்த எண்ணிக்கையிலிருந்து விலக்கப்பட்டனர். கடைசியாக, இச்சாதனை நிகழ்வில் 4620 பேர் கலந்து கொண்டு சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது. இதே போன்று 1316 பேர் மரத்தைக் கட்டிப்பிடித்துச் செய்திருந்த முந்தைய கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டது. இச்சாதனையை ஆசியாநெட் நியூஸ் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட், இந்தியா நிறுவனம் செய்ததாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இந்தச் சாதனை நிகழ்வில் குழந்தைகள், அரசு அலுவலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர் மாணவர்கள் என்று பல்வேறு பிரிவினரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.