Breaking the piggy bank 
கல்கி

சிறு வயதில் உண்டியலை உடைத்தது இன்று உலக சாதனை ஆனது!

தேனி மு.சுப்பிரமணி

1986 ஆம் ஆண்டில் ஜூலை 10 ஆம் நாளில் பிறந்த உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த மணீஷ் தமேஜா (Manish Dhameja) என்பவர், 2016 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாள் வரை, ஏற்கனவே இருக்கும் நாடுகள், தற்போது இல்லாத நாடுகள், ஒன்றிணைக்கப்பட்ட நாடுகள் என்று மொத்தம் 473 நாடுகளிலிருந்து மொத்தம் 12,155 நாணயங்களைச் சேகரித்து, ’இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ்’ எனும் இந்தியச் சாதனைப் புத்தகத்தில் 2016 ஆம் ஆண்டில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 28 ஆம் நாளில், இரண்டு உலோகங்களில் (Bi-Metallic) உருவாக்கப் பெற்ற 2602 நாணயங்களைச் சேகரித்து வைத்திருப்பவர் என்று கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார்.

Manish Dhameja

இவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாணயச் சேகரிப்பாளர்களாக இருந்ததால், இவரும் தனது 5வது வயதிலேயே நாணயச் சேகரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். தொடக்கத்தில், தனது தந்தையார் சேகரித்து வைத்திருந்த நாணய உண்டியலை உடைத்து, அதிலிருந்த நாணயங்களை பண்டக அறையில் மறைத்து வைத்திருந்து, பின்னர் அந்த நாணயங்களைத் தனது கைவினைப் புத்தகத்தில் ஒட்டி வைத்தார். அதனைக் கண்ட ஆசிரியர்கள், உடன் பயிலும் மாணவர்கள் அவரைப் பாராட்டி மகிழ்ந்தனர். அந்த ஊக்கத்தில், அவர் நாணயச் சேகரிப்பில் கூடுதலாக ஆர்வம் கொள்ளத் தொடங்கினார். உலகின் பல்வேறு நாட்டு நாணயங்களைத் தேடித்தேடிச் சேகரித்தார்.

இவருடைய நாணயச் சேகரிப்பில், பலாவ் குடியரசின் 5.4 செ.மீ விட்டம் கொண்ட மிகப் பெரிய நாணயம், அக்பர் பேரரசின் 100 கிராம் அளவிலான எடை அதிகமான நாணயம், 16 முதல் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான முகலாய நாணயங்கள் போன்றவைகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நாணயச் சேகரிப்புப் பொழுது போக்கில் மட்டுமின்றி, கல்வியிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், 8 முதுகலைப் பட்டங்கள், 2 இளங்கலைப் பட்டங்கள் மற்றும் 6 சான்றிதழ்களை இந்தியா மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பெற்றிருக்கிறார். தற்போது இவர், நாணயம் மற்றும் அருங்காட்சியக மேலாண்மையில் முனைவர் பட்ட (Ph.D.,) ஆய்வினையும் மேற்கொண்டு வருகிறார்.

இவர் சாதனைகளுக்கும், சமூகப் பணிகளுக்கும் என்று 25 தேசிய மற்றும் பன்னாட்டு விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவற்றுள், ராஜீவ் காந்தி சிறப்பு விருதுகள் (அனைத்திந்திய மனித நலன்), ராஜீவ் காந்தி சிறப்பு விருதுகள் (பெச்சன்), தொலைத்தொடர்பு அமைச்சகம் (மடகாஸ்கர்), கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (அமெரிக்கா), உலக சாதனை இந்தியா (ஜீனியஸ் அறக்கட்டளை), ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருதுகள் குறிப்பிடத்தக்கவை.

”நாணயச் சேகரிப்பைப் பொழுது போக்காகச் செய்து வந்தேன். அதுவே, எனக்குக் கின்னஸ் உலக சாதனையாளர் எனும் மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்து விட்டது” என்கிறார் மணீஷ் தமேஜா.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT