CHENNAI 
கல்கி

சென்னை மாநகர சாலைகள் ஆக்கிரமிப்பு! மனிதனோ கடைகளோ இல்லை... பின் வேறென்ன?

முனைவர் என். பத்ரி

போக்குவரத்து நெரிசலின் புகலிடமாக விளங்கும் சென்னை போன்ற மாநகரங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்துகள் தற்போதெல்லாம் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன. நாய்கள், மாடுகள், ஆடுகள் போன்ற கால்நடைகள் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. திடீரென சாலையின் குறுக்கே வரும் இவைகளால் விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன.

வாகனங்கள் மோதி நடக்கும் விபத்துக்களை விட கால்நடைகளால் விபத்துக்கள் நிகழ்வது சமீபகாலமாக அதிகரித்து விட்டது. சென்னை ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், வேப்பம்பட்டு, தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரனை, பழைய மகாபலிபுரம் சாலை இங்கெல்லாம் கால்நடைகளால் விபத்துகள் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன.

விபத்துகளில் சிக்கும் கன்றுக்குட்டிகளையும், மாடுகளையும் யாரும் காப்பாற்ற முன்வருவதில்லை. சாலையின் நடுவே உயிருக்குப் போராடும் இந்த கால்நடைகள் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதும் போது அவை பலியாவதோடு, தொடர்ந்து வாகனத்தில் வருபவர்களும் விபத்தில் சிக்குகின்றனர். 

Cattle occupying Chennai city roads

சென்னை போன்ற பெருநகரங்களில், கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு தீவிரமாக பின்பற்றப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சியும், காவல்துறையும் எச்சரித்தும் அதை யாரும் கண்டுக்கொள்வதில்லை. சாலையில் மட்டுமல்லாமல், இருப்புபாதைகளிலும் கால்நடைகள் சுதந்திரமாக திரிகின்றன. இதில் சில கால்நடைகள் மீது ரயில்கள் மோதி கால்நடைகள் பலியாகும் சம்பவங்களும் ஆங்காங்கே அடிக்கடி நிகழ்கின்றன. தண்டவாளத்தை கடக்கும் மாடுகள் மீது விரைவு ரயில்கள் மோதி அதன் இயந்திரங்கள் பழுதான சம்பவங்களும் உண்டு. தெருக்களில் நாய்கள் தொல்லை இருந்தால், அவற்றை பிடிக்க ஆர்வம் காட்டும் உள்ளாட்சி நிர்வாகங்கள், மாடுகளை கண்டுக் கொள்வதில்லை.

இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் உறங்குவதால், இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் விபத்துக்குள்ளாகின்றனர். இவ்வாறான நிகழ்வுகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் நிகழ்ந்து வருவது அனுபவத்தின் மூலம் நம்முடைய கவனத்திற்கு வருகின்றன. 

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள், மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவங்களுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. அதன் உரிமையாளர்களுக்கு பிடிக்கப்பட்ட மாடுகளை இரண்டு நாட்களுக்கு பராமரிக்கும் செலவினத்துடன் அபராதத் தொகையாக ரூ.2,000ம் விதிக்கப்படுகிறது. மேலும் பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர் இரண்டு நாட்களுக்குள் அபராத தொகையினை செலுத்தி மாடுகளை மீட்டு செல்லாத நிலையில், மூன்றாவது நாள் முதல் ஒவ்வொரு நாளும் மாடுகளை பராமரிக்க பராமரிப்பு தொகையாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட மாடுகளை மாட்டுத் தொழுவத்திருந்து விடுவித்து எடுத்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பம் வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கூறி உள்ளது. மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபடும் பொழுது அதன் உரிமையாளருக்கு மாடு திரும்ப வழங்கப்படாது. அதற்கு மாறாக புளூ கிராஸ் சொசைட்டியிடம் உடனே மாடு ஒப்படைக்கப்படும்.

காளைக் கன்றுகளை விலைக்கு வாங்கும் சிலர் அவற்றை சாலைகளில் விட்டுவிடுகின்றனர். குறிப்பிட்ட சில மாதங்களுக்கு பிறகு வளர்ந்து விடும் அவைகளை அதிக விலைக்கு விற்றுவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களை குறித்த விவரம் வெளிச்சத்துக்கு வருவதில்லை. இவர்களை கண்டறிந்து, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறறிவு பெற்ற மனிதனே போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதில் கால் நடைகளைப்பற்றி சொல்லத்தேவையில்லை. அவற்றை பராமரிப்பவர்கள்தான், அவற்றின் மீது அக்கறைக் காட்டி வளர்க்க வேண்டும். நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் கால்நடைகளை பராமரிப்பது மிகவும் கடினமாகும். இதை உணர்ந்து நகராட்சி, மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இவற்றை பராமரிப்பவர்கள்தான் கவனமுடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் , அவர்களின் கால்நடைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடு கொடுக்க அவர்களை வலியுறுத்தும் வகையில், அரசு சட்டங்களை இயற்ற வேண்டும்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT