23 மே 2024 அன்று, மீரான் தியேட்டர்ஸ் சார்பில், சென்னை தாகூர் திரைப்பட மையத்தில், புதிய படம் பற்றிய அறிவிப்புக்கான பத்திரிகையாளர் சந்திப்பு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது.
திரையுலகம் குறித்த நிகழ்ச்சியின் முதல் பகுதி:
மீரான் தியேட்டர்ஸ் அறிமுக விழாவுக்கு முன்பாக திரையுலகம் பற்றிய ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் ஜாஜு ஐ.ஏ.எஸ். பங்கேற்றுப் பேசினார். அப்போது, இந்திய திரையுலகத் தொழில் துறையில் தென்னிந்தியாவின் பங்களிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருவதையும், தென்னிந்தியத் திரைப்படங்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்ப்பதையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
அடுத்தடுத்த கலந்துரையாடல்களில் I Gene India தலைமை நிர்வாக அதிகாரி,. மாலா மணியன், தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் பிராந்தியத் தலைவர் ரோகிணி கௌதமன், சட்ட ஆலோசகர், நடிகர், எழுத்தாளர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டார்கள். திரைப்படத்துறையில் நீண்டகாலமாக இருந்துவரும் காப்பி ரைட் தொடர்பான பிரச்னைகள் குறித்து சங்கர் கிருஷ்ணமூர்த்தி விரிவாகப் பேசினார். விபா நிறுவன இயக்குனரான வித்யா பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், நடிகர் மற்றும் மீரான் தியேட்டர்ஸ் உரிமையாளர் அம்ஜத் மீரான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தினார்.
நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியில் குளோபல் மீரான் தியேட்டர்ஸ் அறிமுக விழா நடைபெற்றது. இதற்கு முன்பாக மீரான் தியேட்டர்ஸ் நிறுவனம் இந்தியத் திரைப்படத் தலைநகரங்களிலும், எமிரேட்ஸ், இங்கிலாந்து, சௌதி அரேபியா நகரங்களில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சிகளின் காணொலி காட்சிகள் திரையிடப்பட்டன. அவற்றில் திரையுலகப் பிரபலங்கள், திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் OTT இயக்குநர்கள் பலரும் கலந்துகோண்டு சிறப்பித்தார்கள்.
மீரான் தியேட்டர்சின் கதை, திரைக்கதை பங்களிப்பு பற்றி:
சிறு திரைப்படங்கள் என்ற பிரிவில் எங்கள் நிறுவனம் இதுவரை பல டிரெண்ட் செட்டிங் ஆன பிரம்மாண்டமான பயிற்சி திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. கடந்த காலங்களில் சிறந்த கதைகளை எழுதுவதற்கு நாங்கள் நிதி உதவி செய்து இதுவரை ஏராளமான கதைகளை உருவாக்கி இருக்கிறோம்.
மீரான் தியேட்டர்ஸ் கதை, வசனம், பாடல்கள், திரைக்கதை எனப் பல்வேறு திரைப்பட உள்ளடக்கங்களை உருவாக்கி வருகிறது. இந்த இலக்கியப் படைப்புகளை உருவாக்கியதில் அம்ஜத் மீரான் மற்றும் அவரது இணை, துணை எழுத்தாளர்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. மேலும் பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் திரைவடிவம் கொடுப்பதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். பல விதமான அம்சங்கள் கலந்த உள்ளடக்கத்தில் நேவி ஸ்பை யுனிவர்ஸ், காதல் யுனிவர்ஸ், த்ரில்லர் யுனிவர்ஸ், அதிரடி யுனிவர்ஸ், காமெடி படங்கள், காலத்துக்கேற்ற படங்கள், அனாதைகள் உலகம், கூலி பிரபஞ்சம், மியூசிக்கல் யுனிவர்ஸ் எனப் பலவும் அடங்கும். இவை இந்தி, தமிழ், தெலுங்கு, அரபு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு மொழி திரைப்படத்துக்கும் பிரத்யேகமான சந்தை உள்ளது.
புதிய திரைப்பட அறிவிப்பு:
திரைப்படத்தின் பெயர்:
மெட்ரோ கூலி – பாகம் 1 – போலீஸ் Vs கூலி
மெட்ரோ கூலி – பாகம் 2 – கோடி Vs கூலி
இதன் இரண்டு பாகங்களும் தலா ஏழு மணி நேரம் ஓடும் அளவுக்குப் படம் எடுக்கப்படும். பின்னர் அவை இரண்டே கால் மணி நேரத் திரைப்படமாக எடிட் செய்யப்பட்டு தியேட்டர்களில் வெளியாகும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு அவற்றின் முழுமையான ஏழு மணி நேர கதை பதினான்கு எபிசோடுகளாக உருவாக்கப்பட்டு, இரண்டு சீசன்களாக தொலைக்காட்சிகளிலும், ஓ.டி.டி. தளத்திலும் வெளியாகும்.
மெட்ரோ கூலி – பாகம் 1
சென்னையின் புறநகர் பகுதியைச் சேர்ந்த மர்மமான கூலித் தொழிலாளியைப் பற்றிய கதை இது. தன்னை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ப்பதற்காகப் பிரபல கிரிக்கெட் வீரரை சந்திக்கச் சென்ற அண்ணனைத் தேடிச் செல்கிறான் அவனுடைய தம்பி. ஆனால், அண்ணனோ, குழந்தைகள் கடத்தலுக்காகத் தமிழ்நாடு போலீசால் தேடப்பட்டு வருபவன். கதை, பீஜிங், எகிப்து, மடகாஸ்கர், அமெரிக்கா, ரியாத், ஜோஹான்ஸ்பர்க், மாலே, எனக் கடல் கடந்து போகிறது. கதை கொரோனா பொது முடக்கக் காலத்தில் நடைபெறுவதால், படத்தின் பெரும்பாலான அயல்நாட்டுக் காட்சிகள் உட்புறக் காட்சிகளாகவே அமையும். படத்தில் விறுவிறுப்பான போலீஸ் – கிரிமினல் – துரத்தல் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.
மெட்ரோ கூலி – பாகம் 2
கோடி என்கிற கோடீஸ்வரன் என அழைக்கப்படும் பெரும் பணக்காரர் ஒருவருக்கும் சாதனைக் கனவுகள் காணும் மதுரை அழகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட தினக்கூலித் தொழிலாளியான சோலைமலைக்கும் இடையிலான மோதலே இந்த பாகத்தின் கதை. சிறுவனாக ஊரிலிருந்து புறப்பட்டு சென்னை மீன்பிடி துறைமுகத்தில் வந்து சேரும் அவன், இன்று இருபதுகளில் பிற்பகுதியில் இருப்பவன். மோதலை அவன் எப்படி எதிர் கொள்கிறான்? அவன் கனவுகள் எப்படி நிறைவேறுகின்றன? அதற்கு அவன் வகுக்கும் வியூகம் என்ன? என நகரும் கதை. குடும்ப, அரசியல் நாடகமும், பழி வாங்கும் நடவடிக்கையும் கதைக்கு விறுவிறுப்பு சேர்க்கின்றன.
இதன் இரண்டு பகுதிகளிலும் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் அம்ஜத் மீரான் சோலை மலை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் இயக்குனர் சசி, நடிகர், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, மூத்த நடிகர், இயக்குனர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், ஐ.சி.சி மற்றும் ஐ.பி.எல் ஸ்டார் டீ.வி. தொகுப்பாளர் பாவ்னா பாலகிருஷ்ணன், நடிகர் பரத், இயக்குனர் சத்ய பிரபாஸ் பினிசெட்டி, நடன வடிவமைப்பாளர் ஜெஃப்ரி வர்தன், நடிகர் அனூப் குமார், தயாரிப்பாளர் செல்வகுமார் அகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.