ஒருவரது பெயருக்கு முன்பாக, ஆங்கிலத்தில் Mr. என்றும், தமிழில் திரு. என்றும் பயன்படுத்தப்படும் சொல்லுக்கு இணையான சொல்லாக, ‘பெருமதிப்புக்குரிய’ என்பதைக் குறிக்கும் இந்து சமயச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வரும் 'ஸ்ரீ' எனும் சொல்லுக்கு 'செல்வம்' என்று பொருள். இச்சொல் ‘வணக்கத்துக்குரிய’ என்பதைக் குறிக்கும் சமஸ்கிருத அடைமொழியாகவும் இருக்கிறது.
ஸ்ரீ என்ற எழுத்து தமிழ் மொழிப் பயன்பாட்டில் இருந்து வரும் கிரந்த எழுத்து வடிவமாகும். இந்த எழுத்தைச் சில இந்துக் கடவுள்களைக் குறிக்கும் பண்புப்பெயராகவும் பயன்படுத்துகின்றனர். ஸ்ரீ என்பது செல்வதைக் குறிப்பதால் ஸ்ரீதேவி என்னும் பெயர் செல்வத்துக்கான கடவுளுமான இலட்சுமியையும் குறிக்கிறது. வளத்துக்குரிய கடவுளான பிள்ளையாரையும் ஸ்ரீ என்ற பெயர் குறிக்கிறது.
இந்து சமய நம்பிக்கையில் அதிக ஈடுபாடுடையவர்கள் தாங்கள் எழுதும் ஆவணங்களின் தொடக்க வரியின் நடுவே ஸ்ரீ என்று எழுதும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இது பிள்ளையார் சுழி, ஓங்காரக் குறி இட்டு எழுதும் வழக்கங்களைப் போன்றது.
தமிழ்நாட்டில் பொதுப்பயன்பாட்டில், வணக்கத்துக்குரிய, பெருமதிப்புக்குரிய நபர்களின் பெயருக்கு முன் பெருமதிப்பைத் தெரிவிக்கும் முன்னொட்டாக ஸ்ரீ எனும் இச்சொல் பயன்படுகிறது. இச்சொல்லைப் பயன்படுத்த பால் வேறுபாடு பார்க்கத் தேவையில்லை என்றாலும், இச்சொல் ஆணுக்குரித்தானது என்ற எண்ணத்தில், பெண்களுக்கு ஸ்ரீமதி எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
மன்னராட்சிக் காலத் தாக்கத்தை ஒட்டி, பிற சொற்களுடன் கூட்டுச் சொல்லாகவும் தொடர் சொல்லாகவும் ஸ்ரீ பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, நாட்டியஸ்ரீ, சங்கீதஸ்ரீ போன்ற பட்டங்களைக் குறிப்பிடலாம். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்று தொடர்ந்து இரண்டு, மூன்று முறையும் பயன்படுத்தப்படுவதும் உண்டு. எடுத்துக்காட்டுக்கு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
பெயர்களின் முன்பாக ஸ்ரீ எனும் சொல் காணப்படுகிறது. உதாரணமாக, ஸ்ரீவித்யா, ஸ்ரீதர், ஸ்ரீராம், ஸ்ரீநிவாசன் போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். தற்போது, தமிழ்நாட்டில் பெயர்களின் பின்னாலும் ஸ்ரீ எனும் சொல் சேர்க்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, முத்துக்கமல ஸ்ரீ, ராக ஸ்ரீ, செல்வ ஸ்ரீ போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.
இடத்திற்கு முன்பாகவும் ஸ்ரீ எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஸ்ரீரங்கம், ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற ஊர்களையும், ஸ்ரீலங்கா எனும் நாட்டின் பெயரையும் குறிப்பிடலாம்.
சென்னையில் 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது, அரசின் அஞ்சல்களில் அனைவருக்கும் ’ஸ்ரீ’ எனும் அடைமொழிச் சொல்லைப் பயன்படுத்த வேண்டுமென்று ஆணையிடப்பட்டது. இது தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. 1940 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4 ஆம் நாளன்று, திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16 வது மாகாண மாநாட்டில், ’ஸ்ரீ’ எனும் வடமொழிச் சொல்லுக்கு மாற்றாக, தமிழில் ‘திரு’ எனும் சொல் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டிக் கொண்டது.
அதன் பிறகு, தமிழ்நாட்டில் ‘திரு’ எனும் சொல் மரியாதைக்குரிய சொல்லாகப் பயன்பாட்டுக்கு வந்தது. ஒருவரைக் கூடுதல் சிறப்புடன் அழைப்பதற்கு அல்லது எழுதுவதற்கு ‘உயர்திரு’ மற்றும் ‘திருமிகு’ எனும் சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. 'திரு' எனும் சொல் பொதுவாக, திருமணம் செய்து கொண்ட ஆண்களுக்கு மரியாதை அளிக்கும் சொல்லாகவேப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருமணமான பெண்களுக்கு, ‘திருமதி’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருமணமாகாதவர்களுக்கு, ஸ்ரீ எனும் வடமொழிச் சொல்லின் பொருளான ‘செல்வம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு, ஆண்களுக்கு, ‘செல்வன்’ எனும் சொல்லும், பெண்களுக்கு, ‘செல்வி’ எனும் சொல்லும் பயன்படுத்தப்படுகின்றன.
'திரு' என்னும் சொல்லை 'ஸ்ரீ' என்னும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மட்டுமே அனைத்து இடங்களிலும் கருதிவிட இயலாது. ஸ்ரீ என்னும் சொல், எழுத்துப் பயன்பாடு தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே திரு என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன. உதாரணமாக, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவிடைமருதூர், திருமயம் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
வைணவ இலக்கியங்களில் ‘திருவரங்கம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்த ஊர், பின்னரே ஸ்ரீரங்கம் என்று பெயர் மாற்றமாகியிருக்கிறது. இதே போன்று, முற்காலத்தில் தமிழில் ஏற்கனவே திரு என்னும் சொல் பயன்பாட்டிலிருந்த பல இடங்கள், தவறுதலாக ஸ்ரீ என்று மாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டன என்று சிலர் கருதுகின்றனர்.