ஜூலை 22 தேசிய மாம்பழம் தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த தினம் பற்றி மாம்பழம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் விற்பனை செய்யும் வியாபாரி களுக்கும் தெரியுமா? இந்த வருட விளைச்சல் விற்பனை எப்படி இருக்கிறது... என்பதைப் பற்றி சேலம் அயோத்தியா பட்டினம் அருகே உள்ள மாசி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாம்பழத் தோட்டம் வைத்திருக்கும் கந்தசாமி அவர்களிடம் கேட்டபோது,
“இந்த வருடம் மாம்பழம் வரத்தும் விளைச்சலும் விற்பனையும் அமோகம் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. அதிலும் மற்ற இடங்களில் எப்படியோ இங்கு சேலம் பொறுத்தவரை எப்போதும் இருக்கும் விளைச்சல் கடந்த இரு வருடங்களாக இல்லை என்றுதான் சொல்ல முடியும். என்னிடம் 200 மரங்கள் உள்ளது எழுபது வருடங்கள் முன் என் அப்பா காலத்தில் நட்ட மரம் கூட இன்னமும் பழங்கள் தருது. ஆனா இப்ப சமீப வருடங்களா இங்க மாம் பூக்களில் பூச்சித் தொல்லைகள் அதிகரித்துள்ளது. பூச்சிகள் தாக்குதலால் பூக்கள் பாதிப்படைகிறது. அடுத்து பருவம் தப்பிவந்த மழை. தென்மேற்கு பருவமழை ஜூனில் வரவேண்டிய மழை மார்ச் ஏப்ரலில் வந்ததால் விளைந்திருந்த காய்கள் மழை நீரினால் பாதிக்கப்பட்டு தரமற்ற பழங்களைத் தந்துள்ளது. தையில் பூ பூத்து சித்திரையில் காய்களை அறுக்கலாம். மூன்று மாதங்கள் தேவை காய்கள் பழங்களாக மாறி பழங்கள் அறுக்க. சேலத்தில் எங்கள் ஏரியாவான வரகம்பாடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மாமரங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் இந்த இரண்டு பிரச்சினைகளால் மாம்பழம் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. தரத்தில் குறைந்த மாம்பழங்களை வியாபாரிகள் கடைகளுக்குத் தர முடியாது என்பதால் ஜூஸ் போன்றவை செய்யும் நிறுவனங்களுக்குத் தந்து விடுவார்கள். மேலும் சேலம் சுற்றியுள்ள நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், வேப்பிலைப்பட்டி, மஞ்சவாடி, வெள்ளாளகுண்டம், தாரமங்கலம், தருமபுரி, போன்ற மற்ற இடங்களில் இருந்து பழங்கள் இங்கு விற்பனைக்கு வருவதால் உங்கள் கண்களுக்கு மாம்பழம் விற்பனை அமோகம் என்ற நிலை தெரிகிறது.
அதேபோல் இயற்கையாக பழுக்க வைக்கப்படும் முறை தற்சமயம் முற்றிலும் இல்லை எனலாம். ஆம் . இந்த அவசர உலகத்திற்கேற்ப அவசரமாக பழுக்க வைக்க கார்பைட் எனப்படும் ஒரு வித ராசாயனக்கற்களை வைத்து பழுக்க வைப்பார்கள். இந்தக் கல்லினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்டுகிறது என்பதனால் இந்தக் கல்லை தடை செய்துள்ளனர். அதற்குப் பதில் மெத்தலின் ஸ்ப்ரே அடிக்கப்பட்டு விரைவில் பழுக்காமல் வாங்கும் பழங்கள் அப்படியே இருப்பது அதனால்தான். இதன் சதவீதம் குறைவு என்பதால் இன்னும் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால் இதுவும் ஆரோக்கியமற்றது தான்.
அந்தக் காலத்தில் மல்கோவா, நடுச்சாலை இதெல்லாம் சேலத்தில் பிரசித்தி பெற்றது. ஆனால் அதெல்லாம் இப்போது குறைந்து அந்த இடத்தை இமாம்பசந்த் சேலம் பெங்களுரா பழங்கள் பிடித்துள்ளன. மொத்தத்தில் வருடந்தோறும் மாம்பழம் தினம் கொண்டாடினாலும் மாம்பழத்திற்கு பிரசித்திபெற்ற சேலம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் நிலை சுமார்தான் எனலாம் என்று முடித்தார்.
200 மரங்கள் இருந்தாலும் பூச்சிகள் பாதிப்பினால் மாம்பழங்கள் இன்றி வெளியில் இருந்து வாடிக்கையாளர் களுக்கு வாங்கித் தரும் நிலை இருப்பதாகவும் கூறுகிறார் கந்தசாமி.