Students Suicide  
கல்கி

அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலைத் தொடர்ந்தால், இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும்? இந்நிலையில் மாணவர்களின் தற்கொலை விகிதம் மற்றும் காரணத்தை அலசுகிறது இந்தப் பதிவு.

வேகமாக நகரும் இன்றைய காலகட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். தேர்வில் தோல்வி அடைந்தால், அதனைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவில்லை என்றாலும் சில இளைஞர்கள் தற்கொலை முடிவை எடுத்து விடுகின்றனர். நாளைய சமுதாயம் இளைஞர்கள் கையில் என்று அறிஞர்களும், முன்னோர்களும் சொல்லியிருக்கும் நிலையில், மாணவர்களின் இந்தத் தவறான முடிவுகள் அதிரிச்சியை ஏற்படுத்துகின்றன.

தேசிய குற்ற ஆவணப் பதிவேடு மூலம் கிடைத்தத் தகவல்களைப் பயன்படுத்தி ஐசி3 என்ற தொண்டு நிறுவனம், இந்தியாவில் தற்கொலை தொடர்பான ஆய்வை நடத்தியது. ஆய்வு முடிவில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இதன்படி இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் மாணவர்கள் தான் அதிகம் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது மாணவர்களின் தற்கொலையும் அதிகரித்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் மட்டுமல்ல. பிரச்சினைகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற அறியாமையும், பயமும் கூட.

ஆண்டுதோறும் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 2% அதிகரித்து வருகின்றது. 24 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 58.2 கோடியில் இருந்து, 58.1 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் இந்த இள வயதில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 6,654 இலிருந்து 13,044 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை விவசாயிகளின் தற்கொலைகளை விடவும் அதிகமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்வோரில் மூன்றில் ஒருவர் மாணவராக இருக்கிறார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஜார்க்கண்டில் 15% மற்றும் தமிழ்நாட்டில் 14% மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

15 முதல் 24 வயதுள்ள இளைஞர்களில் ஏழில் ஒருவர் ஆர்வமின்மை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக மிகவும் மோசமான மனநிலையுடன் இருக்கின்றனர். இவர்களில் 41% இளைஞர்கள் மட்டுமே மனநல சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர். மீதமிருப்பவர்களின் மனநிலை மேலும் மோசமாக வாய்ப்புள்ளது. இந்நிலையில், தற்கொலை செய்து கொள்பவர்களில் மாணவிகளை விடவும் மாணவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது.

அதிகளவில் இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆனால், மாணவர்களின் இந்த தற்கொலை எண்ணம் வருங்கால இந்தியாவை சிதைத்து விடும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை முடிவல்ல என்பதை இன்றைய இளம் தலைமுறையினர்கள் உணர்ந்தால் மட்டுமே, இந்த எண்ணிக்கை குறையும்.

உலகளவில் தற்கொலைகளைத் தடுப்பதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 10 ஆம் தேதி உலக தற்கொலைத் தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை செய்வது தீர்வாகாது. பிரச்சினை என்று ஒன்று இருந்தால், அதற்கான தீர்வும் நிச்சயமாக இருக்கும்.

தற்கொலை எண்ணம் தோன்றினால் பின்வரும் எண்களில் ஏதேனும் ஒன்றை அழைப்பதன் மூலம் உதவி மற்றும் ஆலோசனை பெறலாம்.

அகில இந்திய GOVT MH மறுவாழ்வு ஹெல்ப்லைன் - 1800-5990019

அகில இந்திய வந்தரேவாலா அறக்கட்டளை 9999 666 555

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-2464 0050

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT