கல்கி

  “அதெல்லாம் ஒரு சுகம்”

மயிலாடுதுறை ராஜசேகர்

திகாலை நாலரை மணிக்கு கைப்பேசியில் அலாரம் வைத்திருந்தான் அரவிந்தன். அப்பாவும் அம்மாவும் மன்னார்குடியிலிருந்து  ரயிலில் வருகிறார்கள். எழும்பூர் சென்று அவர்களை அழைத்து வரவேண்டும்.  ஆனால், அலாரம் ஒலிக்கு முன்னரே, அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. கண்களை கை விரல்களால் கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். அருகில் சாருமதியைக் காணவில்லை. “எழுந்துவிட்டாளா?” யோசித்தபடியே இணைந்திருந்த பாத்ரூமைப் பார்த்தான்.

           கதவைத் திறந்துகொண்டு வெளிப்பட்டாள் சாருமதி,

          “என்ன சாரு அதிசயமாயிருக்கு? நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் எழுந்திரிச்சே!   இந்த நாலு வருசத்துல ஒரு நாள்கூட ஆறு மணிக்கு முன்னாடி நீ எழுந்திரிச்சதே  இல்லியே!”

          “ ராத்திரியே ஒங்கக்கிட்ட ஒரு சேதி சொல்லணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். நீங்க சீக்கிரமாவே தூங்கிட்டிங்க. அதனால சொல்ல முடியலை; அதான் எனக்கு சரியாவே தூக்கம் வரலிங்க”

           “ராத்திரி முழுக்க தூக்கம் வராத அளவுக்கு, அப்படி என்ன சேதி வச்சிருக்கே?”

      “அது ஒண்ணுமில்லீங்க. இன்னிக்கி ஒங்க அப்பா, அம்மா வர்றாங்க இல்லியா? அவங்க வர்றதை நான் வேணாம்னு சொல்லலை;  புள்ள வீட்டுக்கு வரட்டும்;  பத்து நாளைக்கு தங்கி இருக்கட்டும்; நான் சமைச்சிப் போடுறேன்: சாப்பிட்டுட்டு, எங்காவது கோவில், குளம்னு போயி தரிசனம் பண்ணிட்டு வரட்டும்;  ஆனா, ஒங்க அப்பாக்கிட்ட தெளிவா சொல்லிடுங்க.   போனதடவை செஞ்ச மாதிரி, தெரு நாய்களுக்கெல்லாம் சோறு போடுறேன், பிஸ்கட் போடுறேன்னு ஆரம்பிச்சார்னா, அப்புறம் நடக்கிறதே வேற”

      “ஏய், என்னடி மிரட்டுற?”

      “ஆமாங்க, போன தடவையே நம்ம அடுக்குமாடி குடியிருப்புல உள்ளவங்களெல்லாம், உங்கப்பா செஞ்சதைப் பாத்துட்டு முகம் சுளிச்சாங்க. சிலபேரு அவருக்கிட்டயே  சொல்லிப்புட்டாங்க ” பெரியவரே! நீங்க தெரு நாய்களை வரவழைச்சி சோறு போட்டா, நீங்க ஊருக்கு போனதுக்குப் பிறகும், அதுங்க இங்கேயே சுத்திச்சுத்தி வரும். யாரும் சோறு போடலைன்னா, புள்ளைங்கள கடிச்சாலும் கடிக்கும். எதுக்கு இப்படியெல்லாம் செய்யுறீங்கண்ணு நேரடியாவே கேட்டுப்புட்டாங்க”

      “மாமாவும், அத்தையும் ஊருக்குப் போனதுக்கப்புறம், எல்லாருமா வந்து ஒரு தடவ புகார் பத்திரம் வாசிச்சுட்டுத்தான் போனாங்க. ‘இனிமே இப்படி நடக்காம பாத்துக்கிறேன்’னு சொல்லி அவங்கள சமாதானப்படுத்தி அனுப்பினேன்”

     “இதுவரைக்கும் மொட்டைமாடிக்குப் போயி  குருவிகளுக்கும், புறாக்களுக்கும் அரிசி போட்டுக்கிட்டு நிப்பாரு. காக்காய்க்கு சோறு போடுவாரு. ஆனா, போன தடவைதான் குப்பையில கொட்டுறதுக்கு நான் எடுத்துட்டு போன சோறு, குழம்பையெல்லாம் ஒரு தட்டுல கொட்டச் சொன்னார். அந்த தட்டை எடுத்துக்கிட்டுப் போயி தெரு நாய்களுக்கு போட ஆரம்பிச்சார். ஏழெட்டு நாய்கள் வந்துடுச்சி. “லொள்,லொள்”னு  சத்தம். ஒரே களேபரம் ஆயிடுச்சி”.

        “அப்பா எப்பவுமே அப்படித்தான். எந்த உணவுப்பொருளையும் வீணாக்க மாட்டார். பசியோடு இருக்கிற உயிரினங்களுக்கு அதைப்போட்டு பசி தீர்ப்பார். வீட்டுல ஆடு, மாடு, நாய், பூனை, கிளிகள்னு எவ்வளவோ வளர்க்கிறார். அவரைக் கண்டாலே அதுங்களுக்கு ஒரு குஷி வந்துடும். அவரு மேலே வந்து ஏறிக்கும். நாக்கால நக்கும். ஒடம்புல ஒரசும். எல்லா சேட்டைகளும் செய்யுங்க. சந்தோசமா அதுங்களைத் தடவிக்கொடுப்பார். அதுங்கக்கிட்ட பேசுவார்”

       “ஊருல அவரு எப்படி வேணா இருக்கட்டுங்க. ஆனா இங்கவந்தும் அப்படி செய்யுறது நல்லா இல்லீங்க. அவங்க ரெண்டுபேரும் வந்துட்டு நல்லபடியா திரும்பிப் போகிறவரைக்கும், சண்டை, சச்சரவு இல்லாம இருக்கணுமேன்னு இப்பவே எனக்கு மனசு “பக் பக்”குன்னு அடிச்சிக்குதுங்க”.

       “அப்படின்னா! அவங்க வர்றதே ஒனக்குப் புடிக்கலை; வர்றதுக்கு முன்னாடியே எப்படா கெளம்புவாங்கன்னு நினைக்கிறே? இதுவே ஒன்னோட அப்பா, அம்மாவா இருந்தா இப்படித்தான் நினைப்பியா?”

       “எங்கப்பா இப்படியெல்லாம் நாகரீகமில்லாம நடந்துக்க மாட்டாருங்க. அவரு சிட்டியில வாழுறவரு. எங்கே, எப்படி நடந்துக்கணும்னு இங்கிதம் தெரிஞ்சு நடந்துக்குவார். எங்கப்பாகூட ஒங்கப்பாவை ஒருநாளும் ‘கம்பேர்’ பண்ணாதீங்க”.

       “வேண்டாம் சாரு! நீ அதிகமா பேசுற. காலை நேரத்துல என்னோட கோபத்தைக் கிளராதே! இப்ப ஒன்னோட வாக்குவாதம் பண்ணிக்கிட்டு நின்னேன்னா, அப்பா, அம்மா  ரயில விட்டு இறங்கி, ‘மகனைக் காணலியே’ன்னு தவிச்சிக்கிட்டு நிப்பாங்க. நான் பொறப்படறேன். வந்து பேசிக்கிறேன்”

      “சரி சரி கிளம்புங்க” 

     “ஆறுமாசத்துக் கைக்குழந்தைப் பாருங்க. ‘புள்ளய காணலியே’ன்னு தவிப்பாங்களாம்” மனசுக்குள்  முணகிக் கொண்டாள் சாருமதி.   

      “தைமாசத்துப் பனி, ரொம்பவே குளிருது, எனக்கு சூடா ஒரு காப்பி குடு. முகம் கழுவிக்கிட்டு வந்துடுறேன்”

      சமையலறைக்குள் நுழைந்தாள் சாருமதி. காஸ் சிலிண்டர்  ரெகுலேட்டரைத் திறந்துவிட்டு, சின்ன அடுப்பைப் பற்றவைப்பதற்காக லைட்டரை அதன் அருகில் அழுத்தினாள். காஸ் வெளிவரும் சத்தம் “டப் டப்”டென்று விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது. ஆனால் அடுப்பு எரியவில்லை. “என்னடா இது?  என்னாச்சு இந்த அடுப்புக்கு?” என்று குழம்பியவாறே பெரிய அடுப்பைப் பற்ற வைத்தாள். அது சட்டென்று பற்றிக்கொண்டது. பால்சட்டியை அடுப்பில் வைத்து பாக்கெட் பாலை அதில் ஊற்றினாள். பால் பொங்கி வந்தவுடன் இறக்கி கீழே வைத்துவிட்டு, காப்பி பில்டரில் இருந்த டிகாக்சனை சுட வைத்தாள்.

           அதற்குள், “காப்பி தாயாரா சாரு?” என்றபடி சமையலறையில் நுழைந்தான் அரவிந்தன்.

          “சின்ன ‘பர்னர்’ எரிய மாட்டேங்குதுங்க. எரிஞ்சா, ஒரு அடுப்புல டிகாக்சனை சூடு பண்ணிட்டு, இன்னொரு அடுப்புல பாலைக் காய்ச்சி இருப்பேன். கொஞ்சம் பொறுங்க”

          சிறிது நேரத்தில் காப்பியைக் கலந்து அரவிந்தனிடம் நீட்டினாள்.

           காப்பியை ரசித்துப் பருகிய அரவிந்தன், கைப்பேசியில் வந்த அழைப்பைக் கண்டதும் பதறினான். “அப்பாதான் கூப்பிடுறாரு. அதுக்குள்ள எழும்பூர் வந்துட்டாங்களா?”

          “ஹலோ அப்பா! எங்கப்பா வந்துக்கிட்டு இருக்கீங்க?”

         “இப்பதான்யா தாம்பரம் வந்திருக்கோம். உன்னை எழுப்பி விடுறதுக்குத்தான் போன் பண்ணினேன்”

         “சரிப்பா! நான் கெளம்பிட்டேன். நீங்க வர்றதுக்குள்ள  நானும் வந்துடுவேன். நான் நடைமேடைக்கே வந்துடுறேன். நீங்க அங்கேயே நில்லுங்க.”

        “சாரு! நீ கதவைப்பூட்டிக்கிட்டு பத்திரமா இரு. இன்னும் ஒரு மணி நேரத்துல திரும்பி வந்துடுவேன்”. சொல்லிவிட்டு காரை நோக்கி நடந்தான். 

       அடுத்த ஒரு மணி நேரத்தில் பாரதி அவென்யூவில்  இருந்த அந்த  அடுக்குமாடி குடியிருப்பில் கார் உள்ளே நுழைந்தது. மொத்தம் இருபது வீடுகள்.  அனேகமாக எல்லார் வீட்டிலும் கார் இருந்தது. மழை வெயிலில் பாதிக்காதவாறு கார்கள் அனைத்துக்கும் “கவர்டு கார் பார்க்கிங்” வசதி இருந்தது.

       நடேசனும், பார்வதியும் காரைவிட்டு இறங்கியபின், காரை அவனுடைய காருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கினான் அரவிந்தன்.

      டிக்கியைத் திறந்து அப்பா, அம்மா எடுத்துவந்த பேக் மற்றும் கட்டைப் பைகளை எடுத்து வெளியில் வைத்தான். கட்டைப் பைகள் மிகவும் கனத்தன. “இவ்வளவு எடையுள்ள பைகளை இருவரும் எப்படித்தான் தூக்கி வந்தார்களோ?” என எண்ணிக்கொண்டான். ஒவ்வொருமுறை சென்னை வரும்போதும் இப்படித்தான் தூக்கி வருகிறார்கள். “எல்லாமே இங்கே கிடைக்கும்போது, ஏம்ப்பா இப்படி தூக்கி சுமக்கிறீர்கள்?” என்று சொல்லிப் பார்த்துவிட்டான். ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை.

     அன்போடும், ஆசையோடும் பத்துமாதம் அவனை வயிற்றில் சுமந்த அம்மாவுக்கும், ஆறு, ஏழு வயதுவரை அவனை  மார்மீதும், தோள்மீதும் சுமந்த அப்பாவுக்கும் இந்த பைகள் எல்லாம் சுமைகளாகவே தெரிவதில்லை. அன்பும், ஆசையும் ஒரு சேர இணையும்போது சுமைகள் எல்லாம் சுகமானவைகள் தானே?

     இரண்டு கைகளிலும் இரண்டு பைகளைத் தூக்கிக்கொண்டு கம்பீரமாக  வீட்டின் உள்ளே நுழைந்தார் நடேசன். பார்வதி தன்னால் தூக்கமுடிந்த இரண்டு “பேக்”குகளை எடுத்துக்கொண்டாள். மிச்சமிருந்த இரண்டு பைகளை அரவிந்தன் எடுத்துக்கொண்டு உள்ளே வந்தான்.

    “வாங்க அத்தை, வாங்க மாமா”

    “வர்றேம்மா சாரு! நல்லா இருக்கியா? இப்ப வாந்தியெல்லாம் இல்லாம இருக்குதா? என் பேரன் ரொம்ப  படுத்துறானாம்மா?” கேள்விகளுடன் உள்ளே நுழைந்தார் நடேசன்.

    “சாரு, நல்லா இருக்கியாப்பா?” ஒற்றைக் கேள்வியுடன் உள்ளே நுழைந்தார் பார்வதி.

     “நல்லா இருக்கேன் மாமா! இப்ப வாந்தியெல்லாம் கொறஞ்சிடுச்சி. அத்தை! ஒங்க பேரன் இப்பத்தான் ‘தான் உள்ளே இருப்ப’தை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்கான்”

     “அடுத்தமாசம் வளைகாப்பு சிறப்பா செய்யணும் அரவிந்தா. வளர்பிறையில ஒரு நல்ல நாள் பாத்துச்சொல்லுறேன். இப்பவே மன்னார்குடிக்கு ரயில் டிக்கட் புக் பண்ணிடு. காருல அவ்வளவு தொலைவு வர்றது சாருவுக்கு சிரமமா இருக்கும்”

      “சரிங்கப்பா! மொதல்ல வந்த களைப்பு தீர காப்பி குடிக்கிறிங்களா? சாரு அப்பா, அம்மாவுக்கு காப்பி போடு. அப்படியே எனக்கும் ஒன்னு சேர்த்துப்போடு”

     “என்னங்க, அந்த சின்ன பர்னர் சரியா எரியலைன்னு சொன்னேனில்ல; அத என்னான்னு பாருங்களேன்”

     “அது இல்லன்னா பெரிசுல போடு. அடுப்பு ரிப்பேர் பாக்கிறதுக்கு இதுதான் நேரமா? எவனாவது சர்வீஸ் சென்டருக்கு போன் பண்ணி வரச்சொல்றேன். வந்தவங்களுக்கு மொதல்ல காப்பிக்குடு” கொஞ்சம் கோபமாகவே பேசினான் அரவிந்தன்.

     “என்னம்மா பிரச்சினை? அடுப்பு சரியா எரியலையா?  நிப்பிள்ள அழுக்கு அடச்சிருக்கும். நிப்பிளை கழற்றி  சுத்தம் பண்ணிப்போட்டா, நல்லா எரியும். இதுக்கு எதுக்கு சர்வீஸ் சென்ட்டருக்கு போன் போடணும்? இந்தக்காலத்து புள்ளைங்களே இப்படித்தான் இருக்காங்க. எதற்கெடுத்தாலும் சர்வீஸ் சென்ட்டரைக் கூப்பிடுறாங்க. அவன் கேக்குற காசை கிரெடிட் கார்டுல தேய்ச்சி குடுத்துட்டு அடுத்த மாசம் பில் அதிகமாயிட்டுதுன்னு பொலம்புறாங்க” பேசிக்கொண்டே லுங்கிக்கு மாறினார் நடேசன்.

    “நகரத்து வாழ்க்கையில, எங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் இல்லப்பா!”

    “சரி சரி அரவிந்தா! ஒரு ஸ்குரூ டிரைவரும், கட்டிங் பிளேயரும் கொண்டா. அஞ்சு நிமிசத்துல அடுப்பை சரிபண்ணிடறேன்” என்றபடி சமையலறைக்குள் வந்தார்.

      “எதுக்குப்பா வந்ததும் வராததுமா இந்த வேலையெல்லாம்? மொதல்ல காப்பி குடிச்சிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க. அப்புறமா ஹீட்டர் போட்டு வைக்கிறேன். வெந்நீர்ல குளிங்க. உடம்பு வலியெல்லாம் போயிடும் சாப்பிட்டுட்டு அதுக்கப்புறமா இந்த அடுப்பு வேலையெல்லாம் பாத்துக்கலாம்”

      “அதுசரி, அதுவரைக்கும் ஒத்த அடுப்பை வச்சிக்கிட்டு எம்மருமகள கஷ்டப்படச் சொல்லுறியா?”

      “ஏங்க, மாமாதான் அஞ்சு நிமிஷத்துல சரி பண்ணிடுறேன்னு சொல்லுறாங்கள்ள. டூல்ஸ் பையை எடுத்துக்கிட்டு வாங்களேன்”

      “ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிவரை நாகரீகம் இல்லாதவரா, இங்கிதம் தெரியாதவரா இருந்த எங்கப்பா, இப்பமட்டும் நல்லவராயிட்டாரோ?” மனசுக்குள் மனைவியைக் கறுவிக்கொண்டே டூல்ஸ் பையை எடுத்து வந்தான் அரவிந்தன்.

       அடுப்பை கீழே இறக்கிவைத்து பர்னரைக் கழற்றிவிட்டு, நிப்பிளைக் கழற்றினார் நடேசன், இடுப்பில் அரைஞான் கயிற்றில் மாட்டி இருந்த ஊக்கை எடுத்து, நிப்பிளின் சிறு துவாரத்தை சுத்தம்செய்தார். துவாரத்தில் அடைத்திருந்த அழுக்கு ஊக்கு நுனியில் வந்தது. துவாரம் தெளிவாகத் தெரிந்தது. வாயில் வைத்து ஊதினார். காற்று மறுபக்கம் ‘புஸ்’ஸென்று வந்தது. மீண்டும் நிப்பிளை முடுக்கிவிட்டு, பர்னரையும் மாட்டினார். அடுப்பை மேடைமீது வைத்து லைட்டரை அழுத்தினார். அடுப்பு முன்பைவிட அதிக பரவலாக தீ ஜுவாலையை கக்கியது.

       அனைத்தையும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சாருமதி, மகிழ்ச்சியில் ஆயிரம்வாட் மின்விளக்காக பிரகாசித்தாள். “ரொம்ப தேங்க்ஸ் மாமா. எப்படிடா ஒத்த அடுப்போட சமாளிக்கிறதுன்னு பயந்தே போயிட்டேன். நல்ல சமயத்துல வந்து உதவி பண்ணுனீங்க. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மாமா.”

       மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் காப்பி போட்டாள் சாருமதி.

      அரவிந்தன் அலுவலகம் சென்றபின், நடேசனும், பார்வதியும் சிறிது நேரம் கண்ணயர்ந்தனர். சமையலறையில் மதிய உணவு சமைக்கும் வேலையில் மூழ்கி இருந்தாள் சாருமதி.

      அப்போது ஹாலில் இருந்த அவளது செல்போன் சிணுங்கியது.

      “யாரு கூப்பிடுறாங்க?” யோசனையுடன் அடுப்பை ‘சிம்’மில் வைத்துவிட்டு  ஹாலுக்குவந்து செல்போனை எடுத்தாள். அரவிந்தன் தான் அழைத்தான்.

      “ஹலோ என்னங்க! இப்பத்தானே ஆபீஸ் போனீங்க? அதுக்குள்ள என்ன அவசரம்?”

      “ஒன்னுமில்ல. அப்பாவைக்கூப்பிடேன். அவருக்கிட்ட அவசரமா கொஞ்சம் பேசணும்” அரவிந்தனின் குரலில் தெரிந்த பதற்றம், சாருமதியை உடனடியாக செயல்பட வைத்தது. அவசரமாக சென்று மாமனாரை எழுப்பி போனை அவரிடம் கொடுத்தாள்.

       “ஹலோ அப்பா! நீங்க உடனே கிளம்பி,  ராயப்பேட்டை ஜீ.ஹெச்சுக்கு வாங்க. ஓலா டாக்ஸி புக்பண்ணி நம்ம வீட்டுக்கு அனுப்பியிருக்கேன். இந்நேரம் வாசலுக்கு வந்திருக்கும்.  உடனே  புறப்படுங்க மத்ததெல்லாம் நேர்ல வந்ததும் சொல்லுறேன்.” வேறெந்த விவரமும் சொல்லாமல் போனை வைத்துவிட்டான் அரவிந்தன்.

        “என்னம்மா இது, இந்தப்புள்ள இப்படியிருக்கான்! யாருக்கு என்ன ஆச்சுன்னு எதுவுமே சொல்லாம, உடனே பொறப்பட்டு ராயப்பேட்டை ஜீ.ஹெச்சுக்கு வாங்கண்ணு சொல்லுறான். என்னன்னு போயி பார்த்துட்டு வர்ரேம்மா” பரபரவென்று  புறப்பட்டு டாக்ஸியில் ஏறினார் நடேசன்.

        மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்தான் அரவிந்தன். “அப்பா! உங்க போன் ‘சைலன்ட்’ல இருக்கா? உங்களத்தான் மொதல்ல கூப்பிட்டேன். நீங்க எடுக்கலை. அதனாலதான் சாருவைக் கூப்பிட்டு, உங்களிடம் போனை கொடுக்கச் சொன்னேன்”.

        “அது சரி யாருக்கு என்ன ஆச்சு? ஏன் அவசரமா வரச்சொன்னே?”

       “சசிக்கு ஆக்ஸிடெண்ட். டூவீலர்ல போயிருக்கான். வேகமா வந்த தண்ணி லாரிக்காரன் மோதிட்டான். நல்லவேளை, ஹெல்மெட் போட்டிருந்திருக்கான். அதனால உயிருக்கு ஆபத்தில்லை. வயித்துல பலமா அடிபட்டிருக்கு, உடனே ஆப்பரேஷன் செய்யணும்னு சொல்லுறாங்க. ரத்தம் குடுக்கணும்னு சொல்லுறாங்க. அதாம்ப்பா உங்கள வரச்சொல்லி போன் பண்ணினேன்”

       “அதுசரி, சம்பந்தி வந்துட்டாரா?”

       “அவங்க ரெண்டுபேரும் உள்ள இருக்காங்க. ரத்தம் குடுக்க ஆள் இல்லியேன்னு தவிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆஸ்பத்திரியில தற்சமயம் “டோனார்” எவரும் கைவசம் இல்லைன்னு சொல்லுறாங்க. சசிக்கு உங்க குரூப் “ஏபி பாசிட்டிவ்” தாம்ப்பா. எனக்கு சட்டுன்னு உங்க ஞாபகம் வந்துச்சி. நீங்க வருசத்துக்கு ரெண்டு தடவ முகம் தெரியாத யார் யாருக்கோ ரத்தம் குடுக்குறீங்க. உங்க மருமகளோட தம்பிக்கு குடுக்க மாட்டீங்களா? அதனால்தான் உங்கள உடனே வரச்சொன்னேன்”.

     “நல்ல காரியம் பண்ணினே அரவிந்தா! கண்டிப்பா குடுக்குறேம்ப்பா. அந்த பையன் ரொம்ப நல்லவனாச்சே! அவனுக்கா இப்படி ஒரு விபத்து நடக்கணும்? ரொம்ப ரத்தம் போயிடுச்சா?”

     “அதெல்லாம் எனக்குத் தெரியலைப்பா! சாலையில் விபத்து நடந்ததும் யாரோ ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணியிருக்காங்க. அதுக்குள்ள போலீஸ் வந்துட்டுதாம். இங்க கொண்டுவந்து அட்மிட் பண்ணியிருக்காங்க. மாமாவுக்கு போன் போனவுடன், அவரு என்னிடம் அழுதுக்கிட்டே சொன்னாரு. ஒடனே ஆபீசுக்கு  விடுப்பு சொல்லிட்டு வந்துட்டேன்”.

       “பாவம் சம்பந்தி! ஒரே பையனுக்கு என்ன ஆகுமோன்னு தவிச்சிக்கிட்டு இருப்பாரே! அவருக்கு ஆறுதல் சொல்லுவோம்.  அதுக்கு முன்னாடி  உள்ளே போயி “டாக்டர்களிடம்   ரத்தம் குடுக்க தயார்”னு சொல்லிட்டு வருவோம். அவங்க ஏற்பாடுகள் செய்யுறதுக்குள்ள, சம்பந்தியைப் பார்த்து ஆறுதல் சொல்லலாம்”

        இருவரும் மருத்துவமனையின் உள்ளே விரைந்தனர். தவிப்பின் உச்சத்தில் பெற்றவர்கள் இருவரும் கையைப் பிசைந்துகொண்டு நின்றனர். “யாரிடம் ரத்ததானம் கேட்பது? நண்பர்கள், உறவினர்கள் ஒவ்வொருவராக அழைத்துப் பேசி, நிலைமையைப் புரியவைத்து, அவர்களோ அவர்களுக்குத் தெரிந்த யாரோ ரத்தம் குடுக்கத்தயாரா? என வினவுவது இந்த நேரத்தில் சாத்தியமானதாகத் தெரியவில்லை. மருத்துவமனையிலேயே ஏற்பாடு செய்துவிட்டார்களானால், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம்.” என்றெண்ணியபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்  பரந்தாமன்.

       “சம்பந்தி பயப்படாதிங்க. உங்க பையனுக்கும் எனக்கும் ஒரே குருப் ரத்தந்தான். நான் ரத்தம் குடுக்குறேன். நிச்சயமா உங்க பையனைக் காப்பாத்திடலாம். பயப்படாம தைரியமா இருங்க.” பரந்தாமன் கைகளைப்பிடித்துக்கொண்டு ஆறுதல் கூறினார் நடேசன்.

      ரத்ததானம் கொடுத்த பின்னர் சிறிது ஓய்வெடுத்துவிட்டு, நடேசன்  வெளியே வந்தார். “அரவிந்தா! அதிர்ச்சி தரும் இந்த விபத்தைப் பற்றி சாருமதியிடம் சொல்லிவிடாதே! அந்தப் பெண்ணோட வயித்துல வளர்ற உயிருக்கு ஆபத்து வராம பாத்துக்கணும்”

      “நான் சொல்லலைப்பா. மாமாவும் அத்தையும் சொல்லிடாம இருக்கணும்”

      மளமளவென்று சிகிச்சைகள் நடந்தேறின. இரண்டு மணி நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்து ஐ.சி.யூ வில் அனுமதிக்கப்பட்டான் சசிதரன்.

       அப்போது அவரை நெருங்கிவந்து இறுகத் தழுவிக்கொண்டார்   பரந்தாமன். “என்புள்ளய பொழைக்க வச்சிட்டீங்க சம்பந்தி! உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை! நீங்கள் நடமாடும் தெய்வம். வாழும் வள்ளலார். ‘உங்களோட முப்பது வயசுலேருந்து வருசத்துக்கு ரெண்டு தடவை ரத்ததானம் செய்யுறீங்கன்’னு மாப்பிள்ளை இப்போதுதான் சொன்னார். நான் அதிசயித்துவிட்டேன். நாற்பது வருசமா எத்தனை உயிர்களைப் பிழைக்க வச்சிருப்பீங்க?  அனைத்து உயிர்களிடத்திலும்   நீங்கள்  காட்டும் அன்பு பிரமிக்க வைக்கிறது. உங்கள் வழி தனி வழி; அது அன்பு வழி” அவருடைய நா தழுதழுத்தது.

        “தெரு நாய்களுக்கு சோறு போட்டதற்காக, சம்பந்தியை ‘இங்கிதம் தெரியாதவர், நாகரீகமா  நடந்துக்க மாட்டார்’ என்றெல்லாம் முன்பு  ஒரு முறை தன் மகள் சாருமதியுடன் சேர்ந்துகொண்டு கேலி பேசியது அவரது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால், வெள்ளந்தியான அந்த கிராமத்து மனிதர்தான் இன்று தன் மகனை காப்பாற்றியுள்ளார் என்பதை நினைக்கும்போது தன்னுடைய எள்ளல் பேச்சுக்காக சம்பந்தியிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரினார் பரந்தாமன்.

        அப்போது, பார்வதியை துணைக்கு அழைத்துக்கொண்டு, டாக்ஸியில் வந்திறங்கினாள் சாருமதி. “ஒங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை மாமா! என் தம்பிக்கு நீங்க ரத்தம்  குடுத்து, எங்க வம்சத்தையே வாழவச்சிருக்கீங்க. வாலிபமா இருக்கிறவங்களே ரத்தம் குடுக்கத் தயங்குறாங்க. ஆனா, எழுபது வயசுலயும் நீங்க ரத்தம் குடுத்து இருக்கிறதை நெனச்சா பிரமிப்பா இருக்கு.”  குரல் தழுதழுக்க, பொது இடம் என்றும் பாராமல் நடேசனின் கால்களைத் தொட்டு வணங்கினாள் சாருமதி.

      “அடடே! என்னம்மா இதெல்லாம். நீயே நாலு வருசம் கழிச்சி  இப்பதான் உண்டாயிருக்க. ஒன்னோட ஒடம்ப ஜாக்கிரதையா பாத்துக்க”

      “நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை மாமா! நீங்க ரெண்டுபேரும் இனிமே ஊருக்கெல்லாம் போகவேண்டாம். எங்களுடனேயே இருந்துடுங்க. இது என்னோட அன்பு வேண்டுகோள்” பார்வதியின் கைகளைப் பற்றிக்கொண்டாள் சாருமதி.

       “என்னம்மா நீ இப்படியெல்லாம் சொல்லி எங்கள சங்கடப்படுத்துற? நீங்க சின்னஞ்சிறிசுங்க மகிழ்ச்சியா இருக்கிறச்ச, நாங்க எதுக்கும்மா நந்தி மாதிரி குறுக்கால? அதெல்லாம் ஒன்னும் வேணாம். நாங்க இங்க தங்கிட்டுப் போற பத்து நாளுக்குள்ளயே எங்களோட வளர்ப்புகளெல்லாம் தவிச்சுப்போயி நிக்குங்க. நாங்க போனோம்னா, ஒன்னு மேலவந்து தாவும், ஒன்னு நாக்கால நக்கும், ஒன்னு ஒடம்புல வந்து ஒரசும். அதெல்லாம் ஒரு சுகம்.அதை அனுபவிச்சாத்தான் உணர முடியும்.” சொல்லும்போதே நடேசனின் கண்களை கண்ணீர் நிறைத்தது.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT