Kalki Magazine 1955
Kalki Magazine 1955 ஓவியர் மணியம்
கல்கி

காவி நிறத்தில் வள்ளுவர்: மீண்டும் வைரலாகும் 'கல்கி' அட்டை படத்தின் பின்னணி தெரியுமா?

கல்கி டெஸ்க்

காவி நிறத்தில் வள்ளுவர் மீண்டும் வைரலாகிவரும் ’கல்கி’ அட்டை படம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், 1955ம் ஆண்டு ஜுன் 5 தேதியிட்ட ‘கல்கி’ இதழில் ஓவியர் மணியம் வரைந்த வள்ளுவர் படம் மீன்டும் வைரலாகி உள்ளது. இந்த அட்டைப்படத்தின் பின்னணியும் அதற்கு எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய விளக்க கட்டுரையும் இங்கே ‘கல்கி’ களஞ்சியத்தில் இருந்து உங்களுக்காக..

வான்புகழ் கொண்ட வள்ளுவர் திருநாள்

இன்று, வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்.

தமிழ் நாட்டிலும், இலங்கையிலும், தமிழர் வாழும் தொலை தூரங்களிலும்கூட வள்ளுவர் திருநாள் கொண்டாடுவது கேட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

நம்மில் சிலர் வள்ளுவர் திருநாளை என்றைக்குக் கொண்டாட வேண்டும் என்ற ஆராய்ச்சியில் முனைந்து, வேறு சில தினங்களிலும் கொண்டாடுகிறார்கள் என்று தெரிகிறது. ஆண்டு முழுதும் நாள்தோறும் கணம்தோறும் நெஞ்சகத்தில் வைத்துப் பூஜித்துப் பின்பற்ற வேண்டிய ஒரு மேதையின் தினத்தை, வருஷம் முந்நூற்று அறுபத்தைந்து நாளில் எந்த நாளில் கொண்டாடினாலும் நமக்கு மகிழ்ச்சியே என்றாலும்,

நாடு முழுதும் ஒருமித்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் திருநாள் கொண்டாடுவது நலம், மகா கவிஞர் ஒருவருடைய நினைவுக்கு உகந்த முறையில் விழாவும் மகத்தாகக் கொண்டாடப்படுவது நம்முடைய கடமையாகும். ஆனால் விழாக்கள் கொண்டாடுவதோடு நின்றுவிடாமல் வாழ்க்கைக்கு உபதேசிக்கப்பட்ட அறமாக அவர் வாக்கை எண்ணி நடக்கவேண்டும் என்பதே மிகவும் முக்கியம்.

திருவள்ளுவர் ஒரு ஞானி. கற்ற கலைகளும், கல்லாத பெருங் கலைகளும் அவருடைய வாக்கில் சன்னதமாகும். வெறும் ஆராய்ச்சி அறிவாக மட்டும் இல்லாமல், காலத்தையும் இடத்தையும் மொழி வரம்பையும் கடந்து நின்று, அகில உலக நிலையிலே உலக மக்கள் அனைவருக்கும் எக்காலத்துக்கும் பொருந்திய முறையில் அறிவுச் செல்வத்தை வழங்கியுள்ள மகா புருஷர் திருவள்ளுவர். அவருடைய திருக்குறள் மாண்பு நிரம்பிய நூல்.

தமிழ் நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்தப் பெரியார், எல்லா சமயத்தினருக்கும் ஒப்ப அமைந்த நீதி முடிவுகளை உள்ளத்திலே தேக்கி உணர்வு கண்டார். தமிழ் நாட்டில் எத்தனையோ நூற்றாண்டுகளாகக் குரு பரம்பரை முறையில் வழங்கப்பட்டு வரும் ஞான இரகசியத்தை அறியப் பெற்று, அந்த ஞான நோக்கின் துணை கொண்டு உறுதிப் பொருளைப் பாடினார்.

சிவ நேசச் செல்வர்கள் அவரைத் 'திருவள்ளுவ நாயனார்' என்று கொண்டு வழிபட்டாலும், உலகின் எல்லாச் சமயத்தினரும் அவரைத் தம் தம் சமய குருவாகக் கொள்ளத்தக்க வாய்ப்போடு அமைந்திருக்கிறது அவருடைய தமிழ் மறை. இதனால் சில சமயத்தினர் வள்ளுவரைத் தம் சமயத்தினரே என்றுகூட வாதாடுகிறார்கள்.

தமிழ் நாட்டுப் பெரும் புலவர்கள் பலரும், தங்கள் நூல்களில் வள்ளுவரை மேற்கோளாக எடுத்துச் சொல்லும் போது "... என்று அறம் கூறிற்று" என வள்ளுவர் வாக்கை "அறம் " என்ற அருவப் பெயராலேயே குறிப்பிடுகின்றனர். கம்பரைப் போன்ற மகா கவிஞருடைய வாக்கிலும் வள்ளுவரின் மொழிகள் அங்கங்கே பொதியப்பட்டிருப்பதைக் காணலாம்.

இலைத்த வெறும் நீதி வாசகமாக இராமல், எத்தகையோனும் வாழ்க்கையில் ஏற்று நடத்தும் வகையான உபதேசப் பொருளை உன்னதமான கவிதையிலே செவ்விய சொல்லில் நுட்பமாக ஆண்டு கொடுத்ததே இதன் கவர்ச்சிக்குக் காரணம்.

திருக்குறளின் முதலாவது சிறப்பு அதனுடைய வடிவழகு, இரண்டு வரிக்குள் ஒரு சிலையைச் செதுக்கி நிறுத்தின மாதிரி ஒரு கருத்தை அமைத்துக் கொடுப்பது நுட்பமான ஒரு சிற்ப முறை. இந்தக் கலையை நின்று நின்று நினைந்து ஆனந்த மடைந்து கொண்டேயிருக்கலாம். ஒரு குறளை எடுத்துக் கொண்டு அதைத் திரும்ப திருப்ப ஓதிப் பார்த்தால் இந்த வடிவ நுட்பம் புலனானும்.

சொல்லழகும், இசைப் பண்பும் மட்டும் இருக்கும் கவிதையை, பிற பாஷைகளிலே மொழிபெயர்த்து அதன் அழகு முழுவதையும் உணர்த்துவது சாத்தியமாகாது. வள்ளுவர் வாக்கின் சிறப்பு அதன் வடிவத்தோடு, அதன் கருத்திலேயே உள்ள ஆழமும் அந்தக் கருத்தை வெளியிடும் விதத்தில் உள்ள உருவமும் ஆகும்.

இது காரணமாகவே திருக்குறள் பிறபாஷைகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு அன்னியர்களும் ஓரளவு அனுபவிக்கக்கூடிய அரிய இலக்கியமாக நின்று நிலவுகிறது. கருத்தாழம் நிரம்பியிருப்பதால், வடிவழகைப் பெயர்த்துத் தர முடியாவிட்டாலும் திருக்குறளின் அன்னிய பாஷை மொழி பெயர்ப்புக்கள் உயர்ந்த இலக்கியமாக இருக்கின்றன.

"எல்லாப் பொருளும்

இதன்பால் உள:இதன்பால் இல்லாத எப்பொருளும்

இல்லையால்"

என்று மதுரைத் தமிழ்நாகனார் என்னும் புலவர் ஒரே உத்சாகமாகப் பாடுகிறார் இந்தச்சிறப்பை!

இந்தக் காலத்தில் திருக்குறளைப் பலரும் படிக்கிறார்கள். சொற்கள் சுருக்கமாக இருப்பதால், சொல்லுவதற்கும் நினைவு வைத்துக் கொள்ளுவதற்கும் எளிதாக இருக்கிறது. ஆனால் எனிமைக்குள்ளே நிற்கும் பொருளோ!

பாபநாசத்தில் பாண தீர்த்தம் என்று உண்டு, கரையில் நின்று பார்த்தால், தண்ணீர் தெள்ளத் தெளிந்து நின்று அடித்தளத்தின் மணல் மேலே தெரியும். ஆழமே இல்லாதது போலத் தோன்றும், இறங்கிப் பார்த்தால் தான் புரியும். இறங்க இறங்க உள்ளே போய்க் கொண்டே யிருக்கும், அதன் ஆழம்!

ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி

வேதப் பொருளாய் மிகவிளங்கி-தீதற்றோர்

உள்ளுதொ(று) உள்ளுதொ(று)

உள்ளம் உருக்குமே

வள்ளுவர் வாய்மொழி

மாண்பு!

வாழ்க்கைக்கு அறிவு மட்டும் போதாது. அறிவுடன் பக்தியும் இருந்தாலொழிய, அறிவு பயன்படாது. பக்தியும் பயமும் அன்பும் கலந்து ஏற்படும் மனநிலையைத்தான் 'பயபக்தி' என்று நம்முடைய பெரியோர்கள் சொல்லுகிறார்கள், ஆண்டவனை மனத்தில் கொண்டு அவன் திருவடியில் பயபக்தி செலுத்த வேண் டும். பழகப்பழக அந்தப்பயம் அன்பின் வடிவம் எடுத்துக் கொள்ளும். ஆண்டவனை மறந்தா லும், அதாவது பரம்பொருளை மனத்தில் உரு வாக்கிக் கொள்ளும் சக்தி நமக்கு இல்லாமற் போனாலும், புத்தர் அல்லது ஞான சம்பந்தர், மாணிக்க வாசகர், நம்மாழ்வார் அல்லது திரு வள்ளுவர் என்று ஒரு குருநாதனைக் கருத்தில் நிலவச் செய்து பய பக்தி செலுத்த வேண்டும். பக்தி இல்லாத அறிவு வெற்று அறிவே யாகும். அது பயன் படாது. வியாசங்கள் எழுதப் பயன்படுமே தவிரச் சீலம் தராது. உயிருக்குத் துணையாகாது.

"வேதத்தைத் திரும்பத் திரும்ப ஓதி இந்த ஆத்மாவை அடைய முடியாது. படிப்பதால் உண்டான அறிவைக் கொண்டு ஆத்ம தரி சனம் பெறமுடியாது. பண்டிதர்கள் சொல்லக் கேட்டும் அடைய முடியாது. ஆத்ம ஞானம் வேண்டுமென்று தன் உள்ளத்தில் விருப்பம் பொங்குகி றவனே, ஆத்மாவைக் காணப் பெறு வான். அத்தகைய உள்ளம் கொண்டவனுக் குத்தான் அப்பொருளும் தன் உள்ளத்தைக் காட்டும்" என்பது உபநிஷத்து வாக்கு

"ந அபயம் ஆத்மா" என்கிற மந்திரம். தமிழ் நாட்டில் உயிருக்குத் துணையாக நிற்கிற சமயங்களில் கூறப்படும் அத்தனை உறுதிப் பொருளும் திருக்குறளில் காணலாம். வியாச மதம், ஜைமினி மதம், பதஞ்சலி மதம், கபில மதம், கணாத மதம், அக்ஷ்பாத மதம் என்றும் இன்னும் பலவாறாகவும் ஆறு சமயங்கள் தமிழ் நூல்களில் கூறப் படுகின்றன. இவையெல்லாம் ஒன்றுக் கொன்று முரண்படுவதாகத் தோன்றினாலும் வள்ளுவ குருநாதனும், அந்த குரு நாதன் குறளில் காட்டுகிற ஒற்றுமையும், எல்லாருக்கும் நன்றாக இசைந்த ஒரு பக்தி மார்க்கமாகும்.

இதை மனத்தில் கொண்டே கல்லாடர் என்ற பெரும் புலவர் திருக்குறளை வியந்து பாடினார். திருவள்ளுவர் திருநாளாகிய இன்று கல்லாடர் வாக்கைக் கருத்தில் கொண்டு வள்ளுவர் நாமத்தை வாழ்த்துவோமாக!

ஒன்றே பொருள்ளனின்

வேறுஎன்ப; வேறுஎனின் அன்றுஎன்ப ஆறு

சமயத்தார் -நன்றென எப்பா லவரும்

இயைபவே, வள்ளுவனார்

முப்பால் மொழிந்த மொழி

அட்டைப்பட விளக்கம்

ஒரு குறள் மலர்

வெள்ளத் தனைய மலர் நீட்டம்; மாந்தர்தம் உள்ளத் தனைய(து) உயர்வு

தடாகத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது. தண்ணீருக்குள் அதன் தண்டு வளர்ந்து மலரைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதன் நீளம் தண்ணீரின் ஆழத்தைப் பொறுத்தது. எத்தனை அடி ஆழம் இருக்கிறதோ அத்தனைக்குத் தண்டு வளர்ந்து மலரைத் தாங்குகிறது.

மனித உள்ளத்தின் மலர்ச்சியும், அந்த மலர்ச்சியைத் தாங்கி நிற்கும் உள்ளப் பண்பின் ஆழமும் இது போலத்தான் என்கிறார் குறளாசிரியர், வெள்ளத்தின் ஆழத்துக்குத் தக்கபடி அமைகிறது, மலரின் நீளம். அவரவர் உள்ளப் பண்புக்குத் தக்கபடி அமைகிறது மனிதர்களின் உயர்வு.

Kalki Magazine 1955

வள்ளுவருடைய இதயத் தடாகத்தில் மலர்ந்த இந்த அற்புதமான குறள் மலரை மூவர்ணத்திலே இவ்விதழ் அட்டைச் சித்திரமாகச் சித்திரித்திருக்கிறார் நமது ஓவியர் மணியம்.

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து… 8 பேர் பலி!

தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

குழந்தைகளின் தனித்திறமையை வளர்த்தெடுப்பது எப்படி?

SCROLL FOR NEXT