கல்கி

டீக்கடைக்காரரைத் தேடிய கருணாநிதி! | கலைஞர் 100

கல்கி டெஸ்க்

கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.

கலைஞரது 94வது பிறந்த நாளை ஒட்டி, 2017 ஜூன் 11 இதழ் கல்கியில் “கலைஞர் 94 மு க வரிகள்” என்ற தலைப்பில் ஓர் சிறப்புக் கட்டுரை வெளியானது. பத்திரிகையாளர் இரா. சரவணன் எழுதிய அந்த சுவாரசியமான கட்டுரையின் முதல் பகுதி இதோ:

டீக்கடைக்காரரைத் தேடிய கருணாநிதி!

“சட்டமன்றத் துறை, நீதித் துறை, நிர்வாகத் துறை, ஊடகத் துறை ஆகிய நான்கு தூண்களே மக்களாட்சி என்னும் மணிமண்டபத்தைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. சோதனைகளில் வென்று, புடம்போட்ட பொன்னாக மிளிர வேண்டிய அந்தத் தூண்கள் இப்போது துருப்பிடிக்கத் தொடங்கிவிட்டன.

மக்களாட்சிக்கு விரோதமான சக்திகள் அரசியல் கட்டமைப்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி, உருக்குலைத்து வருகின்றன. இதனைச் சரியாக்க நம் இளைஞர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்ய உறுதி மேற்கொள்ள வேண்டும்!” - கடந்த வருட 93-வது பிறந்த நாளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட பிறந்த நாள் அறிக்கை இது. உலகத்தின் எந்த அரசியல் கட்சித் தலைவரும் தமது பிறந்த நாளில் இப்படியொரு அறிக்கை வெளியிட்டு இருக்க மாட்டார்கள்.

காலக் கணிதம் கலைஞர்!

“சென்ற பிறந்த நாளில் கலைஞர் சொன்னவை எல்லாம் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன. சட்டமன்ற அக்கப்போர், நீதித் துறையில் தலையீடு, நிர்வாகத் துறையில் குளறுபடி, ஊடகத் துறையில் பாரபட்சம் என நான்கு தூண்களும் சீர்கெட்டுக் கிடக்கின்றன. அதேநேரம் ஜல்லிக்கட்டு தொடங்கி விவசாயப் போராட்டங்கள் வரை இளைஞர்கள் வீதிக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். எதையும் சரி செய்யும் சக்தி இனி இளைஞர்களின் கையில்தான் என கலைஞர் எழுதியதும் பலிக்கத் தொடங்கி இருக்கிறது. கலைஞர் ஒரு காலக் கணிதம் என்பதற்கான சாட்சி இது!” என்கிறார் தி.மு.க.வின் சீனியர் நிர்வாகி ஒருவர்.

எழுத்திலும் பேச்சிலும் கருணாநிதியை எவரும் அடித்துக்கொள்ள முடியாது. மிக இக்கட்டான நேரங்களில் கூட சிலேடையாய்ப் பேசி அருகில் இருப்பவர்களை அசரடிப்பது கருணாநிதியின் வழக்கம். எழுத்தும் பேச்சும் கருணாநிதியின் இரு கண்கள். ஞாபக சக்தியும் நன்றி மறக்காத குணமும் கருணாநிதியின் இரு தூண்கள். ‘டைமிங்’ பதிலடியும் காமெடியும் கருணாநிதிக்குக் கைவந்த கலை.

வாயடைக்க வைத்த உஷார்!

கருணாநிதி முதல்வராக இருந்தபோது திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் கிராமத்தில் 4,150 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் விழா ஏற்பாடானது. விழாவில் பேசிய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ், “ஏழைகளுக்கு நிலம் வழங்கி இருக்கிறார் கலைஞர். ஆனால், மன்மதன் என்கிற ஏழை விவசாயிக்கு நிலம் கிடைக்கவில்லை” என மேடையிலேயே புகார் வாசித்தார். உடனே எழுந்த கருணாநிதி, “விவசாயி மன்மதனுக்கு நிலம் வழங்கப்பட்டு இருக்கிறது. மன்மதன் நிலம் வாங்கியது ரதிக்குத் தெரியாமல் இருக்கலாம். செல்வராஜுக்குத் தெரியாமல் இருக்கலாமா?” எனச் சொல்ல விக்கித்துப்போனார் செல்வராஜ்.

விழாவுக்கு வருவதற்கு முன்னரே எதிர்க்கட்சியினர் என்ன பேசப்போகிறார்கள், அவர்களுடைய மனக்குறை என்ன என்பதை அறிந்து, மன்மதன் என்கிற விவசாயிக்கு நிலம் வழங்கப்படாததை விசாரித்து, அதிகாரிகள் மூலமாக அந்த விவசாயிக்குப் பட்டா வழங்கிய பிறகே விழாவுக்கு வந்திருக்கிறார் கருணாநிதி. எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் கருணாநிதி எவ்வளவு உஷாரானவர் என்பதற்கான உதாரணம் இது.

வார்த்தை நயம்!

துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்ட நேரம். ‘முதல்வராக ஸ்டாலினையே நியமிக்கலாமே’ என சில மீடியாக்கள் எழுதி வந்தன. உடனே அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக கருணாநிதி சொன்னார்: “எனக்குத் துணையாக இருக்கிற முதல் அமைச்சர் இவர். அதனால்தான் துணை முதல் அமைச்சர்.”

தென்னன் பாசம்!

ஒரு முறை திருக்குவளையில் உள்ள தனது வீட்டுக்குப் போனார் கலைஞர். அப்போது அவர் நண்பர் தென்னனுக்கு உடல் நிலை சரியில்லாததால், தென்னனின் மகன் திருக்குவளைக்கு அனுப்பப்பட்டு இருந்தார். திருக்குவளை வீட்டைச் சுற்றிப் பார்த்த கலைஞருக்கு அங்கு வைக்கப்பட்ட மரம் செடி கொடிகளைச் சுற்றிக் காட்டியபடி பேசினார் தென்னனின் மகன். ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, “இது தென்னம்பிள்ளை’ என்றார். உடனே கலைஞர், “தென்னம்பிள்ளையைச் சுட்டிக்காட்டுவது தென்னன் பிள்ளை!” எனச் சொல்ல, அசந்துபோனார்கள் சூழ்ந்து நின்றவர்கள்.

டீக்கடைக்காரரைத் தேடிய கருணாநிதி!

2006 தேர்தலின்போது பிரபல வார இதழ் ஒன்றில் தேர்தல் சர்வே வெளியிட்டார்கள். அப்போது திருவாரூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள டீக்கடைக்காரர் அசோகன் என்பவர், “தி.மு.க.வில் பணக்காரங்களுக்குத்தான் பதவி. ஏழைகளை மதிக்கிறதே இல்லை” என கருத்து சொல்லி இருந்ததை அதில் வெளியிட்டு இருந்தார்கள். அதைப் படித்த கருணாநிதி காலை 4:30 மணிக்கு அப்போதைய நாகப்பட்டினம் தி.மு.க. மாவட்டச் செயலாளரான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு போன் செய்திருக்கிறார். டீக்கடைக்காரரின் மன வருத்தம், வார இதழில் வந்திருக்கும் செய்தியைச் சொல்லி, உடனே அவரைப் போய்ச் சந்திக்கச் சொல்லி இருக்கிறார். விஜயன் அந்த டீக்கடைக்காரரைச் சந்தித்து, “தலைவர் உன்னோடு போனில் பேச விரும்புகிறார்” எனச் சொல்ல, பயந்துபோய் ஓட்டம் பிடித்துவிட்டார் டீக்கடைக்காரர். கட்சியைப் பற்றிப் புகார் கூறியவர் ஒரு டீக்கடைக்காரராக இருந்தாலும், அவருடைய கருத்தை மதித்து அவரிடம் போனில் பேச விரும்பிய கருணாநிதியின் மனதை இன்றைக்கும் சொல்லிச் சிலிர்க்கிறார்கள் திருப்பத்தூர்வாசிகள்.

மருத்துவமனையிலும் வார்த்தை ஜாலம்!

சமீபத்தில் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அட்மிட்டானபோது மருத்துவர் அவருக்கு நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசி இருக்கிறார்கள். கிரிக்கெட் ஆர்வலரான கருணாநிதி அப்போது அடித்த நச் கமெண்ட் அங்கிருந்த டாக்டர்கள், நர்ஸ்கள் என அனைவரையுமே அசந்து போனார்கள். கலைஞர் என்ன சொன்னார்? நாளை பார்க்கலாம்.

கல்கி 01.06.2017 இதழிலிருந்து

தொகுப்பு: எஸ். சந்திர மௌலி

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT