எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை நாடகமேடைக்கு வந்திருக்கிறது. கர்நாடக இசைக்கலைஞரான அவர் அந்த காலத்தில் சினிமாவிலும் நடித்திருக்கிறார். உச்சபட்ச புகழை எட்டியவர். அவரது வாழ்க்கை நிகழ்வுகளுக்கிடையே ரசமான பாடல்களையும் இழைத்து மேடையேற்றினால் எல்லோரையும் கவரக்கூடியதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த நாடகம் மிகப்பெரிய வெற்றியடையக்கூடும் என்பதை அனுமானிக்க முடிகிறது.
பாம்பே ஞானம் இயக்கியிருக்கும் இந்த நாடகத்தில் ஏற்கனவே வசனங்களையும் பாடல்களையும் பதிவு செய்து அதற்கேற்ப மேடையில் உதடுகளை அசைக்கும் உத்தி கையாளப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஒரு மேடை நாடகத்திற்கான ஜீவனுள்ள அம்சம் தொழில்நுட்பத்தில் புதைந்து போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சமுதாயப் பின்னணியில் நிகழும் நிகழ்வுகள் வரலாற்று உணர்வுடன் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
சதாசிவத்தின் தாய் பத்திரிகை வாசிக்கும் காட்சியும், சண்முகவடிவு போன்ற பாத்திரங்கள் ஆங்காங்கே உச்சரிக்கும் ஆங்கில வார்த்தைகளும் நெருடலாக இருக்கின்றன.
ஆறு வயது சுப்புலட்சுமி துடுக்குத்தனமாகப் பேசுவதும், அண்ணன் சக்திவேல் அவளை வாடி போடி என்று அழைப்பதும், கையில் தூக்கிக்கொண்டு சுழற்றுவதும் அந்த காலத்துக்கும் சமுதாயத்துக்கும் முற்றிலும் முரணானது.
சுப்புலட்சுமியை சதாசிவம் சந்தித்து பேட்டி எடுக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்து புகைப்படம் எடுப்பதும் இன்றைய நவீன மீடியா பெண்களை கையாளும் விதத்துக்கு நிகரான மலினம்.
ஒரு காட்சியில் சகுந்தலை படப்பாடலை கிராமபோனில் கேட்டுக் கொண்டிருக்கிறார் சுப்புலட்சுமி. அப்போது அங்கு வரும் சதாசிவம் அவளைக் கடிந்து கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்த காட்சிகளும் ராஜாஜி பேசும் வசனமும் ஆட்சேபணைக்குரியது.
மிக உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்களை இதுபோல் கொச்சைப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
சுப்புலட்சுமி தன் வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தார் என்ற கருத்துக்கு வலிமை சேர்க்க சதாசிவத்தின் தாய் மங்களம்மாவை கொடுமைக்காரராக சித்தரித்திருக்கிறார்கள். அவரது கடுஞ்சொற்கள் அதிர்ச்சியளிக்கின்றன. நாடகத்தை சுவாரசியப்படுத்துவதற்காக வரலாற்றுப் பாத்திரங்களை அவர்களின் குணத்திற்கு நேர்விரோதமாக வடிவமைக்கலாமா?
சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் பெருமைமிகு தருணங்களை சித்தரிக்கிறது நாடகம். மகாத்மா காந்திக்கு முன்பு அவர் பாடுவது, சரோஜினி நாயுடுவும் நேருவும் அவரைப் பாராட்டுவது போன்ற காட்சிகள் பார்வையாளர்களின் தேசப்பற்றையும், இசை ஆர்வத்தையும் தூண்டிவிட்டு உருகச் செய்கின்றன.
சுப்புலட்சுமியின் தனித்தன்மைதான் என்ன? அது இந்த நாடகத்தில் பளிச்சிடவில்லையா என்று கேட்டால் இறுதிக் காட்சியில் ஓரளவு விவாதிக்கப்படுகிறது. ஆனால் அது சுப்புலட்சுமியின் மகத்துவமாக இல்லாமல் பரமாச்சாரியாரின் மகத்துவமாகத்தான் தொனிக்கிறது.
தன் சொத்துக்களையெல்லாம் இழந்து எளிய வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட சுப்புலட்சுமிக்கு உதவ நினைக்கிறார் காஞ்சி பெரியவர். திருப்பதி தேவஸ்தான நிர்வாகியிடம் தன் எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார். அப்போது அவர் சொல்லும் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை.
”சுப்புலட்சுமிக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்து எதை செய்தாலும் அவள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாள்” என்கிறார் அவர். இந்த ஒரு வசனத்தில்தான் நாடகத்தின் முழு கவனக்குவிப்பும் இருந்திருக்க வேண்டும். ஒருவர், தான் பெற்ற செல்வத்தையெல்லாம் தானம் செய்துவிட்டு பிறகு கஷ்டநிலைக்கு வந்தபோதும் தனக்கென்று செய்யப்படும் எந்த உதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது எத்தகைய மேன்மையான குணம்!
பணம் முக்கியமல்ல என்று கருதும் இந்த மேன்மையான குணமும், தனது இசைப்பயணத்தில் உயர்ந்த நிலையை அடைய சுப்புலட்சுமி உழைத்த உழைப்பும் மையப்படுத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஒரு தனிமனிதனின் வாழ்க்கை என்பது அவரவர் தேர்வு. அவரவர் தேர்வு செய்த வாழ்க்கையை வாழ அவர்களுக்கு உரிமை உண்டு. அதைப் பற்றி பொதுத் தளத்தில் விவாதிப்பது ஒருவிதமான உரிமை மீறல் அல்லவா!
சுப்புலட்சுமி பாடி பிரபலப்படுத்திய பாடல்களை அழகாகப் பாடியிருக்கிறார் காயத்ரி வெங்கடராகவன். எல்லா கலைஞர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
நாடகத்தின் இறுதியில் அரங்கத்திலிருந்த அத்தனை பேரும் எழுந்து கரவொலி எழுப்பியது உணர்ச்சிகரமாக இருந்தது. எம்.எஸ்.சுப்புலட்சுமி என்ற மந்திரப் பெயருக்கும், பக்திபாவத்தில் தோய்ந்த அவரது இசைக்கும் கிடைத்த பாராட்டுதான் இது.