எச்சரிக்கை விளக்குகளை ஏளனப்படுத்தாதீர்கள்!
சாலைப் போக்குவரத்தை சீர் செய்யும் மிகச் சிறந்த சாதனம் எச்சரிக்கை விளக்குக் கம்பங்கள். வாகனப் பெருக்கம், சாலை அகலப்படுத்தப்படுவது என்று முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் சமாளித்து போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் கடமையை அந்த விளக்குக் கம்பங்கள் நிறைவேற்றுகின்றன.
ஆடோமாடிக் சிக்னல் போஸ்ட் என்றழைக்கப்படும் இந்தக் கம்பங்கள், பொதுவாக மிகவும் கேவலப்படுத்தப்படுகின்றனவோ என்றுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆமாம், தன்னிச்சையாக செயலாற்ற வேண்டிய அந்தக் கம்பங்களுக்கு அருகே சில போக்குவரத்துக் காவலர்கள் நின்றிருப்பதையும், வாகனங்கள் அந்த எச்சரிக்கைக் கம்பங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கின்றனவா என்பதை அவர்கள் கண்காணிப்பதையும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெரும்பாலான பகுதிகளில் காணலாம்.
இத்தகைய கண்காணிப்பு அவசியம்தானோ என்று பல கட்டங்களில் நம்மை சிந்திக்கவும் வைக்கிறார்கள், சில வாகன ஓட்டிகள். வேகமாகச் செல்ல வேண்டும், பிறரை முந்திச் செல்ல வேண்டும், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னாலேயே சென்றுவிட வேண்டும், தன் வேகத்தைப் பார்த்து பிறர் பிரமிக்க வேண்டும் என்றெல்லாம் இரு சக்கர வாகன ஓட்டுனர்களின் அவசர ஒழுங்கீனமும், அந்த சிக்னல் கம்பங்களை அவமானப்படுத்துகின்றன. அவர்கள் மட்டுமல்லாமல், ஆட்டோ ரிக்ஷாக்கள், கார்கள், ஏன் கனரக வாகனங்களான அரசுப் பேருந்துகளும் லாரிகளும்கூட, தத்தமது சிக்னல் எல்லையைத் தாண்டிச் சென்று வலது, இடது புறங்களிலிருந்து அனுமதி கிடைத்து வரும் வாகனங்களுக்குத் தடையாகவே நின்றுகொண்டிருக்கின்றன.
நான்கு சாலைகள் சந்திப்பில், தனக்கு என்ன எச்சரிக்கையை அந்த விளக்குக் கம்பம் கொடுக்கிறது என்பதைவிட, வலது பக்கத்து சாலைப் போக்குவரத்துக்கு என்ன எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது என்பதை கவனிப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் சில வாகன ஓட்டிகள். வலது பக்க சாலைக்கு பச்சை வண்ண அனுமதி முடிந்து, சிவப்பு வண்ணத் தடை விதிக்குமுன், மஞ்சள் வண்ணத்தில், ‘வேகத்தைக் குறைத்துக்கொள்’ என்ற எச்சரிக்கை தோன்றினால் போதும், இந்த சாலையிலுள்ள வாகனங்கள் அப்படியே சீறிப் பாயும். இத்தனைக்கும் இவர்களுக்கு சிவப்புத் தடை மாறி, மஞ்சள் வண்ணத்தில் 'புறப்பட தயார் செய்துகொள்' என்ற எச்சரிக்கை வந்து அதன் பிறகுதான் போகலாம் என்று பச்சை வண்ணம் அனுமதிக்கும். ஆனால் அதற்கெல்லாம் ஓட்டுநர்களுக்குப் பொறுமையில்லை. பக்கத்துத் தெருவிலிருந்து வரும் வாகனங்கள் வேகத்தைக் குறைக்கின்றனவா, அந்தக் கணமே தமக்கு போவதற்கு அனுமதி கிடைத்துவிட்டதாக நினைத்துக்கொண்டு இவர்கள் பாய்கிறார்கள்.
இதை எப்படித் தவிர்க்க முயற்சிக்கலாம்?
நான்கு சாலைகள் சந்திப்பில், ஒரு தெருவில் வரும் வாகன ஓட்டிகளுக்குப் பக்கத்துத் தெருவின் எச்சரிக்கை விளக்கு ஒளி தெரியக்கூடாது. அப்படித் தெரிவதால்தானே இந்த பக்கத்து வாகன ஓட்டிகள் தம் விருப்பம்போல தனக்குக் காட்டப்படும் எச்சரிக்கையையும் மீறி வாகனங்களை சீறிப் புறப்பட வைக்கிறார்கள்? அப்படியில்லாமல், ஒரு சாலைக்குக் காட்டப்படும் சிக்னல் பிற மூன்று சாலை வாகன ஓட்டிகள் பார்வையில் படாதவாறு அமைக்கப்பட வேண்டும். இப்படிச் செய்வதால் சட்ட ரீதியான எச்சரிக்கையை அலட்சியம் செய்யும் துணிவு யாருக்கும் வராது. பக்கத்துத் தெருவிலிருந்து வாகனம் வந்துவிடுமோ என்ற சந்தேக பயத்திலேயே, தமக்கு பச்சை வண்ண அனுமதி கிடைத்தபிறகுதான் இவர்கள் முன்னேறிச் செல்வார்கள்.
சாலைகளில் வாகனங்கள் இவ்வாறு வேகப்போட்டி நடத்தும்போது அங்கே பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பாதசாரிகள்தான். சாலையின் மறுபக்கத்திற்கு அவர்கள் போகவேண்டுமானால் அவ்வாறு அவர்களை அனுமதிக்கும் சிக்னல் விளக்குகள், வாகன ஓட்டிகளுக்கான விளக்குகளுடன் இணைந்தே அமைந்திருக்கிறது. அதனால் இவர்கள் அனுமதி பெற்று சாலையைக் கடக்கும்போது, இடது பக்க சாலையிலிருந்து வாகனங்கள் வேகமாக வந்து விடுகின்றன. பாதசாரிகள் தடுமாறிப்போய் திரும்பி விடுகிறார்கள். நான்கு சாலைகள் சந்திப்பிலேயே இவர்கள் பாதையைக் கடக்கும்படி சிக்னலைப் பொருத்தாமல், சற்றுத் தள்ளி, பாதசாரிகளுக்கென்று பிரத்யேகமாக அந்த வசதியை அமைத்துக் கொடுத்தால், அவர்கள் பயமின்றி கடந்து செல்ல முடியும். வேகமாக வரக்கூடிய வாகனங்களும், பாதசாரிகள் சாலையைக் கடப்பதை அறிந்து தம் வேகத்தைக் குறைத்துக் கொள்ளவோ, வாகனத்தை நிறுத்தவோ முடியும்.
தானியங்கி எச்சரிக்கை விளக்கு கம்பங்கள் சாலையைப் பயன்படுத்தும் எல்லோருக்கும் பேருதவியாக இருக்கிறது. ஆனால் அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.