கல்கி

என் தலைவர் கலைஞரை தரிசித்த கணங்கள்! |கலைஞர் 100

சுப்ர.பாலன்

சில மாதங்களுக்கு முன்னால் நண்பர் ப்ரியனுடன் கலைஞர் பிறந்த திருக்குவளையில் அவருடைய பூர்விக இல்லத்தைப் பார்த்து வருகிற ஒரு வாய்ப்புக்கிடைத்தது.

என் பள்ளி நாள் கனவுத் தலைவர் அவர். 'மால்'கள் பல்கிவிட்ட இன்றைய தலைமுறையில் 'டூரிங் டாக்கீஸ்' என்றால் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

1957 பொதுத்தேர்தலை ஒட்டி என் பிறந்த மண்ணில், திருவப்பூர் ரெயில்வே கேட் அருகேயிருந்த கீற்றுக்கொட்டகையில் செயல்பட்ட 'கமலா டூரிங் டாக்கீஸ்' திரை அரங்கில்  தேர்தல் நிதி சேர்ப்புச் சிறப்புக்கூட்டம்' ஒன்று நடந்தது.

அது நாவலர் நெடுஞ்செழியனும் கலைஞரும் என்று இருவர் மட்டுமே உரையாற்றிய கூட்டம்.

நுழைவுக் கட்டணம் உண்டு, இரண்டு ரூபாய்,  ஐந்து ரூபாய்.‌! நானும் என் நண்பர்கள் சிலரும் இரண்டு ரூபாய் டிக்கெட் வாங்கவே சிரமப்பட்ட காலம் அது.

அப்போதுதான்  தலைவர்கள் இருவரையும் வெகு அருகில் பார்த்து மயங்கியது.

அடுத்த முப்பது ஆண்டுகளில் அதே நாவலர் கரங்களால் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசு பெற முடிந்தது.

ஆனால் கலைஞரை சந்திக்கமட்டும் நேரம் குதிராமலே இருந்தது.

2001 ஆம் ஆண்டில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டலில் அமரர் கல்கி எழுதிய தலையங்கங்களில் ஒரு பகுதியைத் தொகுத்து வெளியிட்டோம்.

'வாழ்க சுதந்திரம்! வாழ்க நிரந்தரம்!' என்ற தலைப்பில் வெளியான அந்த நூலின் பிரதி ஒன்றைக் கலைஞரை சந்தித்துக் கொடுக்கலாமா என்று ஆசிரியர் கி. ராஜேந்திரன் அவர்களிடம் கேட்டேன்.

சுயநலம் தான். அந்தச் சாக்கில் என் தலைவரை நேரில் சந்திக்க விரும்பினேன் என்பதே உண்மை.

ஆசிரியரும் மிகுந்த மகிழ்ச்சியோடு அதற்கு இசைவளித்தார். "இந்த முக்கியமான தொகுப்பைக் கலைஞருக்குத் தந்தால் மிகவும் சந்தோஷப்படுவார். அப்படியே ப.சிதம்பரம், ஈ.வே.கி. இளங்கோவன், ஜி.கே.வாஸனுக்கும் கூடத் தரலாமே!" என்றார்.

எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உடனே புகைப்படக் கலைஞர் யோகா மூலம் சண்முகநாதன் அவர்களைத் தொடர்பு கொண்டதில் ஒரு மாலை நேரத்தில் காலைஞரை சந்திக்க நேரம் கிடைத்தது.

கோபாலபுரம் இல்லத்தில் தலைவர் மேலேயிருந்து இறங்கிவருவதற்காகக் காத்திருந்தேன்.

அங்கே முரசொலி மாறன் அவர்களும் தலைவருக்காகக் காத்திருந்தார். இருவரும் ஏதோ நிகழ்ச்சிக்குப் புறப்படுகிற அவசரம்.

"இப்பவா நேரம் கொடுத்தார்? அவசரமா வெளியிலே கிளம்பிக் கிட்டிருக்காரே.."  என்றார் மாறன்.

’’இந்த நூல் பிரதியை தரத்தான் நேரம் கேட்டோம்’’ என்று அவரிடம் சொன்னேன்.

நூலைக் கையில் வாங்கி விழி விரியப் புரட்டிப் பார்த்த மாறன் " எனக்கு ஒரு பிரதி கொடுங்கள்" என்று கேட்டார்.

ஒரு பிரதிதான் கையிலிருந்தது.  வெளியே போய் ஸ்கூட்டரில் இருந்து எடுத்துவர நேரமில்லை. தலைவர் கீழே இறங்கி அந்த முன் ஹாலுக்கு வந்துவிட்டார்.

அவருக்கு வணக்கம் சொல்லி "கல்கி அவர்கள் நாற்பதுகளில் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு இது. கல்கி ஆசிரியர் தங்களிடம் தரச் சொன்னார்" என்று சொல்லி 'வாழ்க சுதந்திரம்..' நூல் பிரதியை கலைஞரிடம் தந்தேன்.

மிகுந்த மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். பரிவோடு என் தோளில் கரம் பதித்தார். சில வார்த்தைகள் ஏதோ பேசினார். கனவு போன்ற அந்தக் கணங்களை என்னால் எந்தப் பிறவியிலும் மறக்கமுடியாது.

மாறன் அருகே வந்து, "எனக்கு ஒரு பிரதி வீட்டிலே தந்துடுங்க.." என்று மீண்டும் நினைவூட்டியவாறே கலைஞரோடு படியிறங்கினார்.

அப்படியே முரசொலி மாறன் வீட்டில் ஒரு பிரதியைத் தந்துவிட்டுத் திரும்பினேன்.

அது ஒரு சம்பிரதாயமான நிகழ்வாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அடுத்த இரண்டு நாள்களில் 'முரசொலி'யில் தாம் எழுதிவந்த கேள்வி பதில் பகுதியில் 'வாழ்க சுதந்திரம்..' நூலைப்பற்றிக் குறிப்பிட்டார்.

கட்சிகளுக்குள் ஏற்படுகிற ஒற்றுமைக் குறைவு பற்றிய ஒரு வாசகரின் கேள்வி அது.

கலைஞர் பதில் "கல்கியின் தலையங்கங்கள் நூலாக வெளிவந்திருக்கிறது. படித்துப் பாருங்கள்" என்பதாக.

டுத்த சந்திப்பு முற்றிலும் என் தனிப்பட்ட ஆவலில் நிகழ்ந்தது. பூம்புகார் தொடங்கி கண்ணகி இறைநிலை பெற்ற கேரளப்பகுதி 'மங்களாதேவி' ஆலயம் வரை  இடங்களைப் பார்த்து 'சிலம்புச் சாலை' என்று தலைப்பில் பயணத்தொடர் ஒன்றைக் கல்கியில் எழுதினேன்.

அது டாக்டர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் அணிந்துரையோடு வெளியானது.

அந்த நூல் பிரதியையும் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினேன்.  2014 ஆம் ஆண்டு.

இந்தப் பயணம் தொடங்கியபோது, கலைஞர் பெரிதும் கலை உணர்வோடு உருவாக்கிய பூம்புகார்க் கலை வளாகம் கவனிப்பாரற்றுக் கிடந்த நிலை கண்ணீர் வரவைத்தது.

அதைப் பற்றியும் நூலில் பதிவுசெய்திருந்தேன். 'சிலம்புச் சாலை' நூல் பிரதியையும் நான் எழுதி வானதி பதிப்பகம் முன்பு வெளியிட்டிருந்த 'கல்கியின் பெண் பாத்திரங்கள்' நூல் பிரதியையும் கலைஞரிடம் தந்தேன்.

"நீங்கள் உருவாக்கிய பூம்புகார்க் கோட்டம் இப்போது பரிதாபமாக காட்சி தருகிறதே..." என்றும் அவரிடம் சொன்னேன்.

சற்றே புன்முறுவலோடு என்னை நிமிர்ந்து பார்த்தார். அந்தப் பார்வைக்குப் பதவுரை பொழிப்புரை எழுதுவது சாத்தியமில்லை.  என் மனவேதனையை விட அவருடையது மிக அதிகமாக இருந்திருக்கும். என்னை வாழ்த்தினார்.

இந்த இரு வாய்ப்புக்களிலும், நினைத்துப் பார்த்தால் இப்போதும் அந்த ஆளுமையின் அருகிருந்து  மகிழ முடிந்த கணங்களே கண்முன்னால் படமாகக் காணமுடிகிறது.

தொடக்கத்தில் 'திருத்தலப் பயணம்' போல் கலைஞரின் திருக்குவளை சென்று வந்தது பற்றி எழுதினேன்.

அங்கே அமரர் கல்கியை நினைவுபடுத்தக்கூடிய இன்னும் ஒரு சிறப்பும் உண்டு.

திருக்கோளிலி என்று வழங்கப்பட்ட புராதனமான சிவன் கோயிலில் உள்ள தேவியின் திருப்பெயர் 'வண்டமர் பூங்குழலி' என்றிருப்பதே.

தம்முடைய மகத்தான பெண்பாத்திரம் ஒன்றைப் 'பூங்குழலி' யாக உருவாக்கியதற்குத் தூண்டியது எது என்பதைப்பற்றி நான் சிந்தித்ததுண்டு.

அபிராமி பட்டரின் 'பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே..!' என்ற அந்தாதிப் பாடல் வரியாக இருக்கும் என்று நினைத்து ஒரு கட்டுரையிலும் பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் திருவாரூரை அடுத்த இந்தச் சிறிய ஊரின் ஒன்பதாம் நூற்றாண்டுக் கோயிலைப் பற்றி அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

இந்தப் பயணத்தில் அந்த ஆலயதரிசனம் வாய்க்கவில்லை. 'பூங்குழலி' க்காகவும் இன்னொரு முறை திருக்குவளை போய்வரலாம் தானே?

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT