சசிகுமார் நடிப்பில் இரா. சரவணன் இயக்கத்தில் வெளிவரும் நந்தன் படத்தின் போஸ்டரும், டிரைலரும் மிக அதிக அளவு எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. "இங்க ஆள்வதற்கு மட்டுமில்லாமல், வாழ்வதற்கே அதிகாரம் தேவை" என்று ட்ரைலரில் வரும் வசனம் பலரை யோசிக்க வைத்துள்ளது.
நந்தன் ரிலீஸ் காக காத்திருக்கும் சசிகுமார் நமது கல்கி ஆன்லைன் இதழுக்கு அளித்த நேர்காணல் இதோ.......
யார் இந்த நந்தன்?
இந்த நந்தன் நம்மில் ஒருவன். இன்னும் சொல்லப்படாத, பேசப்படாத நந்தன்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள். இதை சொல்லும் முயற்சிதான் இந்த படம்.
நந்தனாரின் சாயல் இருக்குமா?
கண்டிப்பாக இருக்கும். இந்த அறிவியல் வளர்ச்சி பெற்ற காலத்திலும் நாமெல்லாம் நாகரீகமானவர்கள் என்று பேசும் சமூகத்தில் ஜனநாயக நாட்டில் நந்தனார் எப்படி பார்க்க படுகிறார் என்பதுதான் எங்களின் நந்தன்.
நீங்கள் பேசுவதை பார்த்தால் பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் படங்களின் சாயல் இருக்கும் போல் தெரிகிறதே?
“இன்னும் இந்த காலத்தில் இது போன்று நடக்கிறதா?" என்று கேட்பவர்களுக்கு, கை பிடித்து அழைத்து சென்று, "இந்த நிகழ் காலத்திலும் இது போன்ற மோசமான விஷயங்கள் நடக்கிறது; காட்டுகிறேன்“ என்று டைரக்டர் சரவணன் டைட்டிலில் சொல்கிறார். உங்களின் கேள்விக்கு என் பதிலும் இதுதான். சமூகத்தில் நடக்கும் ஒரு விஷயத்தை சொல்வதுதான் இந்த படம். வேறு எந்த சாயலும் இந்த படத்தில் இருக்காது.
இன்று சினிமாவில் பேசு பொருளாக இருக்கும் 'தலித்' படமா?
தலித் படம், தலித் அல்லாத படம் என்று சொல்வதே முதலில் தவறு. இங்கே நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது தான் முக்கியம். எங்கள் நந்தன் மானிடம் பற்றி பேசுகிறது. சக மனிதனை நேசிக்க வேண்டும் என்று சொல்கிறது. நம் சமூகத்தில் சிலரின் மீதும், சிலவற்றின் மீதும் நாம் வைத்துள்ள கண்ணோட்டத்தை பற்றி சொல்கிறது. இது எந்த வித அரசியல், இனம் சார்ந்த படம் அல்ல இந்த மண்ணின் மாந்தர்கள் பற்றி பேசும் படம்.
இந்த படத்தில் நீங்கள் வந்தது எப்படி?
இந்த நந்தன் படத்தில் முதலில் நான் நடிக்க தேர்வான கேரக்டர் படத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் அரசு அதிகாரி கேரக்டர்தான். ஷூட்டிங் ஆரம்பித்து பின்பு கதையின் நாயகனாக குழுவானை கேரக்டரில் நான் நடித்தால் என்ன என்ற எண்ணம் இந்த படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான சரவணனுக்கு வந்தது. முதலில் இரண்டு நாட்கள் நடித்து பார்போம். சரியாக இருந்தால் நடிக்கலாம் என்று எண்ணத்தில் நடிக்க ஆரம்பித்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த குழுவானை கேரக்டர் எனக்குள் வந்தது அழுக்கான, கொஞ்சம் கருப்பான மேக் அப்பை கொண்டு வந்து விடலாம். ஆனால் உணர்வு பூர்வமாக நடிக வேண்டுமே அதனால் டைரக்டர் உருவாக்கிய என் கேரக்டரை போல உள்ள சில நிஜ மனிதர்களை உற்று உற்றுநோக்கி நடிக்க ஆரம்பித்தேன். இப்படித்தான் இந்த கதை என்னை ஆக்கிரமித்தது.
ஸ்பாட்டில் ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருந்தது?
ஒரு காட்சியில் நான் மற்றவர்களை பார்த்து கும்பிட வேண்டும். உடன் நடித்தவர்கள் மாறாக என்னை பார்த்து கை எடுத்து கும்பிட்டார்கள். என்னை சசிகுமாராக நினைத்ததுதான் காரணம். டைரக்டர் உண்மையை புரிய வைத்து இந்த காட்சிகளை எடுத்தார். உடன் நடித்தவர்களில் சிலருக்கும், ரசிகர்களுக்கும் என்னை சசிகுமார் என்று தெரியவில்லை. என் ஒப்பனை தான் இதற்கு காரணம். என்னை அடையாளம் தெரியாததால் என்னிடம் ஆட்டோகிராப் வாங்க மாட்டார்கள். சமுத்திர கனியிடம் தான் ஆட்டோகிராப் வாங்குவார்கள். சேர்ந்து புகைப்படம் எடுத்துகொள்வார்கள் ஒரு நடிகனாக எனக்கு இது புது அனுபவமாக இருந்தது.
தென் மாவட்டத்தை மையப்படுத்திய கதைகளில் அதிகம் நடிக்கிறீர்கள் என்ற பார்வை உங்கள் மீது இருந்தது. இதை மாற்றத்தான் அயோத்தி, நந்தன் கதைகளில் நடிக்கிறீர்களா?
அப்போது என்னை அணுகிய இயக்குனர்கள் கதைகளுடன் என்னை அணுகினார்கள். தற்போது மாறுபட்ட கதைகளில் என்னை யோசிக்கிறார்கள். கதைதான் என்னை தேர்ந்தெடுக்கிறது.
நீங்களும் நண்பர் சமுத்திரக்கனியும் சேர்ந்து படம் இயக்கி பல வருடங்கள் ஆகி விட்டது. எப்போது உங்கள் இயக்கத்தில் சமுத்திரக்கனியையும் சமுத்திர கனி இயக்கத்தில் உங்களையும் பார்க்கலாம்?
கனி அவர்கள் இப்போது தெலுங்கு படங்களில் மிக பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். என்னிடம் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். சற்று நேரம் கிடைக்கும் போது நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம். கூடிய விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது பற்றி அறிவிப்பு வரலாம்.
அயோத்தி, நந்தன் என இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதை மாற்று சினிமாவுக்கான பாதி போல தெரிகிறதே?
எனக்கு பிடித்த சினிமாவை செய்கிறேன். ரசிகர்களின் ரசனையும் மாறிவருகிறது இதிலும் கருத்தில் கொண்டுதான் படங்களை தேர்வு செய்கிறேன்.
உங்கள் கெட்டப்பையும், நடிப்பையும் பார்த்தால் கமல், விக்ரம் வரிசையில் வருவீங்க போல தெரியுதே....?
இது உங்களுக்கே நியாயமா படுதா. கமல் சார், விக்ரம் சார் அவங்க எங்கே? நான் எங்கே? இவங்கள நான் பிரமிப்பா பார்க்கிறேன். எனக்குன்னு ஒரு அளவு இருக்கு. அதனால் கம்பேர் பண்ண வேண்டியதில்லை.