உத்தர்காண்ட் மாநிலத்தில் இருக்கும் உத்தர்காசி எனுமிடத்தில் அமைந்திருக்கும் நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனம் (Nehru Institute of Mountaineering) மலையேற்றப் பயிற்சிகளைப் பெற விரும்புபவர்களுக்காக ஆண், பெண் என்று தனித்தனியாகவும், இருபாலினத்தவருக்கும் என்று பல்வேறு வகையான மலையேற்றப் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
பயிற்சி நிறுவனம்:
இந்திய அரசின் பாதுகாப்புத்துறை (Ministry Of Defence, Government of India) மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு (Government of Uttarpradesh) ஆகியவை இணைந்து 1964ஆம் ஆண்டு மலையேற்றப் பயிற்சி அளிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டன. இப்பயிற்சி நிறுவனத்திற்காக 1965ஆம் ஆண்டில் பாகீரதி ஆற்றின் கரையில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், 1970ஆம் ஆண்டில் அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டு, 1974ஆம் ஆண்டில் அருகில்
5 கிலோமீட்டர் தொலைவிலிருந்த உத்தர்காசி எனுமிடத்தைத் தேர்வு செய்து, நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனம் (Nehru Institute of Mountaineering) தொடங்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்த இப்பயிற்சி நிறுவனம் 2001ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினைக்குப் பின்பு உத்தர்காண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கிறது.
மலையேற்றப் பயிற்சிகள்:
இந்நிறுவனத்தில் 28 நாட்களைக் கொண்ட அடிப்படை மலையேற்றப் பயிற்சி (Basic Mountaineering Course) மற்றும் மேம்பட்ட மலையேற்றப் பயிற்சி (Advanced Mountaineering Course) போன்றவை அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சி ஆண், பெண் என்று தனித்தனியாகவும், இரு பாலினத்தினருக்கும் சேர்ந்ததாகவும் என மூன்று வகையான குழுவாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
21 நாட்களைக் கொண்ட தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சி (Search & Rescue Course) மற்றும் அறிவுறுத்தல் முறைப் பயிற்சி (Method of Instruction Course) ஆகியவை ஆண், பெண் ஆகியோருக்குத் தனித்தனிக் குழுப் பயிற்சிகளாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
15 நாட்களைக் கொண்ட துணிவுப் பயிற்சிகள் (Adventure Courses) ஆண், பெண் மற்றும் இரு பாலினத்தினருக்குமான குழுப் பயிற்சிகளாக அளிக்கப்படுகின்றன.
21 நாட்களைக் கொண்ட பனிச்சறுக்குப் பயிற்சி (Skiing Course) இரு பாலினத்தினருக்குமான பயிற்சியாக அளிக்கப்படுகிறது.
மேலும், 5 முதல் 7 நாட்கள் வரையிலான சிறப்புப் பயிற்சிகளாக ஏறும் விளையாட்டுப் பயிற்சிகள் (Sports Climbing Courses), பாறையில் ஏறுவதற்கான சிறப்புப் பயிற்சிகள் (Special Rock Climbing Courses), 7 முதல் 15 நாட்கள் வரையிலான துணிவுச் சிறப்புப் பயிற்சிகள் (Special Adventure Courses), மலை நிலப்பரப்பு மிதிவண்டிப் பயிற்சி (Mountain Terrain Biking Course), யோகா பயிற்சிகள் (Yoga Course) போன்றவை அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சிகள் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள், காவல் மற்றும் பாதுகாப்புத் துறைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களது வேண்டுகோளுக்கேற்ப குழுப் பயிற்சியாக அளிக்கப்படுகின்றன.
இவை தவிர, 7 முதல் 15 நாட்கள் வரையிலான பேரழிவு மீட்புச் சிறப்புப் பயிற்சி (Special Disaster Rescue Training) மற்றும் 15 முதல் 21 நாட்கள் வரையிலான மலை வழிகாட்டிச் சிறப்புப் பயிற்சி (Special Mountain Guide Course) போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
உடற்தகுதி:
இப்பயிற்சியில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் அனைவரும் நல்ல உடல் நலமுடையவராக இருத்தல் வேண்டும். தேடுதல் மற்றும் மீட்புப் பணிப் பயிற்சியில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் நல்ல உடல்நலத்துடன் வலிமையுடையவராகவும் இருத்தல் வேண்டும்.
அட்டவணை:
இந்நிறுவனம் அளிக்கும் பயிற்சிகள் மற்றும் பயிற்சிக்கான நாட்கள் குறித்த விவரங்களையும், அதற்கான கட்டணம் போன்றவை முன்பே தயாரித்து வெளியிடப்பட்டு விடுகின்றன. இந்நிறுவனம் அளிக்கும் சில பயிற்சிகளுக்குப் பயிற்சிக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.
விண்ணப்பம்:
இந்நிறுவனத்தின் மலையேற்றப் பயிற்சிக்கான விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினைப் பெற விரும்புபவர்கள் ”Nehru Institute of Mountaineering” எனும் பெயரில் “Uttarkashi” எனுமிடத்தில் மாற்றிக் கொள்ளக்கூடியதாக, விண்ணப்பக் கட்டணம் ரூ.100/-க்கான வங்கி வரைவோலையினை பெற்று வேண்டுதல் கடிதத்துடன் “Nehru Institute of Mountaineering, Uttarkashi, Uttarkhant -249193” எனும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிறுவனத்தின் http://www.nimindia.net/ இணையதளத்திலிருந்தும் விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நிறைவு செய்து அனுப்பும் போது, விண்ணப்பக் கட்டணம் ரூ.100/க்கான வங்கி வரைவோலையினையும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
பயிற்சிச் சேர்க்கை:
இப்பயிற்சி நிறுவனத்தில் “முதலில் வருபவருக்கே முன்னுரிமை” எனும் அடிப்படையில் பயிற்சிக்கான சேர்க்கை அளிக்கப்படுகிறது. எனவே, இப்பயிற்சிக்கு முன்பதிவு செய்துகொள்வது அவசியமானதாக இருக்கிறது. பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், பயிற்சிக் காலத்தின் தொடக்க நாளுக்கு முந்தைய நாள் மாலையிலேயேப் பயிற்சி நிறுவனத்திற்குச் சென்று விட வேண்டும். ஒரு நாள் காலதாமதமேற்பட்டாலும், பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். இதுபோல், பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட பின்பு, பயிற்சிக்குச் செல்ல விரும்பாவிடில் பயிற்சிக்குச் செலுத்திய கட்டணத்தில் 25% பிடித்தம் செய்தது போக மீதிப்பணத்தை மட்டுமே பெற முடியும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். .
கூடுதல் தகவல்கள்:
இப்பயிற்சி மேற்கொள்வதற்கான தகுதி விவரங்கள், கட்டண விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை அறிய, மேற்காணும் பயிற்சி நிறுவன இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது இப்பயிற்சி நிறுவன அலுவலகத்தின் 01374 – 222123 எனும் தொலைபேசி எண் அல்லது 7060717717 (பயிற்சி), 9997254854 (முதல்வர்) எனும் அலைபேசி எண்களிலும் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.