பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!
பாரத நாடு பழம்பெரும் நாடு! என்றும் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்! என்றும் நம் நாட்டைப் பற்றிய பாடல்கள் பலவுண்டு! இதிகாசங்களையும், திருக்குறளையும், இன்னும் பல நீதி நூல்களையும் உலகுக்கு வழங்கிய உன்னத நாடு இது! புத்தனும், பல யோகிகளும் வாழ்ந்த புண்ணிய மண் இது! யோகாசனங்களை இப்புவிக்கு உணர்த்திய புத்திளம் பூமி இது! மனித வாழ்வின் மகத்துவங்களை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்த மகோன்னத நாடு இது!
மேற்கண்ட காரணங்கள் காரணமாகத்தான் உலகின் பெரும்பாலான மக்கள் இங்கு வாழ்கிறார்கள் போலும்! அதனால்தான் மக்கட் தொகையில் நம்பர் ஒன் நாடாக மிளிர்கிறதோ!
உலகில் தற்போது 195 நாடுகள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சங்க விபரம் தெரிவிக்கிறது. இந்தியாவும் அதில் ஒன்று என்பதை அனைவரும் அறிவோம். நாம் அப்படி நினைத்திருக்க, நம் இந்திய வாழ் அமெரிக்கர் ஒருவர், புதுவிதமாக யோசித்து, நம் இந்திய நாடு உலகிலுள்ள சுமார் 25 நாடுகளுக்குச் சமம் என்பதை, மக்கட்தொகை மூலமாகக் கொண்டு விளக்கியுள்ளார்!
28 மாநிலங்களையும், 8 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும், உலகத்திலுள்ள ஒவ்வொரு நாட்டுக்கு இணை (மக்கட் தொகையில்) என்பதை விளக்கியுள்ளார்! அவர் குறிப்பட்டுள்ள இந்திய வரை படம் வியக்கத்தக்கதாய் அமைந்துள்ளது!
தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக மாற்றி, ஆந்திராவை ஜெர்மனியாகவும், கர்நாடகாவை இத்தாலியாகவும் குறித்துள்ள அந்த இந்திய வரை படத்தை நீங்களும் கண்டு களியுங்களேன்!
இன்னொரு கண்ணோட்டத்தில் பார்த்தால் நம் ஆட்சியாளர்களின் அருமை புரியும்! 25 நாடுகளை இருபத்தைந்து பிரதமர்களும், அவர்களின் மந்திரிகளும் ஆள்கிறார்கள்!
நம் நாட்டில் ஒரு ஜனாதிபதியும், ஒரு பிரதமரும் அவர் மந்திரிகளுந்தான் ஆட்சி செய்கிறார்கள்! அவர்களின் வேலைப் பளுவையும், பொறுப்புகளையும், நாம் என்றைக்காவது எண்ணிப் பார்த்திருக்கிறோமா? அகில உலகத்தில் நம் அகண்ட பாரதத்தின் பெருமையை என்னென்பது? இங்கு பிறந்ததற்காகவும், வாழ்வதற்காகவும் மகிழலாமே!