கல்கி

பதின் பருவப்பிள்ளைகளின் வில்லன்களாக மாறும் பெற்றோர்!

அம்ருதா

பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு அருமையான கலை. அதற்கு நிபந்தனையற்ற அன்பும், ஏராளமான பாசமும், கொஞ்சம் கண்டிப்பும், நிறைய நிதானமும் பொறுமையும் அவசியம், அத்துடன் பிள்ளைகளை புரிந்து கொள்ளும் திறனும், திறந்த மனத்துடன் அவர்கள் சொல்வதைக் கேட்கும்  மனதும் வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில் அனேகமாக எல்லா நடுத்தர வர்க்கத்து பெற்றோருமே தங்கள் பிள்ளைகளுக்கு மிகச்சிறந்த கல்வியை கொடுக்க வேண்டும் என்று தங்கள் ஊதியத்தின் பெரும்பகுதியை பிள்ளைகளின்   கல்விக்காகவே செலவழிக்கின்றனர்.  ஒரு குழந்தை எல். கே. ஜி யில் ஆரம்பித்து 12 ஆம் வகுப்பு வரை ஒரு தனியார் பள்ளியில் படித்து முடிக்க குறைந்தது ஐந்து முதல் பத்து, பனிரெண்டு லட்சங்கள் வரை செலவாகிறது. மிகுந்த பாடுபட்டு தங்கள் தேவைகளை சுருக்கிக் கொண்டு பிள்ளைகளுக்காக இந்தப் பெரிய தொகையை கட்டி விடுகின்றனர் பெற்றோர். பலரும் கடன் வாங்கியாவது பள்ளிக்கட்டணம் கட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தாங்கள் படிக்க நினைத்த ப்ரஃபஷனல் கோர்ஸ் எனப்படும் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்புகளில் பிள்ளைகளை சேர்த்து விட்டு வருங்காலத்தில் அவர்கள் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் பிள்ளைகளுக்கு அதில் விருப்பமிருக்கிறதா என்று கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளத் தான் தவறிவிடுகின்றனர்.

பொறியியல் முடித்து நல்ல வேலையில் சேரும்  பல மாணவர்கள் தங்கள் தந்தை நாற்பது, ஐம்பது  வயதுகளில் வாங்கிய சம்பளத்தை தன் இருபதாவது வயதிலேயே ஆரம்ப நிலை ஊதியமாக பெற முடிகிறது. எனவே பெற்றோரும் அத்தகைய கோர்ஸ்களை படித்து தங்கள் பிள்ளைகள் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். சில பிள்ளைகள் தங்களுக்கு விருப்பமில்லை என மறுக்கும்போது பாசக்காரப் பெற்றோரின் முகங்கள் மாறி வில்லன்களாக உருவெடுக்கிறனர்.

சிறு வயதில் இருந்து,  திகட்டத் திகட்டத் தின்பண்டங்கள், சலிக்க சலிக்க விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், பத்தடி கூட நடக்கத் தேவையேயின்றி வீட்டு வாசலில் வந்து நின்று ஏற்றிசெல்லும் பள்ளி வாகனம், சகல வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் என வாழ்ந்த அந்தப் பிள்ளை, முதன் முதலில் தன் கல்லூரிப்படிப்பு குறித்த விருப்பம் மறுக்கப்படும் போது திகைத்துப் போகிறான். நேற்று வரை கேட்டதையும் கேட்காததையும் வாங்கித் தந்த தந்தை, இன்று பட்டப்படிப்பு விஷயத்தில் முரண்படுவது ஏனோ என குழம்பிப் போகிறான். தந்தையோ, லட்சக் கணக்கில் முதலீடு செய்து படிக்க வைத்த மகன், ஒன்றுக்கும் உதவாத ஏதோ ஒரு கோர்ஸில் சேர்ந்து படிப்பதை விரும்புவதில்லை

18 வயது வரை கேட்டதெல்லாம் கிடைக்கப் பெற்ற அந்தப் பிள்ளையின் மனது தனக்குப் பிடித்த கல்லூரிப் படிப்பை தேர்வு செய்வதில் தன்னுடைய உரிமை மறுக்கப்படும் போது குழம்பிப் போகிறது, ஆத்திரப்படுகிறது, அச்சமும் படுகிறது. உளவியல் ரீதியாக மிக அதிகமாக பாதிக்கப் படுகின்றனர் பிள்ளைகள். ஆனால் இது எதையுமே உணராமல் தங்கள் கட்டாயத்தால் அவர்களுக்கு பிடிக்காத துறையில் பிள்ளைகளை சேர்க்கின்றனர் பெற்றோர். 

என்னுடைய உறவினர் குடும்பத்தில் சமீபத்தில் பொறியியல் (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) படித்து முடித்த அந்த  மாணவிக்கு வருடம் 12 லட்சத்தில் கேம்பஸ் இண்டர்வ்யூவில் தேர்வாகி, பணியில் சேரச் சொல்லி ஆர்டர் வந்தது. ஆனால் அந்தப் பெண்ணோ, ‘’இந்தக் கோர்ஸ் எனக்கு சுத்தமா பிடிக்கல. உங்க கட்டாயத்தினால் தான் நான் படிச்சேன். நான் இந்த வேலைக்கு போகவே மாட்டேன். எனக்குப் பிடிச்சது ஹார்ட்டிகல்ச்சர்(தோட்டத்துறை) கோர்ஸ் தான். உங்க விருப்பத்திற்காக நான் A. I  படிச்சேன். இப்ப ஏன் விருப்பத்திற்காக நான் ஹார்ட்டிகல்ச்சர் படிக்கிறேன்’’ என்றதும் அந்த குடும்பமே அதிர்ந்து போனது. இப்போது அவளை சமாதானப்படுத்தி வேலையில் சேர வைக்க முயற்சிகள் நடக்கின்றன.

இதில் தவறு யார் மீது? மகளுக்கு என்ன கோர்ஸ் பிடிக்கும்? எந்தத் துறையில் அவளுக்கு ஆர்வம் என்று கேட்க தவறிய பெற்றோரா?அல்லது தன் விருப்பத்தை சொல்லத் தவறிய மகள் மீதா? இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது என்றாலும் கூடுதல் பொறுப்பு பெற்றோருக்கு தான். பத்தாவது படித்து முடித்த உடனே பிள்ளைகளை அமர வைத்து அவர்களுக்கு எந்தத் துறையில் படிக்க விருப்பம், எதிர்காலத்தில் என்னவாக ஆசை என்பதையெல்லாம் தெளிவாகக் கேட்டு தெரிந்து கொண்டு அந்த துறையில் சேர்ப்பதே நல்லது.

நிறைய குழந்தைகள் தங்களுக்குப் பிடிக்காத துறையில் பெற்றோர்கள் சேர்த்து விட்டார்களே என்று துளி கூட விருப்பமின்றி படிக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு மாணவன் நீட் தேர்வில் இரண்டு முறை தோற்று மூன்றாவது முறை நீட் தேர்வு நடக்க இருக்கும் சமயத்தில் அவன் பயிற்சி பெற்று வந்த அந்த பயிற்சி நிறுவனத்திலேயே தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தியை நாளேட்டில் வாசித்த போது அதிர்ச்சியாக இருந்தது. அவனுடைய நோட்டுப் புத்தகம் முழுவதும் அழகான ஓவியங்களால் நிரம்பி இருந்தது என்று அறிந்தபோது மனம் வலித்தது. ஒருவேளை அந்தப் பையனுக்கு ஓவியத்துறையில் சாதிக்க விருப்பமாக இருக்கலாம். அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்காத மருத்துவத்துறையில் அவனை சேர்க்க வேண்டும் என்று பெற்றோர் பிரயத்தனப்பட்டதன் விளைவே அவனது மரணம்.

அரசுப் பள்ளியொன்றில்  தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் என் தோழி   தற்போது 12 ஆவது வகுப்பு படிக்கும் தன்னுடைய மகளின் விருப்பப்படி, கல்லூரியில்  தமிழ் இலக்கியம் படிக்க சம்மதம் தந்து விட்டேன் என்று கூறிய போது மனம் மகிழவும் நெகிழவும் செய்தது. அந்தக் குழந்தையின் விருப்பதை நிறைவேற்றுவது தான் அவளுக்கு  தரும் ஆகச்சிறந்த பரிசன்றோ? தனக்குப் பிடித்த ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து ஒரு குழந்தை படித்தால் எதிர்காலத்தில் அந்தத் துறையில் சாதிக்க நிறைய வாய்ப்புகள்  இருக்கிறது. 

பண ரீதியாக  மட்டும் தங்கள் பிள்ளைகள் உயரவேண்டும் என்று பெற்றோர் எண்ணுவதற்குப் பதில் மனரீதியாக ஆரோக்கியமான எதிர்காலம் அவர்களுக்கு மிக அவசியம். பிடித்த துறை எதுவானாலும், அதில் கண்ணும் கருத்துமாக கற்றுத் தேர்ந்து, அதில் சிறந்து விளங்க பிள்ளைகளுக்கு பெற்றோர் முழு ஆதரவு தந்தால், இந்த மண்ணில் மாமலையும் ஒரு கடுகாகி விடாதோ இளையோருக்கு?

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

SCROLL FOR NEXT