IST Redi award 
கல்கி

நச்சுப்பொருள் ஆய்வுகளுக்கு 'ரெடி' விருது! யார் இந்த ரெடி?

தேனி மு.சுப்பிரமணி

நச்சுயியலில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்த அறிவியலாளர்களுக்கு ரெடி விருது (Redi Award) எனும் பன்னாட்டு நச்சு அறிவியலுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. 1962 ஆம் ஆண்டில் நச்சுயியல் அறிவியலை மேம்படுத்த ஆர்வமுள்ள அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களைக் கொண்ட குழுவால் தொடங்கப்பெற்ற பன்னாட்டு நச்சுயியல் சங்கம் (The International Society on Toxinology), நஞ்சு மற்றும் நச்சுப் பொருள் குறித்து அறிவியல் ஆய்வுகள் மேற்கொண்டவர்களில் சிறப்பு மிக்க ஒருவரைத் தேர்வு செய்து இவ்விருதினை வழங்கி வருகிறது.

நச்சுயியலின் முன்னோடிகளைச் சிறப்பிக்கும் பொருட்டு, 1967 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கு ரெடி எனும் பெயர் வைக்கப்பட காரணமென்ன தெரியுமா?

1664 ஆம் ஆண்டில் இத்தாலியப் பல்துறையாளர் பிரான்செஸ்கோ ரெடி (Francesco Redi) என்பவர் எழுதிய விரியன் பாம்புகள் பற்றிய அவதானிப்புகள் (Osservazioni intorno alle vipere) எனும் நூல் நச்சுயியல் ஆராய்ச்சியின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. பாம்புக்கடி மற்றும் விரியன் பாம்பின் விசம் குறித்து அறிவியல் அடிப்படையில் தெளிவாய்ப் புரிந்துகொண்ட முதல் அறிவியல் அறிஞர் ரெடி ஆவார்.

இவர் விரியன் பாம்பின் விடமானது விசப்பல்லின் வழியாக வருகிறது என்றும், எல்லோரும் நம்பிக் கொண்டிருந்த பித்தப்பையிலிருந்து இல்லை என்றும் நிறுவினார். மேலும் விழுங்கும் போது, இது விஷமல்ல என்றும், இரத்த ஓட்டத்தில் நுழையும் போது மட்டுமே பாம்பின் விசம் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். காயத்திற்கு முன் இறுக்கமான தசைநார் மூலம் இரத்தத்தில் உள்ள விஷ நடவடிக்கையை மெதுவாக்கும் வாய்ப்பை இவர் நிரூபித்தார். இந்தச் செயல் நச்சுயியலின் அடித்தளமாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே, பன்னாட்டு நச்சுயியல் சங்கம் நச்சுயியலின் முன்னோடியான ரெடி அவர்களின் பெயரிலேயே விருதினை நிறுவி வழங்கி வருகிறது.

நச்சுயியல் துறையில் சிறப்பான பங்களிப்புகளைச் செய்த விஞ்ஞானிகள் அல்லது மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரெடி விருது, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இச்சங்கத்தின் பன்னாட்டு மாநாட்டில் அறிவிக்கப்படுகிறது. நச்சுயியலாளர்களுக்கு இவ்வுலகில் வழங்கப்படும் மிக உயர்ந்த, மதிப்புமிக்க விருதாக இந்த விருது இருக்கிறது.

இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆய்விதழான டாக்ஸிகன் ஆய்விதழின் ஆசிரியர் தலைமையிலான ரெடி விருதுக் குழு, விருக்குரியவர்களைத் தேர்வு செய்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிருவாகக் குழு கூட்டத்தில் விருதாளர்கள் பெயர் அறிவிக்கபடுகிறது. விருது பெறுபவர், அதன் பின்னர் ”ரெடி சொற்பொழிவு” வழங்க அழைக்கப்படுகிறார். இந்த விருது பெற்றவரின் தகுதிகளை

விவரிக்கும் மேற்கோள் மற்றும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான நிதி உதவியினை இச்சங்கமே வழங்கி வருகிறது.

1967 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை 23 பேர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் கோஸ்டா ரிக்காவைச் சேர்ந்த புருனோ லோமண்ட் என்பவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. 2017 ஆம் ஆண்டில் மட்டும் இவ்விருது பிரான்சைச் சேர்ந்த மைக்கேல் லாஸ்டுன்கி என்பவருக்கும், ஜெர்மனியைச் சேர்ந்த டைட்ரிச் மெப்ஸ் என்பவருக்கும் என இருவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

கதிரியக்க மாசுக்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

SCROLL FOR NEXT