கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டுகால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திரமௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.
கலைஞர் எழுதிய முதல் சரித்திர நாவல் ரோமாபுரிப் பாண்டியன். இந்த நாவல் முரசொலியில் ஆரம்பமாகி, பின்னர் முத்தாரத்தில் சிறிது காலம் தொடர்ந்தது. கலைஞர் முதலமைச்சர் ஆனபிறகு, குமுதத்தில் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பமானது. தொடர் கதையாக எழுதப்பட்ட இந்த சரித்திர நாவல் 1974ல் புத்தகமாக வெளியானது.
கல்கி 25.8.1974 இதழ் சரித்திரச் சிறப்பிதழாக வெளியானது. அதில், “படித்துப் பாருங்கள்” என்ற பகுதியில், முதலமைச்சர் கலைஞர் எழுதிய “ரோமாபுரிப் பாண்டியன்” சரித்திர நாவலின் விமர்சனம் வெளியானது.
இதோ அந்த விமர்சனம்:
இந்தக் கதை கிறிஸ்து சகாப்தத்துக்கு முந்தைய காலத்தைச் சூழ்நிலையாகக் கொண்டு பின்னப்பட்டது. அந்தக் காலத்திலேயே தமிழ் நாட்டுக்கும் ரோமாபுரிக்கும் தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஆயின் விரிவான சரித்திர ஆதாரங்கள் கிடையாது. இருக்கிற மிகக் குறைந்த ஆதாரங்களைக் கொண்டு திரு மு. கருணாநிதி எழுநூறு பக்கங்களுக்கும் அதிகமான ஒரு சரித்திர நவீனத்தைப் புனைந்திருக்கிறார் என்பதைக் காணும்போது அவரது கதை சொல்லும் ஆற்றலை வியக்கிறோம்!
இந்த ஒரு நவீனத்தைப் படித்து முடிக்கும் போது இரண்டு நவீனங்களைப் படித்து முடித்த உணர்ச்சி ஏற்படுகிறது. கரிகாலனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று தீராப் பகையை வளர்த்துக் கொண்டு, கானகத்தில் மர மாளிகையில் தங்கிச் சூழ்ச்சிகள் பல செய்யும் வேளிர் குடித் தலைவன் இருங்கோவேனின் முடிவு வரை கமார் நானூறு பக்கங்கள் ஒரு கதையாக அமைகிறது. பிறகு செழியன் பாண்டி நாட்டுக்குத் திரும்பி ரோமாபுரிக்குத் தூதுவனாகச் சென்று வருவது ஒரு கதையாக அமைந்திருக்கிறது.
இருங்கோவேளைக் கடும் விரோதியாகவும்- வில்லனாகவும் கருதி அவனது குழ்ச்சிகளை - முறியடிக்கப் புலவர் காரிக் கண்ணனார் மகள் முத்துநகை, ஆண் வேடம் தரித்துக் கொண்டு போவதைப் பார்க்கும்போது காரசாரமான திடுக்கிடவைக்கும் சூழ்ச்சி வலைகளும் திட்டங்களும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகிறோம்.
முத்துநகை மாறுவேடத்தில் வீரபாண்டி என்ற பெயரோடு வரும் இருங்கோவேளிடமே காதல் களியாட்டங்களில் ஈடுபடுதும், முத்துநகை உண்மையிலேயே ஆண் என நம்பும் இருங்கோவேளின் தங்கை தாமரை அவள் மீது காதல் கொள்வதுமாக கதை எப்படியோ வளர்கிறது.
இரண்டாவது கதைப் பகுதியில் பாண்டி மன்னன் பெருவழுதி தன் வரலாற்றைக் கூறுமிடத்து, தான் ஒரு கைம்மையுற்ற பெண்ணிடம் கூடா நட்பு கொண்டு பெற்ற பிள்ளையே செழியன் என்று கூறுகிறார். அப்பெண்ணை மணந்துகொள்வதாக வாக்குறுதி அளித்துக் கடைசியில் கைவிட்டுவிட்டான் பாண்டி மன்னன் பெருவழுதி. இத்தகைய பண்பு பாண்டி மன்னனுக்கு எவ்வகையிலாவது ஏற்றம் அளிக்குமா ?
கொற்கையில் ஒரு கடையில் மாகதி மொழியில் பெயர்ப் பலகை இருந்ததாம். உடனே ஒரு கிளர்ச்சி எழுந்ததாம், வேற்று மொழி தமிழ்நாட்டில் புகுத்தப்படுகிறது என்று! தமிழ் நாட்டு மொழிக் கிளர்ச்சியை இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு போயிருக்கிறார். அதே போல் மாநில சுயாட்சிப் பிரசனையும் அலசப்படுகிறது. இவையெல்லாம் ஆசிரியர் இவ்விஷயங்களில் தீவிரக் கருத்துக்கொண்டவர் என்ற காரணத்துக்காகப் புகுத்தப் பட்டுள்ளதாகத் தெரிகிறதேயொழிய பிரதான கதைக்குச் சம்பந்தப்படாத விஷயங்களாகவே தோன்றுகின்றன.
புத்த சமணச் சண்டைகளை ஓர் அத்தியாயத்தில் ஆசிரியர் அலசுகிறார். இவ்விரு சமயங்களின் நுட்ப வேறுபாடுகளை எவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறார் என்பது புலனாகிறது.
அதேபோல் அந்நாளைய ரோமாபுரிவாசிகளின் கேளிக்கையாட்டங்களையும் ஆட்சி முறையையும் லாகவமாக ஆசிரியர் கூறுவதைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது.
"கடவுளை நாம் நம்புகிறோமா என்பதை விடக் கடவுள் நம்மை நம்பிடும் அளவுக்கு நாம் நாணயமானவர்களாக, நச்சென்ணங்கள் இல்லாதவர்களாக, கருணை மிகுந்தவர்களாக, கடமையிலிருந்து வழுவாதவர்களாத நடந்து கொள்கிறோமா என்று சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்!''
இப்படிப் பல இடங்களில் கருத்துச் செறிவு மிக்க உரையாடல்களைப் பார்க்கலாம். ஆனால் கதாபாத்திரங்கள் பெரும்பான்மையோர் வேஷம் கட்டிக் கொண்டு ஆட்டம் போடுவதில் மிகுந்த ருசியுள்ளவர்களாக இருக்கிறார்கள். அத்தனை பேரும் வேஷம் கட்டிக் கொள்வதால்தான் கதை எழுநூறு பக்கங்களுக்கு வளர முடிகிறது. எனினும், கதை படிக்கச் சிறிதும் அலுப்புத் தட்டவில்லை.
இதற்கு முக்கிய காரணம் கலைஞரின் அழகும் உணர்ச்சியும் தெளிவும் கொண்ட தேன் தமிழ் நடை. இரண்டாவது சம்பவங்களை அடுக்கடுக்காகப் புனைந்து செல்லும் திறன்.
பாத்திரப் படைப்புக்களில் குறைபாடுகள் இருப்பினும் "ரோமாபுரிப் பாண்டியன்'" சரித்திர நவீன இலக்கியத்தில் முக்கிய இடம் பெற்றுவிடுகிறது.
-எஸ்.வி.எஸ்.
பிரசுரம்: தமிழ்க் கனி பதிப்பகம், சென்னை. விற்பனை உரிமை: பாரி நிலையம், பிராட்வே, சென்னை-1. விலை: ரூ.25.
கல்கி 25.8.1974 இதழிலிருந்து
தொகுப்பு: எஸ். சந்திர மௌலி