warning image... 
கல்கி

சிறுகதை - ‘மது அருந்துதல் மரணத்தில் முடியும்’ – மாறனின் எச்சரிக்கை!

கல்கி டெஸ்க்

-பாரதிமணியன்

 டந்த சில நாட்களாகவே ரகுவுக்கு மனசே சரியில்லை.

சில வாரங்களுக்கு முன்பு மரணித்துவிட்ட நண்பன் மாறனின் நினைவுகள், இன்று அதிகமாக அவன் மனதை இறுக்கிப் பிடித்ததுபோல இருந்தது.

மாறனோடு பேசி, பழகி, இன்ப துன்பங்களை பகிர்ந்துகொண்ட நாட்கள், நினைவலைகளாக அவன் நெஞ்சினில் ஓயாமல் ஆர்ப்பரித்துகொண்டு இருந்தன.

மாறனும், ரகுவும் பத்தாவது வரை ஒன்றாக படித்துவிட்டு, மேற்கொண்டு படிக்க முடியாமல் ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தனர்.

இருவருக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் வந்த பிறகும் அவர்களின் நட்பு தொடர்ந்தது.

ஆரம்பத்தில் மாதத்தில் ஒருமுறை சந்தித்து மது அருந்துவார்கள். மனம்விட்டு பேசி மகிழ்வார்கள்.

பிறகு ரகுவுக்கு மனசு சரியில்லை, குடும்பப் பிரச்னை என்று ஏதாவது ஒரு காரணம் வரும்போது, மது குடிக்கலாம் என்று நினைத்து வருவான்.

மாறனோ குடிப்பதற்காக ஒரு காரணத்தை ஏற்படுத்திக்கொண்டு அடிக்கடி மது அருந்தத் தொடங்கினான்.

"இப்படி அடிக்கடி குடிகிறதால நம்ம உடம்புக்கும் கெடுதல், நாம சம்பாதிக்கிறதும் இதுக்கே செலவு ஆகிடும். வேண்டாம்ப்பா. விட்டுடு..." என்று ரகு எச்சரித்துக்கொண்டே இருப்பான். ஆனாலும் மாறன் அவன் பேச்சைக் கேட்கவில்லை.

நாட்கள் ஆக ஆக... தொடர்ந்த குடியால் மாறனின் உடல் நிலை பாதித்து, கடைசியில் மரணத்தைத் தழுவிவிட்டான்.

மாறனின் நினைவால் உண்டான மனக்கவலையை மறக்க, வழக்கமாக இருவரும் மது அருந்தும் மதுபானக்கூடத்திற்கு ரகு வந்தான். 

அவனுக்கு குடிக்கத் தேவையானவைகளை வாங்கிக்கொண்டு, ஒரு டேபிளை தேடி பிடித்து அமர்ந்தான்.

‘இங்கே வரும்போதெல்லாம், மாறனும் அவனுடைய கைபேசியில் இவர்கள் இருவரையும்  ‘செல்ஃபி’ எடுப்பான். ரகுவுக்கு சரியாக செல்ஃபி எடுக்க வராததால், ரகுவின் கைபேசியை வாங்கி மாறன்தான் இருவரையும் சேர்த்து ‘செல்ஃபி’ எடுத்துக்கொடுப்பான்.

"அண்ணா... நீங்களாவது இவருக்கு புத்திமதி சொல்லகூடாதா?! இப்படி குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்துகிறாரே. இதனால இவருக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா… நானும் எங்க குழந்தைகளும் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்."

மாறன் மருத்துவமனையில் இருக்கும்போது, அவன் மனைவி சொன்ன வார்த்தைகள், இப்போது ரகுவின் நினைவுக்கு வந்தன.

ரகுவின் கண்களில் கண்ணீர் தளும்பி உதிர்ந்தது..

'நண்பா... நாம பொழுதுபோக்காக ஆரம்பிச்ச இந்தக் குடிப்பழக்கம்… நீ இந்த உலகத்தை விட்டே போக காரணமாகிடுச்சு. உன் மரணத்துக்கு இந்த குடி   மட்டுமல்ல ..என்னோட நட்பும்கூட ஒரு காரணம்தான்… உன் சாவுக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன்.'

ரகு தனக்குள் புலம்பியபடி, மாறனை நினைத்து வாய்விட்டு அழுதான். ஆனால், அந்த மதுபானக் கூடத்தில் அவனையோ அவன் அழுகையையோ யாரும்... எந்தக் ‘குடி’மகனும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் அங்கு ‘குடி’மக்கள் தனியே சிரிப்பதும், அழுவதும், உளறிக்கொண்டு இருப்பதும் ஒரு சாதாரண நிகழ்வே.!

ரகு, கண்களை துடைத்துக்கொண்டு, தன் கைபேசியில் மாறனோடு அவன் இருக்கிற படங்களை எல்லாம் ஒவ்வொன்றாக பார்த்தான். அதில் மாறன் எடுத்துக்கொடுத்த ‘செல்ஃபி’யில் இருவரும் மது பாட்டில்களோடு இருக்கும் படமும் இருந்தது.

கு, இப்போது தானும் ஒரு ‘செல்ஃபி’ எடுத்துப் பார்க்கலாமா என்று யோசித்தான். உடனே அவன் தன் கைபேசியை உயர்த்தி பிடித்து, கைபேசி கேமராவில் அவன் உருவத்தைப்  பார்க்க...

அதில்... அதில்...

ரகுவின் உருவம் தெரிவதற்குப் பதில்… மாறனின் உருவம் தெரிந்தது.

மாறனின் உருவத்தைப் பார்த்ததும் ரகுவுக்கு ஷாக் அடித்ததுபோல இருந்தது.

ரகு தலையைத் திருப்பி அவனைச் சுற்றிலும் பார்த்தான். பின்பு அதிர்ச்சியோடு மறுபடியும், கைபேசியின் திரையை உற்றுப் பார்த்தான்.

அதில் இப்போது மாறன் மட்டுமல்ல... மாறனை சுற்றி அவன் மனைவியும் குழந்தைகளும்கூடத் தெரிந்தார்கள்.

ரகுவுக்கு ஒன்றும் புரியவில்லை. தலை சுற்றியதுபோல இருந்தது.

“நாம் இன்னும் குடிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் ஏன் இப்படி குழம்புகிறது.”

ஒருமுறை மாறன் ‘செல்ஃபி’ எடுப்பது பற்றி சொன்னது, ரகுவின் நினவுக்கு வந்தது.

"இந்த செல்ஃபின்னா... தற்படம், சுயபடமுன்னு சொல்லிக்கலாம்! நம்ம உருவத்தை இருக்கிற இடத்தில, அப்படியே படமா எடுத்துப் பார்த்துக்கலாம்."

'மாறன் சொன்னதுபோல, நான் எப்படி இருக்கிறேனோ, அதுதானே கைபேசியின் கேமரா திரையில தெரியணும். ஆனா மாறன் உருவம் ஏன் தெரியுது!?'

ரகு யோசனையோடு கைபேசியை எடுத்து, அது செல்ஃபி மோடில் இருக்கிறதா என்று சோதித்துவிட்டு, மீண்டும் செல்ஃபி எடுக்க முயன்றான்.

ஆனால் இப்போது...

கைபேசியின் கேமரா திரையில், ரகுவின் உருவம் சரியாக தெரிந்ததால்… கொஞ்சம் மனசு நிம்மதி ஆனது. அதே சமயம் அவன் மனசு ஒரு கணிப்பை அவனுக்குள் சொன்னது.

"நீ உன் நண்பனைபோல சாகப்போற... அதுதான் இதுக்கு முன்பு கேமரா திரையில், உனக்குப் பதில் மாறனின் உருவம் தெரிந்து இருக்கு! மாறனின் குடியால், அவன் குடும்பம் பாதிக்கப்பட்ட மாதிரி உன் குடும்பத்துக்கும் ஆகப் போகுது!"

ரகுவுடைய மனதின் குரல், சொன்னதைக் கேட்டதும், அவனுக்குத் திக்கென்றது. உடனே உடம்பெல்லாம் வியர்த்தது.

‘அவன் எப்போதும் மாறனுடைய இழப்பைப் பற்றி யோசித்துக்கொண்டு, அவன் நினைவாகவே இருப்பதால்... மனரீதியாக இப்படி மாறன் உருவம் தெரிவதுபோல அவனுக்குத் தோணியிருக்கலாம்’ என்று ரகு தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

அப்போது அவன் அனிச்சையாக மீண்டும் தன் கையை உயர்த்தி பிடிக்க, கைபேசியின் கேமரா திரையை உற்றுக் கவனித்தான்.

இப்போது கேமரா திரையில், ரகுவும், அவன் மனைவியும்… பிள்ளைகளும்கூடத் தெரிவதுபோல் இருந்தது?!

அதில் ரகுவின் முகம் புன்னகையோடு இருக்க, அவனைச் சுற்றிலும் இருந்த மனைவியும் குழந்தைகளும் அழுதபடி நின்றிருந்ததுபோல் அவனுக்குத் தெரிந்தது. மரணத்தின் பிம்பம் என்பது இதுதானோ?!

உடனே ரகு, சட்ரென்று எழுந்து நின்று, அவன் வாங்கி வைத்திருந்த பொருள்களையெல்லாம் அங்கேயே விட்டு விட்டு…

அந்த இடத்திலிருந்து வேகமாக நடந்து வெளியே வந்தான்.

அவனுடைய நண்பன் மாறன் உயிரோடு இல்லாவிட்டாலும்... இந்தக் கைபேசி திரை மூலமாக அவனுக்குச் சொல்ல வருவது… ரகுவுக்கு இப்போது புரிவதுபோல் இருந்தது.

‘சரிடா நண்பா... இனி இந்த மதுவை நான் தொடப் போவதில்லை’ ரகு தனக்குள் சொல்லிக்கொண்டு, ஒரு மன உறுதியோடு அவனுடைய வீட்டை நோக்கி நடந்தான்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT