ஓவியம்; உமாபதி 
கல்கி

சிறுகதை - பொய்க்கால் கழுதைகள்!

கல்கி டெஸ்க்

-மதுமிதா

வாசலில் கார் சப்தம் கேட்டது. விஸ்வநாதன் கையிலிருந்த பிரஷ்ஷைக் கீழே வைத்தான். ரமணி வேகமாய் வந்தான்.

"தோழரே… திருநாவுக்கரசு வந்தார்...!"

திருநாவுக்கரசு அரசியல் புள்ளி.

எழுந்தான்.

ஆர்ப்பாட்டமாய்க் கைகுலுக்கினார்.

"நீங்கதானே விஸ்வநாதன்...!"

தலையசைத்தான்.

இவனுடன் தரையில் உட்கார்ந்தார்.  இவனுக்குச் சற்று கூச்சமாயிருந்தது.

திருநாவுக்கரசு சுற்றுப்புறம் அலசினார். எதிரில் வைக்கப்பட்டிருந்த தட்டியில் இருந்த கோஷங்களைப் படித்தார்.

"கை குடுங்க... நல்லா வந்துருக்கு தோழரே...!"

இவன் சிரித்தான்.

"என்னடா இது... தோழரேன்னு நம்ப பாஷைல பேசறானேன்னு பாக்குறீங்களா... தோழாங்கிறது பொதுவான வார்த்தைதானே...!"

''ஆமாம்."

திருநாவுக்கரசு பேச ஆரம்பித்தார்.

"உங்களோட தொடர் போராட்டத்தைக் கட்சி தீவிரமா கவனிச்சிட்டு வருது.. உங்க கம்பெனில எத்தனை பேர் இருக்கீங்க...?"

''அறுநூறு பேர் இருக்கோம்...!"

''அப்ப குறைச்சலா அறுநூறு குடும்பம் இப்ப நடுரோட்ல நிக்குது... கயவாளிப் பசங்க... லாபத்தைச் சுளையா முழுங்கிடறது... ஆ...வூன்னா... லாக் அவுட் பண்ணிடறது."

விஸ்வநாதன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"கம்பெனி மூடி எவ்வளவு நாள் ஆகுது?"

"அடுத்த வாரம் வந்தா நாலு மாசம் முடியுது."

"அப்ப எல்லாரும் சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க?"

"கஷ்ட ஜீவனம்தான்... என்ன பண்றது? கடன் வாங்கி ஓட்டிட்டு இருக்கோம்..."

"தலைவருக்குப் புரிஞ்சிருக்கு... அதான் என்ன இங்க அனுப்பியிருக்கார்...!"

விஸ்வநாதன் அதிர்ந்தான்.  தலைவர் எனப்பட்டவர் முன்னாள் முதல்வர். இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர்.

"என்ன, தலைவரா...?"

"ஆமாம்... உங்க நல்ல நேரம் அவரு கருணை உங்க மேலே விழுந்திருக்கு...!"

விஸ்வநாதன் முகம் சுளித்தான்.

"தலைவர் உங்களோட பேச விரும்பறார்...!"

"எதுக்கு...?"

"எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் தோழரே...!"

"ம்... சொல்லுங்க.”

"நானே சொல்லிடறேன்... உங்க யூனியனுக்கு நம்ப கட்சி பேரை வச்சிடுங்க... உடனே பலன் கிடைக்கும்...!"

"அது எப்படி சார்?"

"அவசரப்படாதீங்க... இப்ப நடக்குறது பேய் அரசாங்கம்... தனித்து நின்னு போராட முடியாது... அதான் நாங்க உதவலாம்னு நினைக்கிறோம்...!"

"வேண்டாம் சார்.”

"ஏன்...?"

''எங்களுக்கு அரசியல் வேண்டாம் சார்... நாங்க அரசாங்கத்தை எதிர்த்துப் போராடலை... எங்க மேனேஜ்மெண்ட்டைத்தான் எதிர்க்கிறோம்...!"

''புரியாம பேசாதீங்க தோழரே... நாலு மாசம் ஆச்சே... மேனேஜ்மெண்ட் கண்டுக்கலை... அப்ப யார் உதவி பண்ணணும்...? அரசாங்கம்தானே... என்ன நடவடிக்கை எடுத்தது...!"

விஸ்வநாதன் சுலபமாய்ப் புரிந்துகொண்டான்.

இது அரசியல் தந்திரம்.

குழம்பிய குட்டையில் தூண்டில் வீசும் அயோக்கிய சித்தாந்தம்.

"தயவுசெய்து விட்டுடுங்க சார்... எங்களை அரசியல்ல இழுத்து விடாதீங்க... எங்க ஒற்றுமையால நாங்க சாதிப்போம்...!"

திருநாவுக்கரசு முகம் மாறினார்.

"இதுதான் உன்னோட முடிவாய்யா...?"

விஸ்வநாதன் எழுந்து கைகூப்பினான்.

யர் தேய பிரேக் அடித்து, அந்த போலீஸ் ஜீப் யூனியன் ஆபீஸ் முன் நின்றது.

தட்டிகள் மிதிக்கப்பட்டன.

விஸ்வநாதன் குழப்பமாய்ப் பார்த்தான்.

எஸ்.ஐ. முரட்டுத்தனமாய்த் தென்பட்டார்.

'யாருய்யா... விஸ்வநாதன்?"

இவன் முன்னால் போனான்.

''நீதானா... வா... என்னோட ஸ்டேஷனுக்கு...!"

ரங்கநாதன் எதிர்க்கேள்வி கேட்டான்.

"எதுக்கு... அரெஸ்ட் பண்ணப் போறீங்களா... வாரண்ட் இருக்கா...?"

எஸ்.ஐ. சட்டென ரங்கநாதன் கன்னத்தில் அறைந்தார்.

"என்ன சினிமான்னு நெனைச்சுக்கிட்டியா... வாரண்ட் கேக்குறியா...?"

"இன்ஸ்பெக்டர்... இது சரியில்லே...!"

விஸ்வநாதன் கத்தினான்.

எஸ்.ஐ. சிரித்தார்.

"சரிதான்... வாய்யா...!"

இவனை நெட்டித் தள்ளினார்.

விஸ்வநாதன் கோபாலிடம் சொன்னான்.

"நா போறேன்... நம்ப லாயரை அழைச்சிட்டு வா...!''

"அவரு ஊருக்குப் போயிருக்காரே...?"

"சரி. நா முன்னால போறேன்... பின்னாலே வாங்க...!"

போலீஸ் ஜீப்பில் ஏற்றப்பட்டான்.

ரங்கநாதன் இன்னும் கன்னத்தை விட்டுக் கையை எடுக்கவில்லை.

போலீஸ் ஸ்டேஷனில் கூட்டமிருந்தது. இவனைத் தரையில் உட்காரச் சொன்னார்கள்.

"சார்... நான் என்ன தப்புப் பண்ணினேன்?"

பளிச்சென அறை விழுந்தது.

வாய்க்குள் உப்புக் கரித்தது.

யாரோ இவன் தோளை உலுக்கினார்கள்.

திரும்பினான்.

திருநாவுக்கரசு.

தோளில் கையை வைத்தார்.

"பயப்படாதீங்க தோழரே...!"

எஸ்.ஐ.யிடம் போனார்.

"யோவ்... எதுக்குய்யா இவரைப் பிடிச்சு வச்சிருக்கீங்க...?"

"அவரு கம்பெனி ஓனர் புகார் கொடுத்துருக்காரு... அவரு கம்பெனியைத் தீ வைக்க இவங்க திட்டம் போடறாங்களாம்...!"

திருநாவுக்கரசு நக்கலாய்ச் சிரித்தார்.

"நான் இப்ப புகார் கொடுக்கறேன்... அந்தாளு என்னைக் கொல்ல வந்தான்னு... கம்பெனி ஓனரை இங்க கொண்டார முடியுமா...?"

எஸ்.ஐ. முறைத்தார்.

"பணக்காரனுக்கு ஒரு சட்டம்... ஏழைக்கு ஒரு சட்டமா... இது நம்ப ஆளு... விட்டுடு...!"

திருநாவுக்கரசு அதட்டியே பேசினார்.

கடைசியில் எஸ்.ஐ. ஒத்துக்கொண்டார்

வெளியே வந்தார்கள்.

''ஒரு நிமிஷம் தோழரே... கார்ல உக்காருங்க... அவன நல்லா மிரட்டிட்டு வர்றேன்...!"

திருநாவுக்கரசு உள்ளே போனார்.

எஸ்.ஐ. சிரித்தார். கண் சிமிட்டினார்.

"எல்லாம் சரியா...?"

"சரிய்யா...! நன்றி துரை."

"நீங்க எதுக்குய்யா நன்றி சொல்றீங்க.... இந்த வேலை தலைவர் போட்ட பிச்சை... தலைவர்ட்ட என்னப் பத்திச் சொல்லுங்க... நான் போட்ட போடுல யூனியன் ஆள் மிரண்டுட்டான்... இப்ப நீங்க எது சொன்னாலும் கேப்பான்...!"

திருநாவுக்கரசு தலையசைத்து வெளியே வந்தார்.

விஸ்வநாதன் நகம் கடித்து நின்றுகொண்டிருந்தான்.

"எங்க போகணும் தோழரே... யூனியன் ஆபீஸ்ல இறக்கி விடவா...?"

"வேண்டாம்.. நானும் உங்களோட வர்றேன்..!"

"எங்கே?"

"தலைவரைப் பார்க்க...!"

திருநாவுக்கரசு சிரித்தார்.

பின்குறிப்பு:-

கல்கி 11 ஜூலை 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT