-தமயந்தி
பஸ் இன்னும் வந்தபாடில்லை. சிவகாமி 'கால் வலிக்குதும்மா' என்றாள் இன்னும் ஸ்ரீவைகுண்டம் போய், பஸ் மாறி திருநெல்வேலி போக ராத்திரியாகிவிடும். அதற்குள் சிவகாமி நிச்சயம் இடுப்பில் ஏறிவிடும். அதை ஒரு கையில் தூக்கிக்கொண்டு பெருமாள்புரம் பஸ்ஸுக்காக நிற்க வேண்டும். கடவுளே! போகாமலிருந்து விடலாமா?
போகாமலிருந்து விட்டால் திரும்ப வீட்டுக்குப்போக வேண்டும் வீடு என்றால் நாகராஜன் திருப்பி எட்டி உதைப்பான்.
''போ நாயே. உங்கப்பன்ட்ட உன் பங்கு சொத்த வாங்கிட்டு வா. பிசுனஸ் ஆரம்பிக்கணும்."
மொத்தம் அறுபதாயிரம். பதினைஞ்சு பவுன் நகை. இதைப் போட்டு நாகராஜனைக் கட்டி வைக்கவே அப்பா திணறிப் போய்விட்டார். ஆறு மாசம் முன்தான் தங்கை சொர்ணா கல்யாணம் முடிந்தது. அந்தக் கடனிலே தத்தளித்துக் கொண்டிருப்பார். இப்போது போய் என் சொத்தைத் தா என்றால் என்ன செய்வார்?
சொத்து என்ன பெரிய சொத்து நாகர்கோவிலில் மூன்று தென்னந்தோப்பு. ஒவ்வொண்ணும் அரை ஏக்கர். இரண்டு வயல். கல்யாணத்தோடேயே ஒரு தென்னந் தோப்பு இவளுக்கு என்று பேசி முடிவானதுதான். ஆனால் இப்பவே அதற்கென்ன அவசரமாம் என்று தோன்றாதா? ஏற்கெனவே கழுத்து முங்கும் கடனில் அப்பா. அதுதான் நாகராஜனுக்கு பயமாய் இருக்கும். எங்கே கடன் தொல்லையில் மனுஷன் தென்னந்தோப்பை விற்று விடப் போகிறாரோ ... என்று பிஸ்னஸ் இரண்டாம்பட்சம்தான்.
''யம்மா... பஸ் வருது... ''
பெருமாள்புரத்தில் இறங்கும்போது இருட்டி விட்டிருந்தது. பெட்ரோமாக்ஸ் விளக்கு பொருத்தும் முயற்சியில் பெட்டிக்கடை முதலாளிகள் இருந்தனர். சிவகாமி இடுப்பில் ஏறிக்கொண்டாள். அப்பாவுக்காக 'அரசனில்' வாங்கின முறுக்கும் கேக்கும் ஒரு கையில் ஆடிற்று. ஹவுசிங்போர்ட் திருப்பத்தில் சிவகாமி மிட்டாய் கேட்டது.
"இருடி... தாத்தா வீடு வந்துட்டுது.''
வீட்டில் அப்பா இல்லை அம்மா வெளியே வந்து பார்த்தவள் "ஏய் ..." என்று சந்தோஷப்பட்டாள். விஷயம் கேட்டால் இந்த சந்தோஷம் வற்றிவிடும்.
''என்னடி... மாப்ளே வர்லியா?''
''இல்லம்மா... வேல."
''என்ன திடீர்னு?"
இப்படி வாசலில் வைத்து ஆரம்பிக்கக்கூடிய விஷயமா இது? மெல்ல சொல்ல வேண்டும். இன்று முடிந்தால் ராத்திரி; இல்லையென்றால் காலையில், மத்யானம் கிளம்பினால் போதும்.
''சும்மா திடீர் ப்ளான்."
உள்ளே ஹாலுக்குள் நுழைந்ததும் டீ.வி. கறுப்பு வெள்ளையில் ஓடிக்கொண்டிருந்தது. பதினாலு இன்ஞ்
"கலர் டீ.வி. எங்கம்மா?"
''சொர்ணா கல்யாணத்துல ஏக கடன். ஒருத்தன் திடீர்னு நாளைக்குக் காலைல எட்டாயிரம் வேணும்னான், நகை எல்லாம் வித்தாச்சு. டீவி.ய யாரோ பிரண்டுட்ட வித்துட்டார் அப்பா. நம்ம சேதுதான் அவன் பழைய டீ.வி.ய சும்மா கொணர்ந்து போட்டான். ஆமா சாப்பிடுறியா காப்பி குடிச்சிட்டு சாப்பிடுறியா?''
சேது... அப்பாவிடம் க்ளார்க்காய் இருந்தவன். அவனுக்கே இத்தனை விசாலம் என்றால்...
''என்னடி யோசனை?"
''ஒண்ணுமில்லம்மா. அப்பா வரட்டும். ஒரேடியா சாப்பிட்டுறலாம்."
"அப்பா வர நேரமாயிரும். பஸ் எப்ப வருதோ!"
''பஸ்லயா? புல்லட் இல்லே?"
அம்மா நிமிர்ந்து பார்த்தாள்.
''வித்தாச்சு.''
''ஏம்மா?"
''தட்டுப்பாடு. சிவகாமி சாப்பிடுறியாம்மா? பாட்டி சாம்பார் வச்சிருக்கேனாம்.''சிவகாமி வெறித்தது.
மனசுக்குள் நாகராஜன் நினைவு வந்தது. அவன் ஒரு தடவை திருநெல்வேலி வரும்போது மஞ்சள் காமாலை வந்துவிட, அப்பா பேயாய் அலைந்தார். அப்போது சிவகாமிக்கு ஆறு மாதம் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.
ஜங்ஷன் ஷீபாவில் நாகராஜன் சேர்க்கப்பட்டான். அப்பா ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் ஓடினார். சேது சாப்பாடு எடுத்துப் போனான். ஒரு வாரம் கழித்து நாகராஜன் வீட்டுக்கு வந்தான். மெலிந்து, கறுத்து, காரம் சேர்க்காத உணவுடன்.
அந்த முறை கிளம்பும்போது அப்பாவிடம் கேட்டாள்.
"எவ்ளோப்பா ஆச்சு?"
"எவ்ளோவானா என்னம்மா?"
"இல்லப்பா... போய் அனுப்பிடறேன்.''
''போயிட்டு வா. அடிக்கடி வா. அது போதும்.''
எவ்வளவு ஆயிற்று என்றுகூட நாகராஜன் கேட்கவில்லை. கேட்கத் தோன்றவில்லையோ என்னவோ. அதெல்லாம் மறந்து போனதுதான் அதைவிடக் கொடுமை!
அப்பா வர பத்து மணியாகிவிட்டது. சிவகாமி தூங்கி விட்டாள். அப்பா வந்ததும் அவளை நெற்றியில் இழுத்து முத்தமிட்டார். தூக்கத்தில் சிவகாமி நெளிந்தாள். இப்படித்தானே எங்களையும் வளர்த்திருப்பார்.
''மாப்ள சுகமா?"
''ம். நீங்க நல்லாருக்கீங்களாப்பா?"
"ம். இருக்கேன்" சிரித்தார்.
"சொர்ணா கல்யாணத்துல ரொம்ப கடனாயிடுச்சாப்பா. ?"
"ரொம்ப ஒண்ணுமில்ல... சமாளிச்சுறலாம்."
''எப்படி? டீ.வி., பைக். ஒண்ணொண்ணா வித்தா?
''அம்மா சொன்னாளா?''
''ஆமா.''
அப்பா நிமிர்ந்து பார்த்தார். உள்ளே குத்திற்று. நாகராஜன் ஆஸ்பத்திரி செலவுக்கு இரண்டாயிரம் ஆகியிருக்கும். அதை இப்போதுகூட கொடுக்கலாம். கொடுத்தால் அப்பாவுக்கு நிச்சயம் உதவியாயிருக்கும்.
வட்டமாய் உட்கார்ந்து தரையில் சாப்பிட்டார்கள். இங்கேதான் இப்படி எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுவது எல்லாம் அங்கே நாகராஜனுக்குப் பரிமாறி விட்டுத்தான் சாப்பிட வேண்டும்
"என்ன யோசனை. சாப்பிடலை?" அப்பா முதுகைத் தட்டினார்.
பிரமாதமான சாப்பாடில்லை. முருங்கைக்காய் சாம்பார். கோஸ் கூட்டு. இவர்கள் வந்ததால் அப்பளம். ஆனாலும் ருசி பிரமாதமாய்த் தோன்றிற்று.
''வர வர நான் சமைச்சு சாப்டுறதே நல்லால்ல. இதென்ன இவ்ளோ ருசியா படுது.''
''வா. அடிக்கடி வா. நீதான் வர மாட்டேங்கிற."
''வர்றேன். அடிக்கடி வர்றேன்ப்பா" குரல் தளும்பிற்று இவளுக்கு
''சொர்ணாவும் மாப்ளையும் போன வாரம் வந்தாங்க.''
''நல்லாருக்காளாப்பா?"
''ம். ஆடி சீர் செய்யணும்.''
"என்ன செய்யப் போறீங்கப்பா?"
''வரும். வழி வரும். உங்கல்லாருக்கும் வரலே?"
அப்பா சாப்பிட்டதும் அம்மா ஏதோ மாத்திரையை நீட்டினாள்.
"என்னதுப்பா?"
"மருந்து
"எதுக்குப்பா?"
''பிரஷர் ஏறிட்டு; டாக்டர் பிடிடா மாத்திரைன்னுட்டான்.''
பிளட் பிரஷரா? யாரால்? மகள்களால், அவர்கள் கல்யாணத்துக்குப் பணம் திரட்டினதால், சீர் செய்ததால். பிரசவம் பார்த்ததால். இப்போதுகூட அப்பா கேட்கலாம். 'நாகராஜனுக்காகச் செலவு செய்ததைத் தர முடியுமா?' ஆனால் கேட்கவில்லை! என்ன மனசு, என்ன மனசு!
ராத்திரி தூக்கம் வரவில்லை. இந்த நிலையில் எப்படி 'என் பாகத்தைப் பிரித்துத் தா' என்று கேட்க முடியும்? அப்பாவுக்கு உள்ள பெருந்தன்மை எனக்கு எப்படி எள்ளளவும் இல்லாது போகும்?
மறுநாள் "கிளம்புறேன்ப்பா" என்றபோது சிவகாமி கையில் அப்பா ஐம்பது ரூபாய் தாளைத் திணித்தார்.
''எதுக்குப்பா?'
''இருக்கட்டும்மா. பிள்ளைக்கு ஏதாவது வாங்கிக் கொடு.''
கடவுளே! மீண்டும் சம்மட்டியால் ஓங்கி ஓர் அடி. சிவகாமி அதைக் கைக்குள் இடுக்கிக் கொண்டது.
'"அப்பா... ஏன் நீங்க நாகர்கோவில் நிலத்தை வித்துறக் கூடாது? கடன் ஒழியுமே!"
"அது ஒவ்வொண்ணும் ஒவ்வொருத்திக்கு வாக்கு கொடுத்தாச்சு. ஏதோ எங்க காலத்துக்கப்புறம் உங்களுக்கு ஒண்ணு வேணாம்?''
'உங்க காலத்திலேயே அதை வாங்கிவிட முயற்சி நடக்கிறதென்பது உங்களுக்குத் தெரியுமா அப்பா?'
தெரியாது. தெரியக்கூடாது. தெரிய வேண்டாம்.
"அப்பா... ''
"என்னம்மா.... ?"
"என் பங்கை வித்து நீங்க கடனை அடைச்சுடுங்கப்பா."
"நீ சொன்னதே போறும் தாயி.''
"இல்லப்பா நிஜமா சொல்றேன். அப்பா கண்கலங்க நின்றார்.
அப்பா பஸ் ஏற்றி விட்டார். நிலத்தை விற்பாரா விற்க மாட்டாரோ தெரியவில்லை. பாகம் பிரித்துத் தாவென்று கேட்கவில்லை. அது போதும். பஸ் புகை கக்கி கிளம்பிற்று. மனசுக்குள்ளிருந்து புகை வெளிக் கிளம்பி ஜன்னல் வழி வெளியேற, மனசு லேசானது.
"சிவகாமி!"
"என்னம்மா?" சிவகாமி சிரித்தாள்.
"அம்பது ரூபாய தொலைச்சிராதே. அப்பாட்ட கொடுத்து ஏதாவது வாங்கிக்க... என்ன?"
சிவகாமி சந்தோஷமாய்ச் சிரித்தாள். நாசரேத் போக, இருட்டிவிடும்.
பின்குறிப்பு:-
கல்கி 07 ஜனவரி 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்