Story Image 
கல்கி

சிறுகதை; காதலிக்குக் கல்யாணம்!

கல்கி டெஸ்க்

-ஜெரா

திர்வேல் பஸ்ஸைவிட்டு இறங்கும்போது சூரியன் உச்சியில் காய்ந்துகொண்டிருந்தான்.

ஹாஸ்டல் ஸ்டாப்பிங் மோரித் திட்டின்மீது சாய்ந்து நின்றபடி பீடியை உறிஞ்சிக்கொண்டிருந்த பலராமன், இவனைப் பார்த்ததும் பீடியைச் சுண்டி விட்டுப் பரபரப்பாய் ஓடி வந்தான்.

கைநீட்டி ப்ரீப்கேஸை வாங்கிக்கொண்டவன், "தந்தி நேத்தே கிடைச்சிருக்குமே" என்று கரகரத்தான்.

சற்று ஒதுங்கி அரசமர நிழலில் நின்றுகொண்ட கதிர்வேல் ஆயாசமாய் பெருமூச்செறிந்தான்.

'பணம் பொரட்டிட்டு வரணுமில்லே! அதான் லேட்டாயிருச்சு."

இயல்பாய் பேசிக்கொண்டிருந்த கதிர்வேல் சந்தேகமாய் பலராமனைப் பார்த்தான். நெற்றிப் பரப்பில் கோடுகள் பிறக்க,

"சுகன்யாகிட்டே சொல்லிட்டே இல்லே...?!" என்றான்.

பலராமன் பேசவில்லை.

தலை தாழ்த்திக்கொண்டான்.

இருள் அப்பிய முகத்தில் வெளிச்சப் பொட்டாய் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

இவனிடம் எப்படிச் சொல்லப் போகிறோம் என்ற பயமும், நடுக்கமும் பரவலாய் அப்பிக்கொள்ள, "நடந்துக்கிட்டே பேசலாம் கதிரு" என்று முணுமுணுத்தான்.

இருவரும் பங்களா கேட்டின் பக்கம் சமீபித்தபோது, காலனிக்குள்ளிருந்து வேகமாய் வந்த டாக்ஸி ஒன்று வேகத்தடைக்காகச் சற்றே தயங்க, உள்ளுக்குள் பாதுகாப்பாய் உட்கார்ந்திருந்த அவளை கதிர்வேல் பார்த்து விட்டான்.

சர்வ அலங்காரத்துடன் மின்னலாய் ஜொலித்துக் கொண்டிருந்த அவள் சட்டென்று முகம் கவிழ்த்துக்கொண்டாள். இருவர் கண்களும் சந்தித்துக்கொண்ட அந்தக் கண நேரத்தில், அவனிடம் தென்பட்ட பதற்றத்தைப் படித்துவிட்ட கதிர்வேல் கோபமாய் பலராமன் பக்கம் திரும்பினான்.

ஜிவ்வென்று அடிவயிற்றில் பயம் சிதற, கண்ணீரோடு நிமிர்ந்த பலராமன் "கதிரு... வந்து..." என்று வார்த்தை பிறழ தடுமாறினான்.

ஆதரவாய் பலராமனின் கையைப் பற்றிக்கொண்ட கதிர்வேல் உச்சிப் பிள்ளையார் கோயிலை ஏறிட்டான். மௌனமாய் ஆரம்பப் படிகளில் ஏறி, பாதியில் பரவி இருந்த மர நிழலில் உட்கார்ந்தான்.

எதிரே நின்றிருந்த பலராமனை தீர்க்கமாய் பார்த்தான். "பலராமா... என்னடா நடந்தது..."

தண்ணீருக்குள் அமுக்கப்பட்டவன்போல சிறிது நேரம் திணறிய பலராமன், "சுகன்யா முடியாதுன்னு சொல்லிட்டா கதிரு! அவ உன்னை ஏமாத்திட்டா" என்று பல்லைக் கடித்துக்கொண்டு இரைந்தான். சட்டென்று சமன நிலைக்கு வந்து, நாளைக்கு அவ கல்யாணம்! சேலத்துல... அதான் கார்ல போறா..." என்று எங்கோ பார்த்தபடி முணுமுணுத்தான்.

கவண்கல் தாக்கிய காக்கை போல் கதிர்வேல் தொய்ந்து போனான். முகம் ரத்தமிழந்து தொங்கிப் போனது. ஆழமான வலி ஆவேசமாய் இதயத்தைப் பிசைய, அதிர்ச்சியின் தாக்கத்தில் அசையா சிலையாகிப் போனான்! உப்பிய கன்னங்களில் கரகரவென்று கண்ணீர்  இறங்கி முறுக்கிய மீசை நுனிபட்டு தடம் மாறிப் போனது.

நிஜமாகவே இனி நீ எனக்கில்லையா சுகன்யா! தென்றலாய் என்னை திசை மாற்றிவிட்டு, யாரையோ தேடிப் போய்விட்டாயா?

திர்வேல் இரண்டு மாதங்களுக்கு முன்பு கடைசியாக அவள் எழுதி இருந்த கடிதத்தை ஞாபகப்படுத்திக் கொண்டான். வழக்கம்போல புலம்பி இருந்தாள். அவள் பெற்றோரைச் சந்தித்து திருமணம் பேசச் சொல்லி வற்புறுத்தி இருந்தாள்! இவனும் வழக்கம்போலவே நல்ல நிலைமை வரும் வரை காத்திருக்கும்படி கெஞ்சி இருந்தான்!

"இனி காத்திருப்பதிலும் அர்த்தமில்லை; நம் திருமணமும் என் கையில் இல்லை" என்று அவள் எழுதி இருந்தது ஒரு சம்பிரதாயமான மிரட்டல் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால், இப்போது..

நீண்ட நாட்களாய் அவளிடமிருந்து கடிதமே வரவில்லை. பிறகுதான் கதிர்வேல் ஒரு முடிவுக்கு வந்தான். வீட்டை விட்டு அவளை வரச் சொல்லி, எங்காவது கோயிலில் வைத்துத் தாலி கட்டிவிடுவது என்ற முடிவோடு, விவரத்தை பலராமனுக்கு எழுதி அவள் சம்மதத்தைக் கேட்கச் சொல்லி இருந்தான்!

அப்போதுகூட நேரடியாக வந்து, அவள் பெற்றோரிடம் 'பெண்' கேட்கும் தைரியம் வராமல், குட்டியாய் ஒரு கோழைத்தனம் அவன் மனதுக்குள் குறுகுறுத்தது.

உடனே புறப்பட்டு வரச்சொல்லி பலராமனிடமிருந்து தந்தி வந்ததும் சுகன்யா அவன் முடிவுக்குச் சம்மதித்துவிட்டாள் என்ற நினைப்போடுதான், பணம் புரட்டிக்கொண்டு ஒரு திடீர் திருமணத்துக்குத் தயாராய் வந்திருந்தான் கதிர்வேல். ஆனால்...

சுகன்யாவின் அன்பும், காதலும் இவனுக்கு எப்படிக் கிடைத்தது என்பது சாதாரண விஷயம்!

ஆனால் அவளுடைய பிரவேசத்துக்குப் பிறகுதான், பொறுப்பில்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டு உடம்பை வளர்த்துக்கொண்டிருந்த கதிர்வேல், அடிதடிக்கு அஞ்சாமல் சண்டியனாய்ச் சரிந்துகொண்டிருந்த கதிர்வேல், உழைப்பை ஓரம் கட்டும் உருப்படாத உதிரியாய் ஒதுக்கப்பட்ட கதிர்வேல், ஒட்டுமொத்தமாக உருமாறி, வேலை தேடி வெளியூர் போய் இன்று நாலு பேர் மதிக்க நடமாடுகிறான் என்பது அசாதாரணமான விஷயம்!

பெண்களின் அன்பு அசாதாரணங்களை மட்டுமல்ல, சில சமயங்களில் அதிசயங்களையும்கூட சாதிப்பதுண்டு! ஒருவேளை இந்தத் திருமணமும் அதில் சேர்த்தியோ!

ண்களை அழுத்தமாகத் துடைத்துக்கொண்டான் கதிர்வேல். "கவலைப்படாதே கதிரு! நீ அவளை எந்த அளவுக்கு விரும்பறேன்னு எனக்குத் தெரியும்! 'இனிமே ஒண்ணுமே முடியாதுன்னு' அந்தச் சிறுக்கி சொன்னப்ப, என் உடம்பு எப்படிப் பதறிப்போச்சு தெரியுமா! உனக்குக் கிடைக்காத அவ இன்னொருத்தன்கூட எப்படி வாழ முடியும்? நாளைக்கு அவளோட மாமன் பையன் மாப்பிள்ளையா, இல்லே நீ மாப்பிள்ளையான்னு பாத்துப்புடுவோம்! குஸ்தி கொட்டாயில சொல்லி நம்ம பசங்களை வரச் சொல்லி இருக்கேன். இப்படியே சேலத்துக்கு பஸ் ஏறுவோம். அவ உனக்கு எழுதின கடிதாசு எங்கிட்டே கொஞ்சம் இருக்கு, இதோ...''

பலராமன் இடுப்பு வேஷ்டியில் முடிந்து வைத்திருந்த கடிதச் சுருணையைப் பதற்றமாய் எடுத்துக் காட்டினான்!

"மாப்பிள்ளை மூஞ்சியில விட்டெறியலாம், அப்புறம் பாரு அவ கல்யாணத்தை."

வக்ரமாய்ச் சிரித்த பலராமனின் கையில் இருந்த கடிதச் சுருணையை வாங்கிக் கொஞ்ச நேரம் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் கதிர்வேல். பிறகு தன் ப்ரீப்கேஸைத் திறந்து, அழகாய் அடுக்கி வைத்திருந்த, சுகன்யாவின் கையெழுத்துத் தெரியும் கடிதங்களைக் கொத்தாக, குழந்தைபோல் அள்ளினான்.

'உங்கிட்டே இருக்கற கடிதாசுகளையும் எடு; அவ வண்டவாளத்தைத் தண்டவாள மேத்திப்புடுவோம்!"

கதிர்வேல் பதில் பேசவில்லை. மௌனமாய் எல்லாக் கடிதங்களையும் மடக்கி, நீட்டி பலராமனின் சட்டைப் பாக்கெட்டில் துருத்திக்கொண்டிருந்த தீப்பெட்டியை எடுத்து, குச்சி உரசி, முனையில் பற்றவைத்தான்.

பலராமன் வார்த்தை வராமல் பதறப் பதற, தீ ஆவேசமாய் கடிதங்களைக் கடித்துச் சுவைத்து, கரியாக்கித் துப்பியது. எல்லாம் சாம்பலாகும் வரை மௌனத்தில் சயனித்திருந்த கதிர்வேல், பலராமனின் தோளில் தட்டினான்!

"பலராமா! சுகன்யா மேல் தப்பே இல்லே. வசதி வரட்டும், வரட்டும்னு சாக்கு சொல்லி ஒரு பொண்ணோட வாழ்க்கைப் பிரச்னையை சுலபமா எடுத்துக்கிட்ட நான்தான் முட்டாள்!

''வாழ்க்கையோட போராட பயந்து தயங்கி நின்ன என்னைத் தள்ளி வச்சிட்ட அவபேர்ல தப்பே இல்லே. என் பலவீனத்தை ஒத்துக்காம அவ எழுதின லட்டரைக் காட்டி, அவ என் மேல வச்சிருந்த அன்பைக் கொச்சைப்படுத்திப் பழிவாங்கறது கேவலமான சின்னத்தனம்.. அதை நான் நிச்சயம் செய்ய மாட்டேன். அந்த நெனப்புகூட என் நெஞ்சிலே வர கூடாதுங்கறதுனாலதான் லட்டரை எல்லாம் எரிச்சேன்...

"ஏன்னா... நான் இன்னமும் அவளை நேசிக்கிறேன். நான் நேசிக்கற, நேசிச்ச உயிர் என்னிக்கும் நல்லா இருக்கணும்; சந்தோஷமா இருக்கணும்! அப்படி நினைக்கறதும் நடந்துக்கறதும்தான் உண்மையான நேசம்; காதல்!"

கதிர்வேல் கலங்கிய கண்களுடன் பாக்கட்டிலிருந்து தாலி கோத்த தங்கச் செயின் ஒன்றை எடுத்துக் கொஞ்ச நேரம் பார்த்தான்.

தாலியை மட்டும் கழற்றிக்கொண்டு, செயினை பலராமனிடம் நீட்டினான்.

"நீயும், நம்ம பசங்களும் அவ கல்யாணத்துக்குப் போயி, சந்தோஷமா கலந்துக்கிட்டு ஒத்தாசையா இருந்து கல்யாணத்தை நல்ல படியா நடத்திக் குடுங்க. இதை என் அன்பளிப்பா அவளுக்கு 'மொய்' எழுதிடுங்க. இதுதான் நீங்க எனக்குச் செய்யற உண்மையான உதவி..."

கைகள் நடுங்க செயினை பலராமன் வாங்கிக் கொண்டான். கண்கள் பனிக்க, அவன் கைகளைப் பற்றி அழுத்திய கதிர்வேல், குனிந்து ப்ரீப்கேஸை எடுத்துக்கொண்டு மெல்ல படிகளில் இறங்கத் தொடங்கினான்!

பின்குறிப்பு:-

கல்கி 14 ஜனவரி  1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

இந்த 6 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் ஜாக்கிரதை!  

11 வாரம் 11 சுற்று பிரதட்சிணம் செய்ய தோஷம் நீக்கி அருளும் சனி பகவான்!

மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?

குள்ள நீர்யானைக் குட்டியும், அரிய வகை டைனோசர் இனமும்! 

SCROLL FOR NEXT