ஓவியம்; சசி 
கல்கி

சிறுகதை; மாற்றம்!

கல்கி டெஸ்க்

-கிருஷ்ணா

 

"மன்னிச்சுடும்மா. அப்படி நான் பேசி இருக்கக் கூடாதும்மா."

நாகராஜன் சொல்லிவிட்டு கொல்லைப்புறம் நடந்தார்.

அவரின் வார்த்தைகள் ஏற்படுத்திய அதிர்ச்சியில் வீடு நிசப்தமானது.

வீட்டின் தலைவர், கூட்டுக் குடும்பத்தேரை ஓட்டும் சாரதி, அறுபது வயதைக் கடந்தவர், அவர் பார்வையைக் கண்டாலே வீட்டின் செல்ல நாய் கூட பயப்படும் அளவு குடும்பத்தைக் கட்டுக்கோப்பாய் வைத்திருப்பவர், தன்னைவிட வயது குறைந்த, வீட்டுக்கு மருமகளாய் வந்தவளிடம் மனனிப்பு கேட்டு விட்டார்.

வீட்டிலுள்ள மற்றவர்களால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் அனைவர் பார்வையும் லலிதாவைக் குற்றம் சாட்டும் விதமாய்ப் பார்த்தது.

லலிதாகூட இதை எதிர்பார்க்கவில்லைதான். இத்தனை நேரம் கோபத்தில் கத்தியவள் வாயடைத்துப் போய் நின்றாள்.

லலிதா அந்த வீட்டின் இரண்டாவது மருமகள். இரண்டு மகன், இரண்டு மகள், பேரன், பேத்திகள் கொண்ட பெரிய குடும்பம் அது.

லலிதா திருமணமாகி அங்கு வந்து இரண்டு வருடம் ஒன்பது மாதமாகிறது. ஒருமகளும் பிறந்து விட்டாள்.

வீட்டின் சட்டதிட்டங்களை வகுப்பது மாமனார் என்றும், நிர்வாகத்தைக் கையாள்வது மாமியார் என்பதும் வந்ததுமே தெரிந்து போனது.

வந்த புதிதில் அவளுக்கும் ஒற்றுமையான சூழல் பிடித்துத்தான் இருந்தது. லலிதா சும்மா இருந்தாலும் அவள் அம்மா சும்மா இருக்க விடவில்லை.

''பெரிய குடும்பம். பாவம் நீ. இப்படி ஓடா உழைச்சுத் தேய வேண்டியிருக்கு!"

"தெரிஞ்சுதானேம்மா என்னை இங்கு கல்யாணம் செஞ்சு கொடுத்தாய்?"

ஆனாலும் எத்தனை நாள்? கரைப்பார் கரைத்ததில் லலிதாவின் மனமும் கரையலாயிற்று.

இன்று காலை லலிதாவின் பெற்றோர் மகளையும், பேத்தியையும் பார்க்க வந்திருந்தனர்.

வாசலில் பால் வாங்கக் காத்திருந்த சாக்கில் லலிதாவிடம் அக்கம் பக்கம் பார்த்தபடி பேச்சுக் கொடுத்தாள் அவள் அம்மா.-

"என்னமோ போ. எனக்குப் பிடிக்கலே."

"என்னம்மா?"

"உன் வீட்டுக்கு வருகிற மாதிரி ஒரு உரிமையே இருக்க மாட்டேங்குது இங்கே வந்தால் அந்நியர் வீட்டுக்கு விருந்தாளியாய் வந்த மாதிரிதான் இருக்கு.''

"ஏன்?"

''உனக்கு மட்டும்னு ஆசையாய் எது செஞ்சுகொண்டு வர முடியலே.
உன்னோட தனியாய் ஏதும் பேச முடியலே. என் பேத்திக்குக் கூட தனியாய் எதுவும் செய்ய முடியலே."

"என்னம்மா பண்றது? வாழ்க்கைப் பட்டாச்சு இங்கே. இனிமே நினைச்சு என்ன பிரயோஜனம்?"

"நான்தான் அந்தக் காலத்துல பத்து பேருக்கு பொங்கி, வேலை செஞ்சு கஷ்டப்பட்டேன்! உனக்கு எதுக்கு இது? அழகாய் ராணியாட்டம் தனியாய் குடித்தனம் பண்ணலாமே? உன் புருஷனும் தனியாய்த்தானே
சம்பாதிக்கறான்?"

யதேச்சையாய் வாசல்புறம் வந்த நாகராஜன் காதில் இது விழ, ஆத்திரமானார். பளிச்சென்று அவர்கள் முன் தோன்றினார்.

''நல்லாயிருக்கு சம்பந்தியம்மா உங்க பேச்சு. இப்படியா குடும்பத்தைப் பிரிக்கத் தூண்டுவீங்க? நீங்க என்ன சகுனியா? கூனியா?"  நாகராஜன் உச்சகதியில் கத்தவும், நிலைமை மாறிவிட்டது.

லலிதாவின் பெற்றோர் கோபத்துடன் வெளியேறினர். தன் பெற்றோரின் கோபம் லலிதாவைத் தொற்றிக்கொண்டது.

"எங்கம்மாவுக்கு அவுமானம்னா எனக்கும் அவமானம்தான். உங்கப்பா எப்படி அப்படிப் பேசலாம்? இப்படியா குழாயடி முனியம்மா மாதிரி நாகரீகம் இல்லாமல் திட்டறது? நான் இனி இங்கே இருக்க மாட்டேன். அவர் மன்னிப்பு கேட்டே ஆகணும். இல்லைன்னா, தனிக் குடித்தனம்தான்" என்று சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சரியாக அடித்தாள் கணவனிடம்.

பரதன் விழித்தான் செய்வதறியாமல்.

நடுக்கூடத்தில் நின்று கத்தும் மருமகளை உற்றுப் பார்த்தார் நாகராஜன். கையைப் பிசைந்தபடி நிற்கும் மகனையும், அழத்துடிக்கும் பேத்தியையும் கவனித்தார்.

"மன்னிச்சுடும்மா.''

அவரின் ஒரே வார்த்தையில் ஸ்விட்ச் போட்டதுபோல் அனைத்து சப்தங்களும் நின்றுவிட்டன.

கொல்லைப்புறம் நோக்கி நடந்த கணவனைப் பின்தொடர்ந்தாள் பார்வதி.

"என்னங்க...'' என்றவளை ஆதரவுடன் கை பிடித்தார்.

"நீங்க போய்... நேத்து வந்த அந்த சின்னப்பெண்ணிடம்..." என்று தழுதழுத்தவளை முதுகில் தட்டிக் கொடுத்து அமைதிப்படுத்தினார்.

''நான் பேசியதும் தவறுதானே பாரு. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்!"

அங்கு ஹாலில் லலிதா குழம்பிப் போய் நின்றாள். சண்டை போட்டு தனிக் குடித்தனம் போய்விடலாம் என்ற நினைப்பில் மாமனாருடைய மன்னிப்பு தடை போட்டு விட்டது.

இதுவும் ஒரு வழியோ? மன்னிப்பை ஆயுதமாய்ப் பயன்படுத்தி தங்களை இங்கேயே இருத்திட எண்ணமோ?

கொல்லைப் பக்கம் உள்ளே ரேழியில் மறைவாய் நின்று அவர்கள் பேச்சைக் கவனித்தாள்.

மாமனார், 'தான் பேசியது தவறுதான்' என்று சொல்வது காதில் விழ, முனைப்பாய் கேட்டாள்.

"நீங்க இப்படிப் பேசியதுக்குக் காரணம் சம்பந்தியம்மா நடந்துக்கிட்ட முறையினாலேதானே. நம்ம பையன்கூட லலிதாவை அதட்டாம வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்னானே. ச்சே!" என்று பார்வதி குறைப்பட்டாள்.

"பரதனை குற்றம் சொல்லாதே பாரு."

"ஏன்? அவன் நடுவில் புகுந்து அடக்கியிருந்தா லலிதா அப்படி பேசியிருப்பாளா?"

''ஆம்பளைங்க குழப்பமே இதுதான்!"

''என்ன சொல்றீங்க?"

''வெளியிலே ஆயிரம் பேரை சமாளிப்பான்;  ஆயிரம் பிரச்னையை ஊதி சரியாக்குவான். ஏன்னா, அது எங்க உலகம். ஆனால் வீடு என்பது ஆண்களைப் பொறுத்தவரை அந்நியம்தான். ''

''என்ன இப்படி சொல்றீங்க?"

''உண்மை பாரு. பகலெல்லாம் வெளியிலே உழைச்சுட்டு ராத்திரி புத்தியும், மனசும் களைச்சுப்போய் வீடு திரும்பற ஆண்களுக்கு, வீடுங்கறது இராத்தங்கற இடம்தான். மனைவியோட அன்பு, குழந்தைங்களோட பிரியம் இதெல்லாம் இருக்கிற சத்திரம். யோசிச்சுப்பாரு, உனக்கே புரியும்''

''அதுக்காக? அவன் வீடுங்கறது இல்லாமப் போயிடுமா?"

"அவன் வீடுதான். ஆனால் வீட்டுப் பிரச்னையை சமாளிக்கத் தெரியாது ஆண்களுக்கு. 'பணம் வேணுமா, கேளு. தரேன். இந்த வீட்டுக் குழப்பத்துல என்னை இழுக்காதே' என்று கைதூக்கிடுவாங்க மனைவியிடம். வெளியிலே பலருக்கு மத்யஸ்தம் செய்யறவனுக்கு, வீட்டுல அம்மா, மனைவி இடையே உள்ள சண்டையை சரி பண்றது கஷ்டம்தான்.'"

"அடப் போங்க!'

''நிஜம் பாரு. அப்படியே மத்யஸ்தம் செய்ய ஓரிரு முறை முயலும்போது படற அடி கண்டு வாயை மூடிக்கிறான். இப்ப நடந்ததையே எடுத்துக்க. சம்பந்தியம்மா பேசினதைக் கேட்டதும் நேரே உன்னிடம் வந்து சொல்லியிருந்தால் இப்படி பிரச்னை பெரிசாயிருக்காதே?''

''தனிக் குடித்தனம் போகணும்னு லலிதா மனசுலேயும் ஆசை வந்துடுச்சு. விட்டுட வேண்டியதுதானே? எதுக்கு நீங்க மன்னிப்புக் கேட்டு அதைத் தடுக்கணும்...?''

"புரியாமப் பேசாதே பாரு. அவங்க தனிக்குடித்தனம் போனால் நமக்கு மனக் கஷ்டம்தான். ஆனால் கொஞ்ச நாளில் சரியாயிடும். ஆனால் அவங்க நிலைமை வேற மாதிரி."

"புரியலியே!"

'பரதன் வாங்கற சம்பளம் எவ்வளவு?"

''ஆயிரத்து இருநூறு கொண்டுவரான், பிடித்தம் எல்லாம் போக."

''குடும்பம் நடத்த இது போதுமா. வாடகை, மளிகை, அடுத்த வருடம் நம்ம பேத்தி ஸ்கூலில் வேறு சேர்ந்துடுவா. இங்கே கூட்டுக் குடும்பங்கறதுனாலே வசதியாய் வாழ்ந்து பழகிட்டு, திடீர்னு பணக் கஷ்டம் வந்தா என்னாகும்?"

"என்னாகும்?"

''பணம் இல்லேன்னா ஆம்பளை மனசுல ஒரு தாழ்வுணர்ச்சி வரும். அது கோபமாய் லலிதா மேலே பாயும். அவ உடனே ஆத்திரமாகி பேத்திமேலே கொட்டுவா. தனிக்குடித்தன ஜோர் முதல்ல கொஞ்ச நாளைக்கு நல்லாயிருக்கும். பிறகு? நல்ல ஸ்கூலில் படிக்க வேண்டிய நம்ம பேத்தி சாதாரண பள்ளியில் சேர நேரிடும். பரதனோட சந்தோஷமான தாம்பத்யம் கெட நேரிடும்.

"அதை லலிதா நினைச்சுப் பார்க்கலியே. நீங்க ஏன் கவலைப் படறீங்க?''

"அப்புறம் நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்?  நாம இங்கே நெய்யும், பாலும், ஸ்வீட்டுமாய் சாப்பிடறப்ப, நம்ம மகனோ, மருமகளோ, பேத்தியோ கஷ்டப்பட்டால் நமக்கு சாப்பாடு உள்ளே இறங்குமா? லலிதா நல்ல பொண்ணுதான். சீக்கிரமே புரிஞ்சுப்பா இதையெல்லாம். இள வயசு ரத்தம். யோசிக்க விடாம துடிக்குது. பெரியவங்க நாமதான் அணை போடணும். எல்லாம் அவங்க நன்மைக்குத்தானே!"

மாமனாரின் பேச்சு முழுவதுமாய்க் காதில் விழ, திகைத்துப் போய் நின்றாள் லலிதா.

அவள் கண்ணில் நீர் பெருக்கெடுத்தது. அது அவள் உள்ளக் கரைசலின் ஊற்று.

பின்குறிப்பு:-

கல்கி 29  மே 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT