-தி. சிவசுப்பிரமணியன்
தலையைச் சற்று அழுத்தமாய் வாருகையில் சீப்போடு சில முடிக்கற்றைகளும் சேர்ந்து வரலாயிற்று. 'முடி நிறையக் கழிய ஆரம்பித்து விட்டேதோ' குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு 'முடி உதிர்தல்' ஆரம்பித்து விடுமாமே. எனக்கு அவ்விதம் 'முடி உதிர்தல்' தொடங்கிவிட்டதா? இன்னும் கொஞ்ச நாளில் நெற்றி மேட்டின் இருபுறமும் வழுக்கை விழுந்து விட நேரிடுமோ? யோசனை வந்தது. கூடவே கவலையும்.
கண்ணாடி பார்த்துக் கவலைப்படுகையில் ஏதோ உறுத்தல் தோன்றிற்று. திரும்பிப் பார்த்தபோது நிலைப்படி அருகில் நின்று சிவகாமி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
சிவகாமி எப்போதும் இவ்விதம்தான். அதிகம் அதிர்வுகளின்றிதான் இருக்கும். அவளது பேச்சும் செயலும், எதிலும் ஒரு மென்மை பரவி இருக்கும். கல்யாணமான இந்தப் பதினேழு வருடங்களில் அதிர்ந்து அவள் பேசி நான் கேட்டதில்லை. "வீடு என்பது இதமான விஷயம்" என்கிற சூழலை உருவாக்க அதுவே காரணமாயிற்று.
"என்ன, அலங்காரம் ரொம்ப அமர்க்களப் படறது? 'மார்க்கண்டேயனா'வே இருந்துடலாம்னு உத்தேசமா?"
கேள்விக்குப் பதில் பேசாது லாகவமாய் நரைமுடி ஒன்றைக் கத்தரிக்கோலால் வெட்டி எறிந்து விட்டு, வேறெங்கேனும் நரை தெரிகிறதா என்று ஆராய ஆரம்பித்தேன்.
"அப்போ 'மார்க்கண்டேயன்' இல்லை"
''என்னது?"
வயசாயிடுச்சின்னு அர்த்தம். இனிமேயாச்சும் அதிக ஆர்ப்பாட்டம் பண்ணாத இருக்கணும்னு அர்த்தம்"
"நீ வேற. இது பித்த நரையாக்கும்"
"ஆமா. முப்பத்தி ஒம்போது வயசில வர்றதுக்குப் பேரு பித்த நரையாக்கும்."
சின்னதாய்ச் சிரித்தாள். தண்ணீரில் வெடித்து வருகிற நீர்க்குமிழிகள் மாதிரி அந்தப் புன்னகை எனக்குத் தோன்றிற்று. குழந்தைகள் எழுந்து வந்துவிடவே, அந்தப் பேச்சைப் பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று.
அன்றைக்கு மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தபோது, வாசற்படியில் கிடந்த செருப்பு பார்த்ததுமே புரிந்து போயிற்று. யார் வந்திருப்பது என்று. நர்மதாதான் வந்திருக்கிறாள். என் தங்கை நர்மதா 'சாதாரணமாய் வந்திருக்கிறாளா அல்லது வழக்கம்போல் ஏதும் பிரச்னைகளுடனா?' மனதில் கேள்வி வந்தது.'இந் நேரத்துக்கு, சாதாரணமாய் வர வாய்ப்பில்லையே' - யோசனை அதிகக் கவலையும், அயர்ச்சியும் தரலாயிற்று. மெல்ல எழுந்த பெருமூச்சை அடக்கியபடி உள் நுழைந்து, 'வா, நர்மதா' என்றேன்.
அவள் முகம் பார்த்தவுடனேயே புரிந்து போயிற்று. உணர்ச்சி வசப்பட்ட முகமும், சிவந்து, கண்ணீர் மழை கொட்டத் தயார் என்கிற ரீதியிலான விழிகளும் அதைக் காட்டிக் கொடுத்தன.
இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. சொல்லவும் கூடாது. அது தவறாய் முடியும். மனதுக்குள் எழுந்த தீர்மானத்துடன், "ஆபீசுக்கு நேரமாச்சு சிவகாமி. சாப்பிட்டுட்டு சீக்கிரம் போக வேண்டி இருக்கு இன்னிக்கு?"
சின்னப் பொய்யைச் சொல்லிவிட்டு, அவசரமாகச் சாப்பிடலானேன். செல்வி சமையற்கட்டின் உட்புறம் ஒதுங்கிக்கொண்டாள் பதில் பேசாது.
மனசு கஷ்டமாகத்தான் இருந்தது. கிளாஸுக்கே போக மாட்டாரு. ஆனாலும் வேறு வழியில்லை. கிளம்புகையில் சிவகாமி வாசல் வரை வந்து, மெதுவாகச் சொன்னாள். "பாவங்க அது. இப்பதான் வந்துச்சி. என்ன, எதுன்னு ஒரு வார்த்தை கேக்கலாமில்லை? அதும் முகத்தைப் பார்த்தவுடனேயே ஏதோ பிரச்னைன்னு தெரிஞ்சுப் போச்சு. விசாரிச்சாத்தானே சொல்லும். நீங்க பாட்டுக்குப் போனா, அதும் மனசு கஷ்டப்படாதா?"
"வேண்டாம் சிவகாமி. நான் ஒண்ணும் கேக்கப் போறதில்லை. நீயும் கேக்க வேணாம். அவளா எதுவாச்சும் சொன்னா, அப்படியான்னு சாதாரணமாகக் கேட்டுக்க. சாயங்காலம் 'விவரமா' பேசிக்கலாம்" அவசரமாய் ஸ்கூட்டரைக் கிளப்பினேன். காற்று மெல்ல வீசி தலைமுடியைப் பின்னே தள்ள. மனசும் பின்னோக்கிப் போயிற்று.
நர்மதா எங்கள் வீட்டின் கடைக்குட்டி. இயல்பாகவே, எந்த வீட்டிலும் கடைசிக் குழந்தைக்கு 'செல்லம்' ஜாஸ்திதான். அதிலும், நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்து அதற்கு அப்புறம் அம்மாவும், அப்பாவும் கோவில், குளம், சாமி என்று வேண்டிப் பிறந்த வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டமாயிற்று. வேண்டியது வாங்கிக் கொடுக்கப்பட்டது. ஆனால், அதுதான் தவறாய்ப் போயிற்று.
நர்மதாவுக்கு குழந்தை சுபாவம். எந்த விஷயத்திலும் அவள் நினைத்ததுதான் நடக்க வேண்டும். அவ்விதம் நடக்காவிடில், கோபம் பன்மடங்காகி விடும். இதெல்லாம் சின்னச் சின்னக் குறைகள் பெரியவளானதும் சரியாகி விடும்' என்று நினைத்தது நடக்காது போயிற்று.
கல்யாணமான பிறகுகூட அவள் சுபாவம் மாறாது போயிற்று. உள்ளுரிலேயே 'அண்ணன்' வீடு இருப்பது வசதியாயிற்று. கோபப்பட்டு புருசன் வீட்டில் தகராறு செய்து அவள் என் வீடு வருவதும், நான் இரண்டு நாள் பொறுத்து அவளைச் சமாதானம் செய்து, நல்ல புத்தி சொல்லி, அவள் புருஷனிடம், தங்கைக்காய் மன்னிப்பு கேட்டுக் கொண்டு போய் விடுவதும் வாடிக்கையாயிற்று.
இது மாதிரி நாலைந்து முறை நேர்ந்துவிட்டது. சென்றமுறையே இது எனக்கு அதிகம் கவலை கொடுத்தது. இந்த முறை அது மேலும் அதிகமாயிற்று. இதை இவ்விதமே விட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவுதான் நான் நர்மதாவிடம் இன்று காட்டிய பாராமுகம்.
இரவு நான் வீடு திரும்ப கொஞ்சம் லேட்டாயிற்று. அலுவலகத்தில் அக்கவுண்டன்ட் ஒருவர் ஓய்வு பெறுகிறார். அவருக்கு 'பிரிவு உபசா விழா' நடத்தி அவரைப் புகழ்ந்து நினைவுப் பரிசு கொடுத்து ஒவ்வொருவரிடமாய் அவர் விடைபெற்று.... நேரமாகி விட்டது. அதில் வீட்டுக்கு வர லேட்டாகி விட, நர்மதா இல்லை.
"அவள் கிளம்பிச் சென்று விட்டாள்" என்று சிவகாமி சேதி சொன்னாள். 'என்னைக் குற்றம் சாட்டுகிற தொனி' அவள் பேச்சில் இருந்ததை உணர முடிந்தது. உண்மைதான். நான்கூட அவளிடம் ஏதேனும் கேட்டிருக்கலாம். கேட்டால் அவள் உடைந்து, சுய இரக்கம் அவளைப் பற்றிக்கொண்டு பிரச்னையின் தன்மையிலிருந்து அவளை விலகச் செய்து விடும். தன்னை அவள் உணர இயலாது போகும். 'அன்பு' என்பது சில சமயம் இவ்விதம் தான் பலவீனமாக்குகிற விஷயந்தான். நர்மதா பலவீனப்படுவதை நான் விரும்பவில்லை. அவள் உரமாய் நிற்பதைத்தான் நான் விரும்பினேன். அதனால்தான் அவள் பிரச்னையைக் கிளறாது போய் விட்டேன். அதனால் தான், "அடுத்து என்ன செய்வது?" என்று அவளே முடிவெடுத்துக் கிளம்ப வேண்டியதாயிற்று.
இதையெல்லாம். சிவகாமியிடம் விலாவாரியாய் எடுத்துச் சொல்லவில்லை. களைப்பும், அயர்ச்சியும் சேர்ந்திருந்ததால் பதில் பேசாது படுத்து விட்டேன்.
மறுநாள் கண்ணாடி பார்த்தபோது, மேலும் ஐந்தாறு நரை முடிகள் தலையில் தெரியலாயிற்று. கத்தரிக்கோலைக் கையில் எடுத்தபோது, மனைவி சொன்னது ஞாபகம் வந்தது.
யோசித்தபோது ஒரு விஷயம் தெளிவாய்ப் புரிந்து போயிற்று. நர்மதாவின் பிரச்னையோ எனது நரை முடியோ இரண்டு ஒன்றுதான். இதை இவ்விதம் சும்மா விட்டுவிடுதலே உத்தமம். இரண்டுமே வெட்ட வெட்ட மறுபடி முளைக்கும். 'வயதானால் நரை' என்பது மாதிரி, குடும்பம் என்றால் பிரச்னை என்பதும் இயல்பான விஷயங்கள். இயல்பைத் தவிர்த்தல் இயலாத காரியம்.
தெளிந்த சிந்தனையோடு மறுபடி கண்ணாடி பார்த்தபோது, 'நரை' கம்பீரமாகத் தோன்றிற்று.
பின்குறிப்பு:-
கல்கி 04 ஆகஸ்ட் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்