-ஜெ. ஜெயக்குமார்
கர்னூல், ஆந்திராவின் இன்னொரு தலைநகரமாகும் என்ற அறிவிப்பு சிவகுருவை கடந்த காலம் நோக்கி சற்று அசை போடவைத்தது. 1980களில் ஒரு முறை பெங்களூரில் இருந்து இரவில் அவர் ரயிலில் கர்னூல் செல்ல வேண்டி இருந்தது.
அதற்கு முந்திய மூன்று நாட்களும் பெங்களூர் ‘வெஸ்ட் எண்ட்’ ஹோட்டலில் வருடாந்திர கான்பெரென்ஸ் என்பதால் ரீஜினல் சேல்ஸ் மேனேஜர் என்ற முறையில் சிவகுருவுக்கு ஏகப்பட்ட வேலை. வருடாந்திர விற்பனை டார்கெட், மாவட்ட வாரியாக சாதனை விபரங்கள், ஒவ்வொரு மருந்து பிரதிநிதிக்கும் டார்கெட், அவர்தம் சாதனை என்று ஏகப்பட்ட வேலை சிவகுருவுக்கு.
மிகுந்த களைப்புடன் ரயிலில் ஏறிய சிவகுரு, இரவுப் பயணம் என்பதால் உறங்க ஆரம்பித்துவிட்டார். அவரோடு பயணப்பட்ட கர்னூல் மருந்து பிரதிநிதி மூர்த்தி சிறிது நேரம் ஏதோ படித்துவிட்டு அவரும் உறங்கிவிட்டார். இரவு மூன்று மணிக்கு கர்னூல் அடையும் ரயிலின் தண்டவாள தாலாட்டினால் ஆழந்து உறங்கிய அவர்களுக்கு கர்னூல் வந்தும் அறியமுடியவில்லை
கர்னூலை தாண்டி ஒரு நதியின் பாலத்தில் ‘கடா கடா’ என்ற சத்தத்துடன் ரயில், சென்றபோது இருவரும் திடுக்கிட்டு விழித்தனர். தொலைவில் பின்னோக்கி செல்லும் கர்னூல் நகர் விளக்குகள்! இனி அடுத்த ஸ்டேஷனில்தான் ரயில் நிற்கும். அவர்கள் டிக்கட்டோ கர்னூல் வரைக்கும்தான்
வெட்கமும், விரக்தியும் தூக்க கலக்கமும் அவர்களை தீண்டியது. சற்று நேரம் கழித்து ஒரு சிறிய ஸ்டேஷனில் ரயில் நின்றது. இருவரும் சூட்கேஸ்களுடன் இறங்கினர். உடனே வெளியே சென்றால் டிக்கட் பரிசோதகர் பிடித்துவிடுவார் என்று அஞ்சி பிளாட்பாரத்தில் சற்று தொலைவில் இருட்டில் இருந்த பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர். ரயில் புறப்பட்டு சென்றவுடன், ஆள் அரவம் அடங்கி ஸ்டேஷன் மீண்டும் உறங்கத்தொடங்கியது.
சிறிய ஸ்டேஷன் என்பதால் ஸ்டேஷன் மாஸ்டரே டிக்கட் பரிசோதகராகவும் செயல்பட்டுவிட்டு அவர் அறைக்கு சென்று உறங்க தொடங்கிவிட்டார். வெகு நேரம் சென்று சிவகுருவும் மூரத்தியும் வெளியே செல்லும் வாசலை நெருங்கினர்.
அவர்கள் வெளியேறிய தருணத்தில், திடீரென்று அவர்களை அதட்டி கூப்பிட்டது ஒரு குரல். கூப்பிட்டது ஒரு குதிரை வண்டிக்காரன்! அவன் ஹிந்தியில் அதட்டும் குரலில் டிக்கட் கேட்டான். சிவகுருவுக்கு ஹிந்தி தெரியாததால் ஹிந்தி தெரிந்த மூர்த்தி இளைஞனுக்கே உரிய கோபத்துடன் நீ யார் எங்களிடம் டிக்கட்டை கேட்க? என்று தன் குரலை உயர்த்த, சற்று நேரத்தில் இருவருக்கும் வார்த்தை யுத்தம் மூண்டது.
அனைத்தும் ஹிந்தியில் நடந்தாலும் சிவகுரு ஓரளவுக்கு புரிந்துகொண்டார். விஷயம் இதுதான். ஸ்டேஷன் மாஸ்டர் அவர்கள் இருவரும் சூட்கேஸ்களுடன் இறங்குவதை கவனித்துள்ளார். விடியற்காலை இருட்டில் இருவரும் டிப் டாப்பாக இறங்கியது அவர் கவனத்தை ஈர்த்துள்ளது. இருவரும் வண்டி சென்ற பிறகு வெகுநேரம் கழித்தும் வெளியே செல்லாததால் அவர் சந்தேகம் இன்னும் வலுத்தது.
அந்த சின்ன ரயில்வே ஸ்டேஷனிலிருந்து எங்கு போவதாக இருந்தாலும் அதுவும் அதிகாலை இருட்டில் குதிரை வண்டியில்தான் சென்றாக வேண்டும்.
எனவே, டிக்கட் பரிசோதகர் அங்கிருந்த முதல் குதிரை வண்டிக்காரனிடம் விபரத்தை சொல்லி, இருவர் வெளியே வந்தால் டிக்கட் வாங்க சொல்லி இருக்கிறார்! இப்போது குதிரை வண்டிக்காரன் ஆக்டிங் டிக்கட் கலெக்டர்
வார்த்தை யுத்தம் விபரீதமாக போவதை உணர்ந்த சிவகுரு. ‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்’ என்று மூர்த்தி மற்றும் குதிரைக்காரனை அழைத்துக்கொண்டு நேரே ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு சென்றார்.
கர்னூல் வரையிலான தங்கள் டிக்கட்டுகளை காண்பித்து அசதி காரணமாக தாங்கள் தூங்கி, ஸ்டேஷனை தவற விட்ட காரணத்தை விவரித்து, மானசீகமாக மன்னிப்புக் கோரினார்.
இதுபோல் ஏற்கனவே சில சம்பவங்கள் நடந்ததை அறிந்தவர். ஆதலால் ஸ்டேஷன் மாஸ்டர் அவர்களை பெருந்தன்மையுடன் மன்னித்து, அதே குதிரை வண்டிக்காரனை “ராமுடு! இவங்க ரெண்டு பேரையும் பஸ் ஸ்டாண்ட்டில் விட்டு விடு" என்று தெலுங்கில் அன்புக்கட்டளையிட, அவனும் அதிகாலையில் ஒரு சவாரி கிடைத்ததால் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றான்.
பஸ் ஸ்டாண்டில் அவன் இறக்கி விட்டவுடன் அவன் கேட்ட கூலியைவிட கூடவே சிவகுரு கொடுத்ததில் அவனுக்கு ஒரே சந்தோசம். போகும்போது அவன் மூர்த்தியை பார்த்து முறைத்துக்கொண்டே சென்றான்!
கர்னூல் செல்லும் பஸ்ஸில் ஏறியபிறகு, சிவகுரு, தன் ஜூனியரிடம் "கைக்குள் அடங்கும் பிரச்னையை, கடும் வார்த்தைகளைக் கொட்டி கையை விட்டு போகும்படி செய்வது எந்த விதத்திலும் உதவாது” என்று அறிவுறுத்தினார்!