ஓவியம்; அரஸ் 
கல்கி

சிறுகதை – பிறவிக்குணம்!

கல்கி டெஸ்க்

-ஆர்னிகா நாசர்

12.4.1991 வெள்ளிக் கிழமை இரவு 10:30 மணி

ஷிப்ட் முடிந்து மொபெட்டில் புறப்பட்டான் ராதாகிருஷ்ணன். அவன் வீட்டுக்குச் செல்ல பேருந்து நிலையத்தைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். இரண்டு சக்கர வாகனம் பேருந்து நிலையத்தைத் தாண்டும்போது இருளான பிளாட்பாரத்திலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது. கையில் கனத்த சூட்கேஸ் வைத்திருந்தது.

“சார்!” என்ற விளிப்பில் மொபெட்டை நிறுத்தி, காலூன்றினான் ராதா. கூப்பிட்டவன் ஓடி வந்தான்.

"சார்! ஒரு உதவி!" இறைஞ்சினான்.

"என்ன... சொல்லுங்க..." கனிவாய்க் கேட்டான் ராதா.

"நான் சென்னை செல்ல வேண்டும். இடம் இல்லாமல் மூன்று பஸ்கள் போய் விட்டன. இனி அடுத்த பஸ் விடிகாலை 4:30 மணிக்குத்தானாம். பஸ் ஸ்டாண்டில் தங்கிப் பழக்கமில்லை. லாட்ஜ்களில் திருட்டுப் பயம். இன்றிரவு மட்டும் உங்கள் வீட்டில் தங்க இடம் கொடுத்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன். காலையில் சென்னைக்குப் புறப்படுவேன்...''

''உங்க பேர்?"

''திலீபன்...'"

''என் பெயர் ராதாகிருஷ்ணன். சுருக்கமாக ராதா. ஆமா... உங்க சொந்த ஊர் நாகர்கோவிலா? உங்க தமிழ் ஒரு மாதிரி இருக்கு?"

திலீபன் தயக்கமாய்த் தலையாட்டினான். ''ஆமாம் சகோதரரே!''

"புறப்படுங்கள் என்னுடன். தாராளமாக நீங்கள் என் வீட்டில் தங்கலாம்...''

திலீபன் பின்னே உட்கார - ராதா மொபெட்டைக் கிளப்பினான்.

ராதா வீடு தீப்பெட்டி சைஸில் இருந்தது. மொபெட்டை நிறுத்திவிட்டுப் போய் கதவைத் தட்டி குரல் கொடுத்தான். அகால வேளையிலும் கணவனுடைய குரலுக்காகக் காத்திருந்ததுபோல் உடன் பதில் குரல் கொடுத்தாள் அவனின் மனைவி. ஐந்து நொடி கரைசலில் கதவைத் திறந்து விட்டாள்.

ராதா திலீபனைச் சுட்டி, "சார் நம்ம கெஸ்ட் குட்டிம்மா!" என்றான். திலீபனிடம் திரும்பி, "இது என் மனைவி அகல்யா.

படுக்கையில் ஒரு வயதான அம்மா தூங்கிக்கொண்டிருந்தார். ராதா திலீபனிடம் திரும்பி, "எங்கம்மா!" என்றான் பெருமையாக.

''குட்டிம்மா! என்ன சமையல் பண்ணிருக்க?"

"மிளகு ரசம்தான். புடலங்காய் கூட்டு மதியம் பண்ணினது. இப்ப அப்பளமும் முட்டையும் பொரிச்சிடுறேன். கூடுதலா வெங்காய சாம்பார் பண்ணிடுறேன்...''

திலீபன் சங்கோஜமாய், "கஷ்டப்படாதீங்க சகோதரி. இருக்கிறதைக் குடுங்க... சாப்பிட்டுக்கிறேன்."

அகல்யா கேட்காமல் மண்ணெண்ணெய் ஸ்டவ்வுடன் போராடி சமையல் முடித்தாள். அதற்குள் தலையணைக்கு சலவை உறை மாற்றி பாயும், பெட்ஷீட்டும் திலீபனுக்காக விரித்து வைத்தான், ராதா.

சாப்பாடு பரிமாறினாள் அகல்யா.

"சகோதரர் அதிர்ஷ்டசாலி. அகால நேரத்தில் அழையா விருந்தாளியை கணவன் கூட்டி வந்ததும் முகஞ்சுளிக்காமல் விருந்தோம்பல் செய்யும் மனைவி கிடைப்பது அரிது. அதைவிட முக்கியமான விஷயம்... சமையலில் அன்பு தெரிகிறது. இதற்கு நானென்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?"

"இதென்ன சார் பெரிய விஷயம்? நீங்க ரெஸ்ட் எடுங்க..." என்றாள் அகல்யா. மீதமிருந்த சொற்ப சாதத்தில் அடிதங்கிய ரசம் ஊற்றிச் சாப்பிட்டாள்.

மஞ்சள் நிற விடிவிளக்கு எரிய –

ராதா திலீபனுக்கு அருகிலும் அகல்யா இரு குழந்தைகளுக்கு அடுத்தும் படுத்துக்கொண்டாள். திலீபன் தான் கொண்டு வந்த சூட்கேஸைத் தலையணைக்கு பதில் தலைக்கு வைத்து படுத்திருந்தான். புது இடத்தில் சட்டென தூக்கம் வராமல் புரண்டான்.

அலாரம் நான்கு மணிக்கு விடாப்பிடியாய் ஒலித்தது. திலீபன் குளிக்க வெந்நீர் போட்டுக் கொடுத்தாள். குளியலுக்குப் பின் சுடச்சுட இட்லியும் தேங்காய்ச் சட்னியும் புதினா சட்னியும் பரிமாறினாள். ராதா திலீபனை மொபெட்டில் கூட்டிப் போய் சென்னை பஸ் ஏற்றி விட்டான்.

19.8.1992 புதன் கிழமை இரவு 8:45 மணி

காவல்துறை தலைமையகத்திலிருந்து வந்த வயர்லெஸ் தகவல் கரகரத்தது.

“................ மூன்றாவது குறுக்குத் தெருவில் 18ஆம் நம்பர் பங்களாவில் ஐந்து விடுதலைப் புலிகள் தங்கியிருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அவர்களுக்கும் ராஜீவ் கொலைக்கும் நேரடித் தொடர்பிருக்கலாம். ரவுண்ட் அப் தி ஸ்பாட்! அரஸ்ட் தெம் ஆர் கில் தெம்! கமான் குயிக்! ஓவர்!"

அதிரடிப்படை அந்த பங்களாவைச் சூழ்ந்துகொண்டது. தொடர்ந்து நள்ளிரவு வரை துப்பாக்கிச் சண்டை!

ஒரு திடீர் நிமிஷத்தில் அதிரடிப்படை, பங்களாவின் மேற்கூரையை நகர்த்தி உள்ளே புகுந்தது. புலிகள் கடைசி உபாயமாக சயனைட் குப்பியைக் கடித்தனர். ஒரு அதிரடி வீரன் ஒரு புலியுடன் போராடி சயனைடைக் துப்ப வைத்து முறிவு இன்ஜெக்ஷன் போட்டான். அப்படியும் விஷம் மூளையைத் தாக்கி கோமா நிலைக்குப் பாய்ந்தான் அந்தப் புலி. அவன் வேறு யாருமல்ல - 12.4.91 இரவன்று ராதாகிருஷ்ணனின் வீட்டில் விருந்தாளியாய்த் தங்கின திலீபன்! கோமா நிலையில் திலீபன் இன்டென்ஸிவ் கேர் யூனிட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான். பங்களா ஆராயப்பட்டதில் எரியாமல் தப்பிய திலீபனின் டைரி சிக்கியது. டைரியில் காணப்பட்ட ஏராளமான முகவரிகளில் ஒன்று. ராதாகிருஷ்ணனின் முகவரியும் ஒன்று.

21.10.1992 சனிக்கிழமை இரவு 9 மணி

நூற்றுக்கு மேற்பட்ட போலீஸ் ராதா வீட்டைச் சூழ்ந்தது. சர்ச் விளக்கு ராதா வீட்டுச் சுற்றுப்புறத்தை பகலாக்கியது. எஸ்பி மெஹா போனில் ராதாவைச் சரணடையச் சொன்னார்.

ராதா வியர்த்து ஸ்தம்பித்தான். குழந்தைகள் அகல்யாவைக் கட்டிக்கொண்டு அழுதன. ராதாவும் அகல்யாவும் தத்தம் கைகளை உயர்த்தியபடி எஸ்பியிடம் நடந்தனர்.

"எ... என்ன சார் இது?"

"என்னடா நடிக்கறே? புலிகளோட சேர்ந்து பெரிய பெரிய சதி வேலைகள் பண்ணிட்டு அம்மாருசியாட்டம் நடிக்கற?"

"சார்!" அழுதான்.

"நீங்க தேடும் ராதாகிருஷ்ணன் இவரில்லை. இவர் ஒரு அப்பாவி. தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்..."

"நோ. இதோ புலியோட டைரில உன் புருஷனின் முழு முகவரி. மிஸ்டர் ராதாகிருஷ்ணன்! 'தடா' சட்டப்படி உங்களைக் கைது செய்கிறோம். அதற்கான அரஸ்ட் வாரன்ட் இது! உங்கள் வீட்டைச் சோதனையிடப்போகிறோம். அதற்கான சர்ச் வாரன்ட் இது!''

கூட்டம் குழுமி வேடிக்கை பார்த்தது. யாரும் ராதாவுக்கு ஆதரவாய்ப் பேச வரவில்லை. பேசினால் தானும் தடா சட்டத்தால் கைது செய்யப்படுவோம் என்ற பயம்.

அகல்யா கதறினாள். “என் புருஷன் நிரபராதிய்யா..."

“உன் தரப்பு நியாயத்தை வக்கீல் வச்சு கோர்ட்ல சொல்லு..." ராதா கையிலும் காலிலும் விலங்கிடப்பட்டு ஜீப்பில் ஏற்றப் பட்டான்.

"அகல்யா! குட்டிம்மா... பயப்படாதேம்மா... நியாயம் ஜெயிக்கும். குழந்தைகளை பத்திரமா பாத்துக்க. எங்கம்மாவுக்கு விஷயம் தெரிய வேணாம்... மானஸ்தி... உயிர விட்ருவா..."

போலீஸ் வீட்டுக்குள் புகுந்து துவம்சம் பண்ணியது. திகிலாய் நடப்பதை உன்னித்தனர் குழந்தைகள். காது முழுமையாய்க் கேளாத ராதாவின் அம்மா ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.

அகல்யாவுக்கு அது விடியாத இரவானது.

ஒவ்வொரு வக்கீல் வீட்டுக்கும் ஓடினாள்.

"தடா சட்டம்னா ஜாமீனில் வரதே ரொம்பக் கஷ்டம்மா. இப்ப ஒண்ணும் பண்ண முடியாது. நாளைக்கி வாம்மா பாப்போம்... "

22.10.1992 வியாழன் – 3.10.1993 ஞாயிறு

திவுத் தபாலைப் பிரித்தாள் அகல்யா. தொழிற்சாலையிலிருந்து வந்திருந்தது. ராதாகிருஷ்ணன் சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்தான். சுவரில் சாய்ந்தாள் அகல்யா.

வாசல் கதவைத் திறந்துகொண்டு வீட்டு உரிமையாளர் நுழைந்தார்.

"இந்தாம்மா! உங்களையெல்லாம் நல்லவங்கன்னு நினைச்சுத்தான் குடி அமர்த்தினேன். புலி ஆதரவாளருக்கு என் வீட்ல என்ன வேலை? உடனே காலி பண்ணுங்கம்மா..."

"திடீர்னு காலி பண்ணச் சொன்னா எங்கய்யா போறது?"

''கூண்டோட விஷம் சாப்ட்டு செத்துப் போங்க. பூமிக்கு பாரம் குறையும்.''

"இந்த ஒரு வாரத்ல வீட்டைக் காலி பண்றோம். இதுக்கு மேல நீங்க எதுவும் பேச வேண்டாம்..."

"சொன்ன மாதிரி நடந்துக்கங்க..." அவர் போனவுடன் குழந்தைகள் அகல்யாவின் கால்களைக் கட்டிக்கொண்டன.

அகல்யா ஒரு தமிழ் வார இதழ் உதவியுடன் பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ராதா சார்பாக ஜாமீன் மனுதாக்கல் செய்தாள். பப்ளிக் பிராஸிக்யூட்டர் வாதத்தைக் கேட்டபின் ஜாமீன் மறுத்து மேலும் ஒரு மாதம் காவல் நீட்டினார் சிறப்பு நீதிபதி. போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

4.10.93 திங்கட் கிழமை காலை 11 மணி.

சிறப்பு நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த போலீஸ் காவல். உள்ளே செல்பவர்கள் மெட்டல் டிடக்டரால் சோதனை செய்யப்பட்டனர்.

நீதிபதி, "இந்த வழக்கில் 32வது எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள திரு. ராதாகிருஷ்ணனுக்கும் சதியாளர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என நம்புகிறேன். காவல் துறை, ராதாகிருஷ்ணனின் வீட்டில் கைப்பற்றியதாகக் கூறும் ஜெலட்டின் குச்சிகள் உண்மையில் வேறொரு எதிரி இருப்பிடத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாக 12வது எதிரி மார்ட்டினின் வாக்குமூலம் கூறுகிறது அதைவிட முக்கியமாக, 11 மாதங்களுக்கு மேல் கோமாவில் கிடந்த திலீபன், தன் மரண வாக்குமூலத்தில் ராதாகிருஷ்ணனுக்கும் சதியாளிகளுக்கும் தொடர்பில்லை எனக் கூறியிருக்கிறார். இவற்றையெல்லாம் கணக்கில் வைத்து
திரு. ராதாகிருஷ்ணனை இவ்வழக்கிலிருந்து குற்றமற்றவராய்க் கருதி விடுவிக்கிறேன். இந்த ஒரு வருடத்தில் திரு.ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்களுக்கு இந்த நீதிமன்றம் வருந்துகிறது!" தீர்ப்பளித்தார். ராதாதலைக்குமேல் கும்பிட்டு அழுதான்.

நீதிமன்ற வராண்டாவில்-

சிபிஐ அதிகாரி, "ராதா! எங்களை மன்னிச்சிரு. நாங்க தேவதாசிகள் மாதிரி. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் படுக்கை விரிக்கணும். தீவிரவாதத்தை விதைத்துவிட்டு மரணத்தை அறுவடை செய்கிறார்கள் அரசியல்வாதிகள். அரசியல் நிர்ப்பந்தத்தால் நாங்கள் கைது செய்யும் பத்து பேரில் இருவர் நிரபராதிகள். போகட்டும். இனியாவது அந்நியர்களிடம் ஜாக்கிரதையாய் இரு!'' என்றார்.

அகல்யா கணவனைக் கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

23.10.1993 சனிக்கிழமை காலை 10:30 மணி

நீதிபதியின் தீர்ப்பு நகலை இணைத்து - தன்னை மீண்டும் பணியில் அமர்த்துமாறு மேனேஜிங் டைரக்டரிடம் மனு அளித்திருந்தான் ராதாகிருஷ்ணன்.

எம்.டி.,ராதாவை திரும்பப் பணிக்கு அமர்த்தும் ஆணையை கையளித்து "நியாயம் ஜெயிச்சிருக்கு ராதா. உங்களுடைய ஒரு வருட சஸ்பென்ஷன் காலம் - முதல் ஆறு மாதம் சம்பள விடுப்பாயும் பின் ஆறு மாதம் சம்பளமில்லா விடுப்பாயும் கருதப்படும்..." என்றார்.

'நன்றி சார்!" என்றான் ராதா. '

8.11.1993 திங்கட் கிழமை இரவு 10:40 மணி

ரவு ஷிப்ட் முடிந்து சைக்கிளில் புறப்பட்டான் ராதா. உடல்நலம் தேறியிருந்தான். அவனது புது வாடகை வீடும் பேருந்து நிலையம் தாண்டித்தான். ராதா பேருந்து நிலையத்தைத் தாண்டும்போது பிளாட்பார இருட்டிலிருந்து ஒரு யுவன் வெளிப்பட்டான்.

"சார்!"

சைக்கிளை நிறுத்திக் காலை ஊன்றினான் ராதா."என்ன... சொல்லுங்க..."

"செங்கல்பட்டு பக்கத்துல ஏதோ கலாட்டாவாம். பஸ்ஸெல்லாம் நிறுத்திட்டாங்க சார். இன்னைக்கி ராத்திரி மட்டும் தங்க உதவி செஞ்சீங்கன்னா புண்ணியமாப் போகும்..."

திடுக்கிட்டான் ராதா. கடந்த கால கசப்பான அனுபவத்தில் தலையை பலமாக ஆட்டியபடி சைக்கிளை தள்ளிக்கொண்டு போனான். யோசனையில் நின்றான்.

விருந்தோம்பல் குணம் என் தாத்தா வழி - தந்தை வழி என் இரத்தத்துக்கு வந்தது. உண்ணும் கவளத்தைக் கேட்டாலும் விருந்தாளிக்கு ஊட்டியவர் என் தாத்தா. 24 மணி நேரமும் சமையல் அடுப்பு அணைக்காமல் விருந்து உபசரித்தவர் என் தந்தை. பிரச்னை வந்ததற்காக என் பிறவிக் குணத்தை ஒருக்காலும் மாற்றிக் கொள்ள மாட்டேன். I AM ALWAYS OPTIMISTIC... என்னுடைய மனைவியும்..."

திரும்பி புன்னகை முகமாய், "வாங்க சார்... என் வீட்ல தங்கி சாப்டுட்டுக் காலைல போகலாம்..." என்றான் ராதாகிருஷ்ணன்.

பின்குறிப்பு:-

கல்கி 30 ஜனவரி 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியி ருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

இந்த 5 கேள்விகளை படுக்கை நேரத்தில் உங்கள் குழந்தைகளிடம் கட்டாயம் கேளுங்கள்! 

புது அம்சங்களை அள்ளிக் கொடுத்த YouTube… நீங்க எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கு! 

எழும்புக்கூடுகள் நிரம்பிய ரூப் குந்த் ஏரி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா? 

ஜப்பான் நாடு முன்னேறக் காரணமான 'Quality Circle' - அதென்னங்க Quality Circle?

SCROLL FOR NEXT