Story Image 
கல்கி

சிறுகதை: உறவு சொல்ல இருவர்!

கல்கி டெஸ்க்

-ரிஷபன்

 

கவல் வந்துவிட்டது.

கோபியின் தம்பிதான் வந்து சொல்லி விட்டுப்போனான்.

"மன்... ஸ்ஸ்... வந்து... ரெண்டு மணிக்குன்னு சொல்லச் சொன்னாங்க."

வத்சலாவிடம் நின்று பேசவில்லை. அவசரமாய் ஓடி விட்டான். இரண்டு பேருக்குமே கண்ணீர் தளும்பிவிட்டது.

"என்னவாம்?"

அப்பா வெளியில் வந்தார்.

"அவங்க வீட்டுலேர்ந்து வந்தாங்க."

"ஓ... "

"ரெண்டு மணிக்காம்..."

"இருக்கட்டும். நமக்கென்ன?"

"இல்லப்பா. எனக்கு போய்ப் பார்க்கணும்னு..."

அப்பா அவளை நிமிர்ந்து பார்த்தார்.

"என்ன உளர்றே?"

"பிளீஸ்... "

அம்மாவும் வந்துவிட்டாள்.

"என்னடி பைத்தியமாட்டம்... அப்பா மட்டும் போயிட்டு வரட்டும்! நீ போகக் கூடாது."

த்சலா அறைக்குள் போனாள். அலமாரியில் 'இதோ' என்றன இரு கடிதங்களும். கூடவே 'பிறந்த நாள் வாழ்த்தும்.

'கோபி' என்ற கையெழுத்து சற்றே சரிவாய் கீழிருந்து மேலாக எழுதப்பட்டு அடிக்கோடும் இரண்டு புள்ளிகளுமாய் காட்சியளித்தது.

"உங்க கையெழுத்து ரொம்ப நல்லா இருக்கு!"

"என் தம்பி தினகர் என்னைவிட அழகா எழுதுவான்!"

"தினகர் யாரு. திவாகர் யாருன்னு வித்தியாசமே புரியலே."

"ட்வின்ஸ். எங்களுக்கே குழப்பம் வரும்."

"என்னமா பழகறாங்க. இவ்வளவு பிரியமாய் பேசறதைக் கேட்டப்போ எனக்கு ஒரே ஆச்சர்யம்!"

"பிகாஸ்... எங்க கூடப் பிறந்தவள்னு யாரும் இல்லே. முதல் 'பெண்' வரவு நீதான். சித்தப்பா, பெரியப்பாவுக்கும் பசங்கதான்!"

''அதனாலதான் என்னை மன்னின்னு கூப்பிடறதைவிட 'அக்கா'ன்னு கூப்பிட ரொம்ப ஆசைன்னாங்களா?"

''ம்... நீயும் அதே மாதிரி அவங்களோட பழகணும் வத்ஸலா!"

கோபியின் குரலில் வேண்டுகோள்.

பெண் பார்த்தல் ஒரு சம்பிரதாயத்திற்கு மட்டுமே. இந்த நிமிஷமே பூரண சம்மதம் என்று கண்களும் சேர்ந்து சிரிக்க... சொல்லி விட்டுப் போனவன். இவள் பிறந்த தினம் அறிந்து ஏழெட்டு கடைகள் சுற்றி அலைந்து வாழ்த்து தேடியவன். அழகாய்.. முத்து முத்தாய்... இரண்டு கடிதங்கள் எழுதியவன். இன்னும் ஒரே மாதத்தில் திருமணத் தேதி என்றிருந்தபோது... எதிரும் புதிருமாய் வந்த இரண்டு லாரிகளுக்கிடையே திகைத்துப் போய் கூழானவன்.

போகாதே... பார்க்க வேண்டாம் என்றபோது வத்சலாவுக்கு எதிர்க்கத்தான் தோன்றியது. என் கோபி... என்னை எப்படியெல்லாம் வைத்துக்கொள்ளப் போகிறேன் என்று சொன்னவன்... 'அக்கா' ஸ்தானம் தருகிறோம் என்ற வித்தியாசமான இரு தம்பிகள். நேசத்திற்காய் ஏங்கும் ஜீவன்கள்.

ப்பா மட்டும்தான் போய் விட்டு வந்தார்.

கல்யாணப் பத்திரிகை 'புரூப் ரெடி' என்று தகவல் வந்ததும் 'வேண்டாம்' என்று சொல்ல வேண்டியிருந்தது.

வத்சலா ஒரு வாரமாய் யாரோடும் பேசவில்லை.'கோபிக்குத்தான என்று தீர்வான விஷயம் சட்டென்று கலைந்த அதிர்ச்சி இன்னும் விடவில்லை.

"ந்தப் பையன் வந்திருக்கான்மா.."

அம்மா வந்து சொன்னாள்.

தினகர் காத்திருந்தான். அவளைப் பார்த்ததும் சிநேகமாய்ச் சிரித்தான்.

"அக்கா... எப்படி இருக்கீங்க?''

கண்ணில் மளுக்கென்று நீர் தளும்பியது. அதைப் பார்த்து அவனிடமும் இறுக்கம். சில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டான்.

''நீங்க வரணும்னு பிரியப்பட்டதா அப்பா சொன்னார். அவர்தான் வர வேணாம்னு தடுத்ததாகவும் சொன்னார்."

மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தான்.

"நல்லாத்தான் இருந்திருக்கும். இப்படி ஒரு விபத்து நிகழாம.. நீங்களும் எங்க வீட்டுக்கு வந்து... எங்களுக்கும் புது உறவு அமைஞ்சு... ஏதோ விதி... வேற மாதிரி ஆயிருச்சு. அதனால் என்ன... சொந்தம்னு நாமதானே ஏற்படுத்திக்கிறோம்? நம்ம மனசுதானே நிர்ணயிக்குது? இப்பவும் நீங்கதான் எங்க அக்கான்னு சொன்னா... வேணாம்னு சொல்வீங்களா என்ன?"

நிமிர்ந்து அவனையே பார்த்தாள்.

"கோபி ஆசைப்பட்டது என்னங்க, உங்களுக்கு நல்ல வாழ்வு அமையணும். அதானே. போனவனை நினைச்சு துக்கப்படறது... அவன் மேல வச்ச பிரியத்துக்கு செய்யிற மரியாதை. வருங் காலத்தை நிர்ணயிச்சுக்கறது அதைவிட இன்னும் முக்கியம். இல்லியா... அதானே கோபியோட நிஜமான ஆசை? அதையும் கௌரவப்படுத்தணும். இல்லியா.. வீணா மனசை குழப்பிக்காமே.. உங்கப்பாகிட்டே சொல்லுங்க. வேற தேதியிலே.. வேற எடம் பார்த்து.. நடக்கட்டும்."

வத்சலா ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.

"எங்க அக்கா கல்யாணத்தை சீக்கிரம் நடத்தணும் நல்லபடியா அதுலதாங்க இப்ப எங்களோட சந்தோஷம் இருக்குது."

எழுந்து நின்று சிநேகமாய் சிரித்தபோது வத்ஸலாவின் கண்கள் தளும்பி இருந்தன.

பின்குறிப்பு:-

கல்கி 21 மே 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

உங்கள் கிச்சனில் பல்லிகள் வராமல் தடுக்க சில டிப்ஸ் இதோ! 

வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கப் போகிறீர்களா? இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!

பால் குடித்தால் முகப்பருக்கள் வரும் என்பது உண்மையா?

‘தவறு செய்தால் தண்டனை நிச்சயம்’ என்பதை உணர்த்தும் கோயில்!

பாமாயிலில் தயாரான உணவு இதயப் பிரச்னைகளை ஏற்படுத்துமா?

SCROLL FOR NEXT