(செளந்தர்யன் வெங்கட் முகநூல் பக்கத்திலிருந்து...)
இவர் பூங்கொடி. மலைவாழ் கூலித்தொழிலாளி. இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கிக்கு வந்திருந்தார். 'என்னோட போன் நம்பர்க்கு மத்தவங்க பணம் அனுப்புற மாதிரி பண்ணிக்குடுங்க சார்' என்று கேட்டார். முதலில் புரியவில்லை. பிறகு அவர் UPI பதிவு, அல்லது Gpay, phonepe மாதிரியான செயலிகளை பதிவு செய்துத் தரசொல்கிறார் என புரிந்துகொண்டேன். தவிர இதற்காக கடந்த மாதம்தான் ஆன்ட்ராய்டு போனை வாங்கியிருக்கிறார். பரிசோதித்துப் பார்த்ததில் அவருடைய ஒரே எண் வேறு இரண்டு கணக்குகளிலும் இணைக்கப்பட்டிருந்ததால் UPI பதிவு செய்வதில் சிரமமிருந்தது.
அதனால் மற்ற கணக்குகளிலிலிருந்து அவரது எண்ணை நீக்குவதற்கு முயற்சி செய்து ஒன்றிலிருந்து நீக்கியாயிற்று. மற்றொரு கணக்கு வேறொரு கிளையிலிருந்ததால் அதிலிருந்து நீக்குவது பிரச்சினைக்குரியதாக இருந்தது. அதனால் அவரை அடுத்தநாள் வரச்சொல்லிவிட்டு, சம்மந்தபட்ட கிளையில் அழைத்துப் பேசியிருந்தேன்.
மறுநாள் வந்த பூங்கொடியிடம், எதற்காக UPI பதிவு தேவைப்படுகிறதென விசாரித்தேன். அடுத்தவாரம் புதுடில்லி பிரகதி மைதான் தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறவிருக்கிற 'சர்வதேச மரபுசார் மற்றும் பாரம்பரிய உணவுப்பொருட்கள் சந்தைப்படுத்துதல் கண்காட்சிக்கு' “ஒரு மாவட்டம் ஒரு விளைபொருள்” திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தேர்வாகியிருப்பதாகச் சொன்னார். 'கொல்லிமலை மிளகை' சந்தைப்படுத்துவதற்காக டில்லி செல்லவிருப்பதாகச் அவர் சொன்னபோது அவ்வளவு ஆச்சர்யமாக இருந்தது.
அவரிடம் சொந்தமாக மிளகுத்தோட்டமோ, மற்ற எந்த விளைநிலங்களோ இல்லை. சாதாரண கூலித் தொழிலாளியான இவர், தன்னுடைய மக்களின் உழைப்பை சந்தைப்படுத்தி கவனம் ஈர்க்க வேண்டுமென்பதற்காக இதுபோன்ற விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் கண்காட்சிக்குத் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறார். இப்போதுதான் அவருக்கு UPI பதிவின் அவசியம் புரிந்தது. அதனால் Gpay, phonepe மற்றும் எங்கள் வங்கியின் செயலிகளை பதிவுசெய்து எப்படி உபயோகிக்க வேண்டுமென சொல்லிக்கொடுத்ததோடு வங்கிக் கணக்குக்கு QR code ஒன்றை உருவாக்கி laminate செய்து கொடுத்தேன்.
நீங்கள் உங்கள் போன் நம்பரைச் சொல்லி பணம் பெறுவதைக் காட்டிலும், வாங்குபவர்களிடம் இதை scan செய்து பணம் பெறுவது மிக எளிது என்று புரியவைத்தேன். நான் மற்றும் இன்னும் இரண்டு நபர்களை அந்த QR code ஐ scan செய்து கொஞ்சம் பணத்தை அனுப்பிக்காட்டினேன். அட, இது ரொம்ப வசதியா இருக்கே சார் என்று சந்தோஷபடலானார்.
இதனால உங்களுக்கு என்ன லாபம் என்று கேட்டேன். லாபமெல்லாம் ஒன்றுமில்லை, என்னுடைய மக்களின் விளைபொருளை சந்தைப்படுத்த வேண்டும். அதனால் அந்த பொருளும் மக்களும் கவனம் பெறவேண்டுமென அவர் சொல்லும்போது உண்மையிலேயே கண்கள் ஈரமாகியிருந்தன. எவ்வளவு மிளகு எடுத்துட்டு போறீங்க என்று கேட்டபோது 300 கிலோ எடுத்துட்டு போவதாகக் கூறினார். அதை சந்தைப்படுத்தி விற்று வருகிற பணத்தை சம்மந்தபட்ட விவசாயிகளிடமே கொடுப்பதாகக் கூறினார். அதற்காக வட்டார அளவிலான வறுமை ஒழிப்புச் சங்கத்திலிருந்து அவர்களாக பார்த்துத் தருகிற கொஞ்சம் ஊதியத்தை மனதாரப் பெற்றுக்கொள்வதாக நெகிழ்ந்தார்.
இங்க இருந்து அவ்வளவு பொருள எப்படி எடுத்துட்டு போவீங்க என்று கேட்டதற்கு, சென்னை வரை வாடகை வண்டியில் எடுத்துச்சென்று அங்கிருந்து ரயிலில் டில்லிக்கு எடுத்துப்போகவிருப்பதாகக் கூறினார். எப்படிம்மா இந்தியெல்லாம் தெரியுமா? எப்படி அங்க போய் சமாளிப்பீங்க என்று கேட்டேன்.
“மலையில இருந்து கீழ எறங்குனப்ப, எல்லாம் தெரிஞ்சிக்கிட்டா சார் எறங்குனேன்? அதெல்லாம் பாத்துக்கலாம் சார்” என்று சொல்கிறவரின் பேச்சில் மிளகின் காரம், ஆனால் ஏலக்காயின் வாசம்!