வகுப்பில் உறங்கிய தனது ஆசிரியரை ஓவியமாகத் தீட்டிய அந்த சிறுவன்தான் பிற்காலத்தில், அமரர் கல்கியால் அடையாளம் காணப்பட்ட பிரபல ஓவியர் மணியம்.
எழுதப்பட்ட கதைக்கு இணையாக, தான் தத்ரூபமாக வரைந்த ஓவியக் கதாபாத்திரங்களையும் வாசகர்களோடு பேச வைத்தவர் ஓவியர் மணியம். 1924ம் வருடம் ஜனவரி மாதம் 26ம் தேதி அன்றைய மதராஸ் மாகாணத்தின் மயிலாப்பூரில் பிறந்த இவர், 1941ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை நமது கல்கி அலுவலகத்தில் ஓவியப் பணியில் கோலோச்சினார். 1944 முதல் 1954 வரை சிவகாமியின் சபதம் மற்றும் பொன்னியின் செல்வன் நாவல்களுக்காக இவர் வரைந்த ஓவியங்கள் மக்கள் மத்தியில் இவருக்கு பெரும் பாராட்டையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தன.
ஓவியர் மணியம் நூற்றாண்டு (1924 - 2024) தொடங்கி, அதையொட்டி பல்வேறு நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பிரபல ஓவியரும், மணியம் அவர்களின் புதல்வருமான மணியம் செல்வன் அவர்களை ஒரு மாலை வேளையில் சந்தித்து, தந்தை மணியம் குறித்த நினைவலைகளை கல்கி குழும வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக் கொண்டோம். அவர் நம்மிடம் உரையாடியதிலிருந்து ஒருசிலவற்றை அனைவரும் அனுபவிப்போம்...
ஓவியர் மணியம் பிறந்தது, வளர்ந்தது, வாழ்ந்தது எல்லாம் சென்னை மயிலாப்பூர்தான். ஆனால், இவரது தாத்தாவுக்கு பூர்வீகம் வந்தவாசிக்கு அருகில் உள்ள தண்டரை கிராமம். இவர் 1912ம் ஆண்டு காலகட்டத்தில் பிழைப்புக்காக சென்னை மயிலாப்பூர் பொன்னம்பல வாத்தியார் தெருவுக்கு குடி வந்து, தனக்குத் தெரிந்த சித்த வைத்தியத் தொழிலை செய்து வந்தார். இவருக்குப் பிறந்த மூத்த மகன்தான் உமாபதி என்பவர். உமாபதிக்கு பிறந்தவர்தான், பிற்காலத்தில் ‘மணியம்‘ என்று அழைக்கப்பட்ட டி.யு.சுப்பிரமணியம் (தண்டரை உமாபதி சுப்பிரமணியம்) ஆவார்.
சுப்பிரமணியத்திற்கு ஐந்து வயது இருக்கும்போதே, இவரை விட ஐந்து வயது மூத்தவரான இவரது சித்தப்பா டி.கே.லிங்கையா தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சாலையில் போவோர், வருவோரை எல்லாம் கோட்டுச் சித்திரமாக வரைந்துக்கொண்டு இருப்பார். இதை அருகில் இருந்து பார்த்த சிறுவன் சுப்ரமணியத்திற்கு ஏற்பட்ட இந்த முதல் உந்துதலே, பிற்காலத்தில் அவரை புகழ் பெற்ற ஓவியர் மணியம் ஆக மிளிரச் செய்தது.
தனது சிறு வயதிலிருந்தே ஓவியத்தின் மீது தீராத பற்று கொண்டிருந்த சுப்பிரமணியத்தின் (மணியம்) ஓவிய ஆர்வம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது. கால ஓட்டத்தில் சுப்பிரமணியத்தின் சித்தப்பா லிங்கையாவும் அவரது நண்பர் எஸ்.ராஜனும் மெட்ராஸ் ஓவியக் கல்லூரியில் (அக்காலத்தில் அதன் பெயர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்) சேர்ந்து ஓவியக்கல்வி பயின்றனர். அவர்களைக் கண்ட சுப்பிரமணியமும் தனது பள்ளிப் படிப்பைத் துறந்து 1939ம் ஆண்டு ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியக் கல்வி படிக்கத் தொடங்கினார். ஓவியக் கல்லூரியில் படித்துக்கொண்டே தனது இடைப்பட்ட நேரத்தில் ஏதாவது பத்திரிக்கைக்கு ஓவியம் வரைந்து கொடுத்தால் கல்லூரிக் கட்டணம் செலுத்த உதவியாக இருக்குமே என்ற எண்ணத்தில் அந்த முயற்சியில் இறங்கினார் அந்த இளைஞர்.
மாணவர் சுப்பிரமணியம் ஓவியர் மணியம் ஆனது எப்படி தெரியுமா? அதை நாளைக்குச் சொல்கிறேனே!
நேர்காணல்: எம்.கோதண்டபாணி