US Election 2024 - Kamala Harris - Donald Trump 
கல்கி

US Election 2024: Part 11 - சாக்கடையாகி வரும் அமெரிக்கத் தேர்தல் நிலவரம்... சகதி கூடுமா? இல்லை தெளியுமா?

ஒரு அரிசோனன்

முன்குறிப்பு:

கடந்த ஆறு வாரங்களாகத் தேர்தல் நிலவரத்தைச் செய்திகளாகக் கொடுத்துவந்தோம். ஆனால், கடந்த வாரம் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை வரும் வேகத்துடன் வந்த ஹெலீன் புயல் நான்கு மாநிலங்களில் மிகுந்த அழிவை ஏற்படுத்தியது. இருநூறுக்கும் மேற்பட்டவர் இறந்தனர். பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் அழிந்தன. ஊர்களை இணைக்கும் பாலங்கள், சாலைகள் துண்டிக்கப்பட்டன. சில இடங்களுக்குக் கோவேறு கழுதைகள் மூலம்தான் உதவி எடுத்துச் செல்ல முடிகிறது. இந்நிலையில், அதையே தேர்தலுக்குப் பயன்படுத்தித் தவறான பரப்புரை செய்யப்படுகிறது. 

துணை அதிபர் வேட்பாளர்கள் வால்சும், வான்சும் கலந்துகொண்ட நேர்முக விவாதமும், தற்போதைய நடப்பும் கட்டுரையாக எழுதினால்தான் சிறப்பாக இருக்கும். எனவே, நிலவரம் கட்டுரையாகத் தொடர்கிறது.....

துணை அதிபர் வேட்பாளர் நேர்முக விவாதம்:

(இரண்டு துணை அதிபர் வேட்பாளரிகளின் பெயர்கள் வால்ஸ் (Walz), வான்ஸ் (Vance) – குழப்பாக இருக்கும்.  வால்ஸ் - கமலா கட்சி, வான்ஸ் – ட்ரம்ப் கட்சி)

கமலா-ட்ரம்ப் நேர்முக விவாதத்தில் கூறுவது பொய்யா என்பது நடுவர்கள் உடனே கூறினர். அது கூடாது என்ற ஒப்பந்தத்துடன் விவாதம் தொடங்கியது. கூசாமல் பொய் சொன்னாலும், நடுவர்கள் அதைத் தடுக்கமாட்டார்கள் என்பது முன்பே விளங்கிவிட்டது.

ரிபப்லிகன் கட்சி துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி. வான்ஸ், “அடைக்கலம் தேடிக் குடியேறிய மக்கள் நாயையும், பூனையையும், வளர்ப்பு பிராணிகளையும் திருடிக் கொன்று தின்கிறார்கள்,” என்ற பொய்யான பரப்புரையைத் திரும்பத் திரும்பச் செய்து, மக்களிடம் கெட்டபெயர் வாங்கினார்.  

ஆனால் விவாதத்தில் ட்ரம்ப் போலக் கோபத்துடன் பேசாமல், இனிக்க இனிக்கப் பேசி, மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்று வான்ஸ் பல பொய்களைக் கூறினார்.

ஏழை எளிய மக்களுக்கு சுகாதாரக் காப்புக்கு ஏற்பாடு செய்தார், முன்னாள் அதிபர் ஒபாமா. அதை நீக்க ட்ரம்ப் பல தடவை முயன்றும், காலம்சென்ற அரிசோனா செனட்டர் ஜான் மக்கேனின் ஒற்றை ஓட்டினால் அந்தப் பாதுகாப்பு தப்பியது.  

இருந்தும், ஒபாமாவின் பாதுகாப்புச் சட்டத்தின் குறைகளை நீக்கிச் சீர்திருத்தத்தை ட்ரம்ப் கொணர்ந்தார் என்று வான்ஸ் கூசாமல் புளுகினார். அதை வால்ஸ் எடுத்துக் காட்டி அந்தப் பொய்யை அம்பலப் படுத்தினார்.

கடந்த தேர்தலில் தான் தோற்கவில்லை என்று 2020, ஜனவரி 6ஆம் தேதி, ட்ரம்ப் கலவரத்துக்கு வழிவகுத்தார்.  அப்பொழுது அவரது துணை அதிபராக இருந்த மைக் பென்ஸ் (Mike Pence), அதற்கு ஒத்துழைக்க வில்லை.  தன் கடமையைச் செய்து ஜோ பைடன் வென்றார் என அறிவித்தார்.  “சென்ற தேர்தலில் ட்ரம்ப் தோற்றார் என்பது ஒப்புக் கொள்கிறீர்களா?  இந்தத் தேர்தலில் தோற்றால் நீங்கள் மாஜித் துணை அதிபர் பென்ஸ் மாதிரி சட்டப்படி (நேர்மையாக) நடந்து கொள்வீர்களா?” என்று கேட்டபோது வான்ஸ், “பேச்சுரிமை,” என மழுப்பினார். 

உடனே வால்ஸ், “இது பதிலே இல்லை,” எனப் பரிவுடன் சுட்டிக் காட்டினார்.  

நேர்மையாக நடந்து கொண்ட துணை அதிபர் மைக் பென்சைத் தன் முடிவுரையில்  மறைமுகமாகக் குறிப்பிட்ட வால்ஸ், “சென்ற தேர்தலில் ஒரு பாதுகாப்புச் சுவர் (firewall) இருந்தது.  இப்பொழுது இல்லை;  மக்களாட்சி நிலைக்க வேண்டுமெனில், அதைக் காப்பாற்ற முயலும் எங்களுக்கு வாக்களியுங்கள்!” என்று உருக்கமாகக் கேட்டு முடித்தார்.

வான்சும், வால்சும் சண்டையிடாமல் விவாதித்ததைக் குறிப்பிட்ட ஊடகங்கள்,  வான்சைப் புகழ்ந்தன. ஆனால், வான்சின் பொய்யுரையை வால்ஸ் ஏன் உடனே சுட்டிக்காட்டவில்லை என்று கேட்டனவே தவிர, வான்சைக் கண்டிக்கவில்லை.

எரியும் வீட்டில் பிடுங்குவது ஆதாயமா?

இயற்கை நாட்டைச் சீரழிக்கும்போது அங்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறவேண்டியதுதான் அனைவரின் கடமை. இது அரசியல்வாதிக்கும் பொருந்தும்.  ஆனால், ட்ரம்ப் அப்படிச் செய்யவில்லை.  

ஜார்ஜியா மாநிலம் சென்ற அவர், “புயல் நிவாரணம் பற்றிக் கவர்னர் பிரையன் கெம்ப் (Brian Kemp) பலதடவை முயன்றும், அதிபர் பைடன் அவருடன் பேச மறுத்துவிட்டார். மேலும், நிவாரணப் பணிக்கு உதவவேண்டிய ஃபீமா (FEMA) அமைப்பிடம் பணம் இல்லை. ரிபப்லிகன் கட்சிக்கு ஆதரவு உள்ள மாநிலங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க மறுக்கிறது!  நான்தான் நிவாரணத்துக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டுவந்திருக்கிறேன்,” என்று புளுகினார்.  ஊடகக் காட்சிக்காக மளிகைப் பொருள்களையும், மற்ற கருவிகளையும் பின்புலமாக அமைத்துக் கொண்டு பேட்டி கொடுத்தார்.

ஆனால், ஜார்ஜியா கவர்னர் கெம்ப், ட்ரம்ப்பின் கூற்றை மறுத்தார். பைடன் தன்னுடன் உடனே பேசியதாகவும், நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்வதாக வாக்களித்ததாகவும் கூறினார்.

ஊர்திகள் செல்ல இயலாத இடங்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலமும், அவை தரையிறங்க இயலாத இடங்களுக்குக் கோவேறு கழுதைகள் மூலமும் நிவாரணப் பொருள்கள் கொண்டுசெல்லப் படுகின்றன. ஃபீமா அமைப்பிடம் தேவையான நிதி இருக்கிறது என்று புயல் பாதித்த இடங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட பைடன் தெரிவித்தார். அவரிடம் ட்ரம்ப், வான்ஸ் இவர்களுடைய பொய்யுரைகளைப் பற்றிக் கருத்துக் கேட்டபோது, தேர்தல் அமைதியாக நடந்து முடியும் என்று தனக்குத் தோன்றவில்லை என்று கவலை தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அந்த இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. எவரையும் குறைகூறவில்லை.

முன்னாள் ரிபப்லிகன் கட்சித் துணை அதிபரும், மிகவும் பழமைவாதியான டிக் சேனியும், அவரது மகள் லிஸ் சேனியும், கமலாவுக்கு ஆதரவு தெரிவித்து, அவருக்கே வாக்களிக்கப் போவதாக உறுதியளித்தனர்.  விஸ்கான்சின் மாநிலத்தில், ரிபப்லிகன் கட்சி தொடங்கிய ஊரில் கமலாவுடன் லிஸ் சேனி இணைந்து உரையாற்றினார்.  

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர்தப்பிய பட்லர் எனும் ஊரில் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்துக்கு டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்குடன் ட்ரம்ப் சென்றார்.  இதற்காக, அதிபர் பைடனுக்கு அளிக்கும் பாதுகாப்பைவிட அதிகப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.  சண்டையிடுக என்ற அறிவிப்புப் பதாகைகள் எங்கும் காணப்பட்டன.  வாக்களிகப்  பதிந்து ஜனநாயகத்தையும், பேச்சு உரிமையையும், ஆயுதம் தாங்கும் உரிமையைக் காப்பாற்ற (ட்ரம்புக்கு?) ஓட்டு அளியுங்கள் என்று எலான் மஸ்க் திரும்பத் திரும்பக் கூறி வலியுறுத்தினார்.

இந்த வாரச் சராசரிக் கணிப்பு:

  • கமலா முந்தியிருப்பவை: மிஷிகன் – 0.7% (1% குறைவு); விஸ்கான்சின் – 0.8%(0.2% குறைவு); நிவாடா – 1.1% (0.1% குறைவு); பென்சில்வேனியா – சமம் (0.4% குறைவு)

  • ட்ரம்ப் முந்தியிருப்பவை: அரிசோனா –  2.0%; வடக்கு கரோலினா – 0.6% (0.8% குறைவு); ஜார்ஜியா – 1.5%; (மாறவில்லை) பென்சில்வேனியா – சமம் (0.4% அதிகரிப்பு)

  • ஆகவே, எவர் வெல்வார் எனச் சொல்ல இயலவில்லை.

'அரசியல் ஒரு சாக்கடை', எனக் காலம்சென்ற அறிஞர் பெர்னார்ட் ஷா கூறினார். இப்பொழுது அமெரிக்கத் தேர்தலும் அப்படி ஆகிவருகிறது. தெளிகிறதா என்பதுபற்றி அடுத்த வாரம் தொடர்வோம்.

(தொடரும்)

நினைத்ததை நிறைவேற்றித் தரும் திருப்பதி கருட சேவை உத்ஸவம்!

சுவை மிகுந்த 'மன்ச்சௌ சூப்பி நூடுல்ஸ்' (Manchow Soupy Noodles) தெரியுமா?

பாண்டவர்கள் தவம் இருந்த கொண்டரங்கி மலை ஓர் திகில் அனுபவம்!

இந்திய அணியின் அடுத்த எக்ஸ்பிரஸ் ரெடி! முதல் ஓவரே மெய்டன் தான்!

முகத்தின் சருமப் பொலிவை அதிகரிக்க உதவும் ஃபேஸ் ஐஸ் ரோலர் தெரியுமா?

SCROLL FOR NEXT