US Election 2024 
கல்கி

US Election 2024: Part 4 - நான்காண்டுகளுக்கு ஒருமுறைதான் அதிபர் தேர்தல்; அதுவும், குறித்த நாளில் மட்டுமே!

ஒரு அரிசோனன்

நடப்புச் செய்திகள்:

  • ட்விட்டரில் (X) டானால்ட் ட்ரம்ப்புடன் எலான் மஸ்க் நடத்திய நேர்காணல் சரிவர நடக்காததால், ஊடகங்கள் அதைக் குறைகூறின.

  • கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளர் ஆனது அரசியல் சதி என்று ட்ரம்ப் கூறினார்.

  • ரிபப்லிகன் கட்சித் தலைவர்கள் தனிமனிதத் தாக்குதலை விட்டுவிட்டுக் கொள்கைகளை எடுத்துக்கூறும்படி ட்ரம்ப்புக்குக் அறிவுரை கூறுகின்றனர்.

  • கிறிஸ்தவர்களில் 24% உள்ள (Evangelistic) நற்செய்தி பரப்புவோரின் ஆதரவு ட்ரம்ப்புக்குப் பெருகிவருகிறது.

  • தனியாக இருக்கும்போது மற்றவரிடம் கமலா ஹாரிஸைப் பற்றித் தரக்குறைவாக ட்ரம்ப் பேசியதாகச் செய்தி வந்துள்ளது.

  • ஆகஸ்ட் 19ல் டெமாக்ரடிக் கட்சி மாநாடு தொடங்குகிறது.

இந்தியாவில் கூட்டணி அமைப்பதுபோல அமெரிக்காவிலும் செய்யலாமே, அல்லது தேவையான பிரதிநிதிகளைத் தங்கள் கட்சிக்கு வரவழைத்து ஆட்சியைப் பிடிக்கலாமே என்று எண்ணுவது இயற்கையே! அதிபர் மக்களால் நேராகத் தேர்ந்தெடுக்கப்படுவதால் அது சாத்தியமில்லை. அத்துடன், சமயம் பார்த்து ஆட்சியைக் கலைத்துத் தேர்தல் நடத்தி, மீண்டும் பதவிக்கு வரமுடியாது.  நான்காண்டுகளுக்கு ஒருமுறைதான் அதிபர் தேர்தல் குறித்த நாளில் (நவம்பர் மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை) நாடுமுழுவதும் நடக்கும்.

அதிபரின் வாரிசுகள்:

அமெரிக்க அதிபரின் குடும்ப வாரிசுகளைப் பற்றிப் பேசவில்லை.  அதிபர் இறந்துவிட்டாலோ, செயலிழந்துவிட்டாலோ, பதவிநீக்கம் செய்யப்பட்டாலோ, யார் அதிபராகப் பதவியேற்பார்கள் என்று கீழ்க்கண்டதை அரசியலமைப்பு சொல்கிறது.

  • அதிபரின் பதவிக்காலம் தொடங்கும் முன்னர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இறந்துவிட்டால், துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிபர் ஆவார்.

  • பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ, விலகினாலோ, இறந்தாலோ, துணைத்தலைவர் அதிபராவார்.

  • துணைத்தலைவர் பதவி காலியானால் அதிபர் ஒரு துணைத்தலைவரை நியமிப்பார்.  பிரதிநிதி சபை, செனட் அதை உறுதிசெய்தபின் துணைத்தலைவர் பதவியேற்பார்.

செனட்டின் தலைவரான அமெரிக்கத் துணைத்தலைவரைப்  ‘பிரசிடென்ட் ப்ரோ டெம்ப்போரே' (President Pro Tempore) என்றும்,  பிரதிநிதிசபையின் தலைவரை ‘ஸ்பீக்கர் ஆஃப் த ஹவ்ஸ்’ என்றும் அழைக்கிறார்கள்.  துணைத்தலைவருக்கு அடுத்தபடி அதிகாரம் பெற்றவர் ‘ஸ்பீக்கர் ஆஃப் த ஹவ்ஸ்’.

“(நாட்டுத்) துரோகம், லஞ்சஊழல், அல்லது மற்ற பெருங்குற்றங்களும், சிறுகுற்றங்களும் செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, அது உறுதியாக்கப்பட்டால், அமெரிக்காவின் அதிபர், துணைத்தலைவர், மற்ற குடியாட்சி அதிகாரிகள் அப்பதவியிலிருந்து விலக்கப்படுவர்” என்று அரசியல் அமைப்பின் இரண்டாம்பகுதியின் நான்காம் பிரிவு சொல்கிறது:

வழக்குமன்றத்தில் பொய்யுரைத்தார் என்று பழைய (மாஜி) அமெரிக்க அதிபர் பில் க்லின்ட்டனையும், தேர்தல் முடிவை ஏற்க மறுத்துத் தன்னைப் பின்பற்றுபவர்களை அமெரிக்கச் சட்டமன்றத்துக்குள் அத்துமீறி உட்புக வழிவகுத்து மக்கள் பிரதிநிதிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கத் தூண்டினார் என்று இப்பொழுது அமெரிக்க அதிபர் தேர்தலுக்குக் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டானால்ட் ட்ரம்பையும் பிரதிநிதிசபை குற்றம்சாட்டி உறுதிசெய்தது (impeached). ஆயினும், அதை செனட்டும் உறுதிசெய்யாததால், எவரும் பதவிநீக்கம் செய்யப்படவில்லை.

கட்சி வேட்பாளர்கள்:

இந்தியாவையும்,  மற்ற மக்களாட்சி நாடுகளிலும் கட்சியின் வேட்பாளராக யார் நிற்கவேண்டும் என்பதைக் அந்தக் கட்சி மேலிடம் முடிவுசெய்கிறது.  

அமெரிக்காவில் ஐந்து நாடளாவிய கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 31 உதிரிக்கட்சிகளும் உள்ளன. இவற்றில் பெரியவை டெமக்ராடிக் (மக்களாட்சி) கட்சியும், ரிபப்லிகன் (குடியரசு) கட்சியும் ஆகும். சிறிய கட்சிகளில் லிபர்டேரியன் கட்சி, க்ரீன் கட்சி குறிப்பிடத் தகுந்தவை. மற்றவை பெயரளவுக்குத்தான்.

அமெரிக்க அதிபர்களில் ஆபிரஹாம் லிங்கன், டெட்டி ரூஸ்வெல்ட், ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ், டானால்ட் ட்ரம்ப் ஆகியோர் ரிபப்லிகன் கட்சியைச் சேர்ந்தவர்கள்; பிராங்க்லின் ரூஸ்வெல்ட், ஜான் கென்னடி, பில் க்லின்ட்டன், பராக் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோர் டெமொக்ராடிக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இதுபோக, செனட்டுக்கோ, பிரதிநிதி சபைக்கோ சுயேச்சையாக நின்று பதவிக்கு வருபவர்களும் உண்டு. இவர்கள் பெரிய கட்சிகளான இரண்டில் ஒன்றுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவது வழக்கமாக இருந்துவருகிறது. அவர்கள் அதை முன்னமேயே அறிவித்துவிடுவர்.

அமெரிக்காவில் மாநில ஆளுனர் (கவர்னர்) வேட்பாளரையும் எந்தக்கட்சி மேலிடமும் முடிவுசெய்வதில்லை. அந்தந்தக் கட்சியைச் சார்ந்த மக்களே தீர்மானிக்கிறார்கள்.

ஓட்டுரிமையுள்ளவர் அனைவரும் வாக்காளராகப் பதிவுசெய்யும்போது தாங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கவேண்டும். அரசு ஊழியர்களும் கட்சியில் இருக்கலாம், தடையில்லை. கட்சிக்கு சந்தா எதுவும் செலுத்த வேண்டியதில்லை.  கட்சி வேட்பாளர் தேர்தலில் வாக்களிக்கவே இக்கேள்வி கேட்கப்படுகிறது.  எக்கட்சியையும் சாராதவர் என்றால் ‘சுயேச்சை’ என்றும் பதிந்துகொள்ளலாம்.  

தேர்தல் நாளில் ஓட்டுச் சாவடிக்குச் சென்று, கால்கடுக்க நின்று, ஓட்டளிக்க விரும்பாவிட்டால், பதிவு செய்துகொள்ளும்போதே, நமது முகவரியைக் கொடுத்து, 'வராதோர் வாக்கு (absentee ballot)' வேண்டும் என்று குறிப்பிட்டால், தேர்தலுக்குக் கிட்டத்தட்ட இருபது நாள்களுக்கு முன்னதாகவே வாக்குச்சீட்டு நம்மைத்தேடி நம் வீட்டிற்கே வரும். நமது வாக்கை அதில் குறித்து, அஞ்சலில் சேர்த்தால், அது தேர்தலகத்திற்கு போய்ச்சேர்ந்துவிடும். 

முதல்நிலை வாக்கெடுப்பு (Primaries):

கட்சிவேட்பாளர்கள் தேர்வை எப்படி நடத்துவது என்பதை மத்திய அரசு தீர்மானிப்பதில்லை. அது மாநில அரசுகளுக்கே விடப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு மாநிலமும், கட்சிகளும் அதனதன் விருப்பப்படி இத்தேர்தல்களை நடத்துகின்றன. 

இவை பிப்ரவரி மாதத்தில் ஐயோவா (Iowa) மாநிலத்தில் துவங்கி, ஜூன்மாதத்தில் கலிஃபோர்னியா மாநிலத்தில் முடிவடைகின்றன.

அமெரிக்காவிலுள்ள ஐம்பது மாநிலங்களிலும் ஒரேயடியாகப் போட்டியிட நிறையப் பணம் வேண்டும். கட்சி வேட்பாளர்கள் தமக்குள் இடும் போட்டி என்பதால், கட்சிகள் அவர்களுக்கு நிதியுதவி செய்யமாட்டா. நிறைய வேட்பாளர்கள் தாங்கள் கட்சியின் பொது வேட்பாளராகவேண்டும் என்றே விரும்புவதால், அவர்களில் திறமையற்றவர், தகுதியற்றவர் வடிகட்டப்படவேண்டும்.

எனவே, முதலில் சிறிய, பலவிதமான மக்களும் அடங்கிய சிறிய மாநிலங்களில் அவர்கள் தத்தம் திறமை, தகுதி இவைகளை மக்களிடம் பொதுக்கூட்டங்களிலும், நேரில் சந்தித்தும், பேசியும், அவர்கள் ஆதரவைப்பெற முயல்வர்.  தொலைக்காட்சி நிறுவனங்களும் அவர்களுக்குள் பேச்சுப்போட்டி நடத்தி, அவர்களைப்பற்றிய விவரங்களை அறிய உதவும்.

இப்போட்டிகளில் அதிக வாக்குகள் பெற்ற ஓரிருவர்களே இறுதிவரை போட்டியிடுவார்கள்.  அப்பொழுது பல்வேறு அரசியல் பற்றுள்ள நிறுவனங்களும், தனியார்களும் வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்ய முன்வருவார்கள். 

இம்முறை, அதிபராக இருக்கும் ஜோ பைடன் டெமொக்ரடிக் கட்சி வேட்பாளராகத் தன்னையும், துணை அதிபராகக் கமலா ஹாரிஸையும் அறிவித்தபோது, அவர்களை எதிர்த்து எவரும் போட்டியிடாததால், அவர்களே வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ரிபப்லிகன் கட்சி அதிபர் வேட்பாளர்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி உள்படச் சிலர் போட்டியிட்டனர். அவர்களின் விவாதத்தில் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். ஆயினும், அவருக்கு 50%க்கு மேல் வாக்கு கிடைத்ததால், அவரே ரிபப்லிகன் கட்சி அதிபர் வேட்பாளர் ஆனார்.

அதன்பின் ஜோ பைடன் விவாதத்தில் சரிவரப் பதிலளிக்காததால், டெமாக்ரடிக் கட்சியில் அவர் விலகவேண்டும் என்ற கூக்குரல் எழுந்தது. அவரும் விலகித்  துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் கட்சி அதிபர் வேட்பாளர் ஆனார்.

தேர்தல் பிரச்சாரம் சுடச்சுட நடக்கிறது.  இப்பொழுது முக்கிய மாநிலங்களில் கமலா ஹாரிஸ் முன்னிலை அடைந்து வருகிறார். எவர் அதிபர் ஆகக்கூடும் என்பது இன்னும் தெளிவாக வில்லை.  

வரும் நவம்பர் 12, செவ்வாய்க்கிழமை நடைபெறப் போகும் தேர்தல் இதற்கு விடையளிக்கும்.

(முற்றும்)

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

SCROLL FOR NEXT