US Election 2024 
கல்கி

US Election 2024: Part 6 - “ட்ரம்ப் இப்படிச் சொன்னால் ஏமாற அமெரிக்க மக்கள் முட்டாள்கள் அல்ல!” - கமலா ஹாரிஸ்!

ஒரு அரிசோனன்

சுடச்சுடத் தலைப்புச் செய்திகள்:

  • நாட்டைப் பொருத்தவரை ட்ரம்ப்பைவிடக் கமலா சராசரியாக 1.8% அதிகப்படியாகவும், தேர்தலில் தேவையான 270 எலெக்ட்டோரல் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் எனக் கருத்துக் கணிப்பு கூறினாலும், தேர்தல் வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று சொல்லமுடியாதபடி நெருக்கமாகவே இருக்கிறது.

  • கமலா ஹாரிஸும், டிம் வால்ஸும் சி.என்.என். ஊடகத்துக்கு முதல் தடவையாக நேர்முகப் பேட்டி அளித்துள்ளனர்.

  • கருச்சிதைவைத் தடுப்பதற்காகவே மூன்று உச்சநீதி மன்ற நீதிபதிகளை நியமித்தேன் என்று மார்தட்டிய டானால்ட் ட்ரம்ப், தான் அதிபரானால் செயற்கை முறைக் கருத்தரிப்புக்கு அரசை முழுப் பொறுப்பையும் ஏற்கவைப்பதாகப் பிரச்சாரம் செய்தார்.

  • வல்லுணர்கள் வருங்காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரித்துள்ளனர்.

கருத்துக் கணிப்புகள்:

  • மதில்மேல் பூனை மாநிலங்கள் ஆறில் கமலா ஹாரிஸும், ட்ரம்ப்பும் தலா மூன்றில் முன்னணியில் இருக்கின்றனர். நிவாடாவில் எவரும் முன்னணியில் இல்லை. பென்சில்வேனியா, நிவாடாவில் முன்னணியையும், மற்ற மூன்றில் அதிக வாக்கு விகிதத்தையும் ட்ரம்ப் இழந்துள்ளார்.

இந்த வாரச் சராசரிக் கணிப்பு:

  • கமலா முன்னிலையில் இருப்பவை: மிஷிகன் – 1.1%; பென்சில்வேனியா – 0.5%; விஸ்கான்சின் – 1.4%

  • ட்ரம்ப் முன்னிலையில் இருப்பவை: அரிசோனா – 0.5%; ஜார்ஜியா – 0.2%, வடக்கு கரோலினா – 0.6%

இவற்றை வைத்துப் பார்த்தால், இந்த மாநிலங்களில் கமலா 44, ட்ரம்ப் 43 எலக்டோரல் வாக்குகள் பெறுவர் என்று புலனாகிறது. சென்ற வாரத்தில் 43 வாக்குகள் முன்னணியில் இருந்த ட்ரம்ப் இந்த வாரம் ஒரு வாக்கு அளவு பின்தங்கியுள்ளார்.

புகழ் பெற்ற டெமாக்ரடிக் குடும்பத்தைச் சேர்ந்த ராபர்ட் கென்னடி ஜூனியர் சென்ற வாரம் அளித்த ஆதரவு ட்ரம்புக்கு அதிக பலத்தை அளிக்கவில்லை. முன்னவரின் சகோதரி தன் உடன்பிறப்பின் முடிவை ஊடகங்களில் வன்மையாகக் கண்டித்துப் பேட்டி அளித்துள்ளார்.

கமலா ஹாரிஸின் வாக்குச் சேகரிப்பு நிலவரம்:

கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஒரு மாதமாக ஊடகத்துக்குப் பேட்டியே அளிக்காததால், கமலாமீது எதிர்கட்சியினர் நிறையப் புகார் எழுப்பினர். பேட்டியில் அவர் தடுமாறுவார் என்றும் பரப்புரை செய்தனர். சென்ற வியாழக்கிழமை சி.என்.என். ஊடகத்துக்கு கமலா ஹாரிஸும், டிம் வால்ஸும் பேட்டி அளித்தனர்.

“நீங்கள் உங்களைக் கறுப்பராக நினைக்கிறீகளா, அல்லது இந்தியராக நினைக்கிறீர்களா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதும், கமலா, “இந்தப் பழைய விளையாட்டில் நான் கலந்துகொள்ளமாட்டேன்,” என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டார். “அரைத்த மாவைத் திரும்பத் திரும்ப அரைக்காதீர்கள்!” என்பதே அதன் அர்த்தம்.

மேலும் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், நடுத்தர வகுப்பினர் முன்னேற்றத்துக்கு என்னென்ன வழி வகுப்பார் என்றும், பெண்களுக்குக் கருச்சிதைவு சுதந்திரச் சட்டம் மீண்டும் கொணரப் பாடுபடப் போவதாகவும் கூறினார்.

இஸ்ரேல்-பாலஸ்தீனியப் பிரச்சினையைப் பற்றி கேள்வி வந்தபோது, “இஸ்ரேல் தன்னைக் காத்துக்கொள்ள அமெரிக்கா துணை நிற்கும்; அதே சமயம், பிணைக்கைதிகள் திரும்பப் பெறவேண்டும், போர் நிற்கவேண்டும். பாலஸ்தீனியருக்கு தன்னுரிமை அளிக்கப்படவேண்டும்,” என்று இருபக்கத்துக்கும் சாதகமாகப் பதிலளித்தார்.

ட்ரம்ப் செயற்கைக் கருத்தரிப்புக்கு அரசு முழுப்பொறுப்பேற்கும் என்பதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்றதற்கு, இப்படிச் சொன்னால் ஏமாற அமெரிக்க மக்கள் முட்டாள்கள் அல்ல என்றார்.

ஜார்ஜியா மாநிலத்தில் அவரும், டிம் வால்ஸும் வாக்கு சேகரிக்கப் பஸ்ஸில் இருநாள் பயனம் மேற்கொண்டனர்.

டானாலட் ட்ரம்ப்பின் வாக்குச் சேகரிப்பு நிலவரம்:

“விலைவாசிகள், வீட்டுக் கடன் விகிதம், பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது; பைடனுடன் 3½ ஆண்டுகள் ஆட்சிசெய்து கமலா ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு வாக்களித்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்,” என்று ட்ரம்ப் பரப்புரை செய்து வருகிறார்.

கமலா மேஜை முன் அமர்ந்து பேட்டி அளித்ததைப் பற்றியும் ட்ரம்ப் குறை கூறினார்.

தனி நபர் தாக்குதல் செய்யக்கூடாது என்று கட்சிப் பெருந்தலைகள் கூறினாலும் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை, தன்னைத் தாக்குபவர்களுக்கு இப்படித்தான் எதிர்மொழி வைக்கவேண்டும் என்று ட்ரம்ப் பதிலளித்தார்.

ஃபுலோரிடா ட்ரம்ப்புக்கு ஆதரவான, தேரதலில் அவர் வாக்களிக்கப் போகும் மாநிலம்.

வரும் நவம்பர் தேர்தலில் ஆறு வாரங்களுக்குப் பிறகு கருச்சிதைவு செய்யக்கூடாது என்ற தேர்தல் முன்மொழிவு (election proposal) அங்கு வாக்குக்கு வர உள்ளது. முதலில் அதற்கு எதிராகவும், பின்பு அதற்கு ஆதரவாக வாக்களிப்பதாக ட்ரம்ப் கூறியது குழப்பத்தை வரவழைத்துள்ளது.

மேலும் அவர் செயற்கைக் கருத்தருப்புக்கு அரசு முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றதும், வலதுசாரி வாக்காளர்களுக்கு அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது.

கமலாவின் இனத்தைப் பற்றி (கருப்பரா, இந்தியரா என) மோசமாக ட்ரம்ப் பேசுவதின் பின்விளைவுகள் அவர் ஆதரவைக் குறைக்கும் என்று புள்ளி விவரங்களும், ஆய்வுகளும் எடுத்துரைக்கின்றன.

(தொடரும்)

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT