காதலைக் கொண்டாடுவதில் நம்மவர்கள் என்றைக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பல உதாரணங்களில் காணமுடியும்.
சற்று கண்ணை மூடிக் கொண்டு -
இக்காட்சியை மனக்கண்ணில் முன்நிறுத்தி பாருங்கள்!
" நாயகன், சற்றுத் தொலைவினில் அழகே வடிவாய் எழுந்து நிற்கும், தன் மனங்கவர்ந்த - காதலியை, பொங்கி வழியும் காதல் உணர்வுகளோடு பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறான். அவன் பார்க்கும் நேரங்களில் தலைகுனிந்து நிலத்தையே பார்த்துக் கொண்டிருந்த அக்காதலியோ, அவனது பார்வை அவளை விட்டு அகன்ற - அவன் பார்க்காத - கணநேரத்தில் - அவனைப் பார்த்து மெல்ல சிரிக்கிறாள்"
2024 - ம் ஆண்டில் வாழும் நமக்கு, இக்காட்சி மிக மிகச் சாதாரணமாகத் தோன்றலாம். ஏனெனில் இன்றைய திரைப்படங்களில் இதே போன்ற காட்சியை 3000 தடவைக்கு மேல் கண்டு களித்திருப்போம்.
ஆனால்…சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கவிஞன் ஒருவன் இதே போன்ற ஒரு நிகழ்வை, எவ்வளவு எளிமையாக அதுவும் காதல் பெருகும் கவிநயத்துடன் இரண்டே வரிகளில் வடிக்கப்பட்ட குறளில் வடித்ததை இங்கு வியக்காமல் இருக்க முடியாது!
"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்".
ஆஹா… என்னே வள்ளுவனின் காதல் வரிகள் - எளிமையான சொற்களால் அமைந்த இக்குறள், வள்ளுவனின் காதல் - (Romance) ரசனையை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. இதை எழுதும் போது வள்ளுவனுக்கு என்ன வயசிருக்கும்?
இதன் எளிமையான விளக்கம் - "நான் அவளைப் பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்" - அவ்வளவுதான்!
இதே குறளின் பாதிப்பில் கண்ணதாசன் எழுதியதுதான் - "உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே,
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே" - என்ற பாடல் வரிகள்!
மிகவும் சாதாரண நிகழ்வைக்கூட தன் எழுத்துகளால் அழகூட்டுபவன் கவிஞன் என்பார்கள்! இந்த குறள் அழகை ஊட்டுவது மட்டுமின்றி கூட்டுகிறது உண்மைதானே!