பட்டதாரி இளைஞர்கள் அடிமட்ட வேலைகளுக்கு விண்ணப்பிப்பது சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. வேலையின்மையே பட்டதாரிகளை இந்த முடிவுக்குத் தள்ளுகின்றன. இளைஞர்களுக்கு ஏன் இந்த மனநிலை? இந்த நிலையை மாற்ற இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் பட்டம் படித்த இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. இதனால் பலரும் சம்பந்தமே இல்லாத வேலையையும் செய்யத் தயாராகி விட்டனர். 8 ஆம் வகுப்பு தகுதியுடைய அலுவலக உதவியாளர் பணிக்கும், எழுதப் படிப்பதையே தகுதியாகக் கொண்ட துப்புரவாளர் பணிக்கும் சமீப காலமாக பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இது ஆச்சரியத்தை அளித்தாலும், இன்றைய இளைஞர்களின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
தனியார் வேலைகளை விடவும் அரசு வேலைகளில் பணி நிரந்தரம் உறுதி என்பதால், பலரும் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால் ஒருசில பட்டதாரிகள் அடிமட்ட அரசு வேலைகளில் சேர முன் வந்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
ஹரியானா மாநில அரசு அலுவலகங்களில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவத் தொழிலாளர்கள் வேண்டும் என்ற விளம்பரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான வேலை. இதற்கு மாதச் சம்பளமாக ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை பணியிடங்கள் உள்ளன என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில் சுமார் 4 இலட்சம் பேர் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் 6,000 முதுகலைப் பட்டதாரிகளும், 40,000 இளங்கலைப் பட்டதாரிகளும் அடங்குவர். இந்த எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகளும் உள்ளனர் என்பது மேலும் ஆச்சரியத்தை அளிக்கின்றன.
வெறும் எழுதப் படிக்கத் தெரிந்தாலே போதும் என்ற ஒரு வேலைக்கு இத்தனைப் பட்டதாரிகள் ஏன் விண்ணப்பிக்கின்றனர் என்ற கேள்வி பலரது மனதிலும் எழுகின்றன. யாரும் தவறுதலாக இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது இல்லை. துப்புரவுப் பணியாளர்கள் என்று தெரிந்து தான் பலரும் விண்ணப்பிக்கின்றனர்.
படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல், கிடைத்த வேலைகளைச் செய்து வரும் இளைஞர்களுக்கு, அரசு தரப்பில் இருந்து வரும் வேலைவாய்ப்புகள் ஆறுதலை அளிக்கின்றன. அதாவது அடிமட்ட வேலையாக இருந்தாலும், முதலில் வேலையில் சேர்ந்து விட்டு அதன்பிறகு கல்வித் தகுதியைக் காரணம் காட்டி, அரசு அலுவலகங்களில் ஏதாவது எழுதும் வேலைக்கு நகர்ந்து விடலாம் என்பது பல இளைஞர்களின் எண்ணமாக இருக்கின்றது. இது சரியா தவறா என்றெல்லாம் இவர்கள் சிந்திப்பதில்லை. வேலை கிடைத்தால் போதும்; அதனைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறி விடலாம் என நம்புகின்றனர் இன்றைய இளைஞர்கள்.
ஏதோ ஒரு வேலைக்கு செல்ல நினைக்கும் இளைஞர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள முனைப்பு காட்ட வேண்டும். சுயதொழில் தொடங்குவதற்கான அறிவாற்றலையும், புரிதலையும் அதிகரிக்க வேண்டும். வேலையை மட்டுமே நம்பி இருப்பவர் எனில், உங்களுக்குப் பிடித்தத் துறையைத் தேர்ந்தெடுங்கள். இல்லையெனில் சுயதொழில் தொடங்குவதற்கான அடித்தளத்தை இன்றே அமைக்கத் தொடங்குங்கள்.