CRYPTO CURRENCY... 
கல்கி

கரப்பான் பூச்சிக்கும், CRYPTO CURRENCY க்கும் என்ன உறவு?

இரவிசிவன்

ல்லாச் சொல்லும் பொருள் குறிப்பனவே - என்று தொல்காப்பியம் கூறுகிறது.

நம்முடைய வீட்டு அடுப்பங்கரையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் தென்படும் கரப்பான் பூச்சிக்கு தமிழ் மொழியில்  'கரப்பு /கரப்பான்'- என்ற பெயர் எப்படி வந்தது என்பதையறிந்தால் நமக்கு வியப்பு மேலோங்கும்.

* கரவு > கரப்பு - என்றால் ஒளிவு, மறைவு.
* கரத்தல் = ஒளித்தல் , மறைத்தல்
* கரப்பாக்கு = ஒளிதல் ,மறைதல்.
( secret, hidden, not evident or obvious ).

கரப்பான் = கரந்து ( மறைந்து) அல்லது இருளில் வாழும் பூச்சி.

கரப்பான் பூச்சி என்றால்... இருட்டில், இண்டு இடுக்குகளில் ஒளிந்து மறைந்து வாழும் பூச்சி என்று பொருள். கரப்பான் பூச்சிகள் பெரும்பாலும் பகல் நேரங்களில் வெளியே வராமல் ஒளிந்தும், இருளான நேரங்களில் வெளிப்பட்டு உணவு தேடி வாழும் பண்பு கொண்டவை.

இருட்டிலும், பாறை இடுக்குகளிலும்  மறைந்து வாழும் பூச்சிகளுக்கு ஆங்கிலத்தில் கிரிப்டோசோயிக் (CRYPTOZOIC) என்ற பொதுவான ஒரு பெயர் உண்டு. கரப்பான் பூச்சி, சில வகையான தேள், மண்புழு, மரவட்டை போன்ற பூச்சியினங்கள் இதில் அடங்கும்.

தமிழ் மொழியில் ஒரு மிகச் சாதாரணமான ஒரு கரப்பான் பூச்சிக்கு கூட, நம் முன்னோர்கள் தீர ஆராய்ந்து - எவ்வளவு பொருத்தமான காரணப் பெயரைச் சூட்டியுள்ளனர் பார்த்தீர்களா?

மறைத்தல் பொருள் குறித்த இந்த எளிய தமிழ்ச்சொல் கரப்பு தான் ,  பல்வேறு மேலை ஐரோப்பிய மொழிகளில் 'கிரிப்ட்' (CRYPT) என்று திரிந்து பல சொற்களை வழங்கியது.

கரவு > கரப்பு > கிரிப்ட் (CRYPT).

Crypto currency,
Cryptography,
Cryptozoic,
Crypt,
Encrypt - ஆகிய ஆங்கிலச் சொற்களும்' கரப்பு' என்ற தமிழ் மூலத்திலிருந்து தோன்றியவையே!

( Dictionaries mentioned that the word crypto / crypt - meaning "secret" or "hidden," used in English, from Latinized form of Greek Kruptos /kryptos "hidden, concealed, secret") .

Encrypted = மறைகுறியாக்கப்பட்ட.
Encryption = மறையாக்கம்.
Crypto currency = மறை குறியீட்டு நாணயம் என்று இன்றைக்கு தமிழில் மொழிபெயர்ப்புகள் சொன்னாலும், இவற்றை முறையே கரவுக்குறி, கரவாக்கம், கரவுப்பணம் என்று சொல்லிவிடலாம்.

கடைக்குறிப்பு :
களவு என்ற சொல்லும் கரவு தந்ததே!
கள் >  கள்ளம் - என்றால் மறைவு, திருட்டு, வஞ்சனை.
கள்ளன் = மறைந்து களவு செய்யும் திருடன்.
கள்  > கள்வு > களவு = மறைவு, திருட்டு.
கள்வன் = திருடன்.

CRYPTO CURRENCY...

கள் > கர > கரத்தல் என்றால் மறைதல், மறைத்தல்.
கரவு = மறைப்பு, வஞ்சகம், களவு.
கரவு = கவடு (கபடம்) , வஞ்சனை, சூழ்ச்சியம்.

எண்ணத்தை 'மறைத்து' செயல்படுவதே - வஞ்சனை,திருட்டு ஆகியவை.

கருள் = இருள்.
கருமி = கொடாது மறைக்கும் உலோபி.
கரவணம் = சந்திரனோ , சூரியனோ மறைக்கப்படும் நிகழ்வு. தமிழ்ச் சொல்லான கரவணம் திரிந்துதான் "கிரகணம்" ஆனது.

இவற்றையெல்லாம் நோக்கி இனி 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' - என நாம் பாடவேண்டியதில்லை. சரிதானே!

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT