Dr.Lakshmi Vijayakumar  
கல்கி

“தற்கொலை தடுப்பு நமது பொறுப்பு!”- சிநேஹா தற்கொலை தடுப்பு மைய நிறுவனர் டாக்டர் லக்ஷ்மி விஜயகுமார்!

எல்.ரேணுகாதேவி

ற்கொலை உணர்வால் பாதிக்கப்படும் நபர்களிடம் மனம்விட்டு பேசி, அவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு, முறையாக ஆலோசனைகளை வழங்கி, அந்த எண்ணத்தில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சிநேஹா தற்கொலை தடுப்பு நிறுவனத்தின் (1986) தன்னார்வலர்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் சேவை ஆற்றி வருகிறார்கள்.

‘சிநேஹா’ தற்கொலை தடுப்பு மையமானது
மனோதத்துவ நிபுணர் டாக்டர். லக்ஷ்மி விஜயகுமார்
அவர்களால் தொடங்கப்பட்டது. ‘தற்கொலை தடுப்பு’ என்ற உன்னத நோக்கத்தை அறிமுகப்படுத்தி அப்பணியில் முன்னோடியாகத் திகழ்பவர் டாக்டர் லக்ஷ்மி விஜயகுமார். இவரது தலைமையில் மிகப் பெரிய சேவை ஆற்றி வருகிறது ‘சிநேஹா’ (+91 44 2464 0050  +91 44 2464 0060) .

செப் 10 உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாள். இதன் தொடர்பாக டாக்டர் லட்சுமி விஜயகுமார் அவர்களை கல்கி ஆன்லைன் சார்பாக சந்தித்தோம். அந்த பிரத்யேக பேட்டி பல வெளிச்சங்களைக் காட்டியது. பல விஷயங்களை புரிய வைத்தது. இனி...

மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும்போக்கு அதிகரித்துள்ளதே?

மாணவர்களை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்க முதல் முறையாக முயற்சி எடுத்த அரசு நம்முடைய தமிழக அரசுதான். எங்களுடைய
சிநேஹா (+91 44 2464 0050  +91 44 2464 0060)  அமைப்பு தொடங்கியபோது காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை மட்டும்தான் இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால், பொதுத்தேர்வு போன்ற தேர்வு முடிவுகள் வெளிவரும்போது ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள் வரும். அப்போது எங்கள் அமைப்பு சார்பில் ஒரு ஆய்வு மேற்கொண்டோம்.

அதில் கண்டறியப்பட்ட விஷயம் என்னவென்றால், 90 மதிப்பெண் எடுக்க நினைத்து 80 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அல்லது ஒன்று அல்லது இரண்டு பாடத்தில் தோல்வி அடைந்த மாணவர்கள்தான் தற்கொலை செய்துக்கொள்ள நினைக்கிறார்கள் என்பதுதான். இந்த விஷயத்தில் ஊடகங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தன.

குறிப்பாக 2003ம் ஆண்டு தேர்வு நேரத்தில் ஊடகங்கள் வாயிலாக தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்களை ‘சிநேஹா’ மேற்கொண்டது. அதன்பிறகு இதுகுறித்து தமிழ்நாடு அரசிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தோம். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு 2004ம் ஆண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கென மறுதேர்வு முறையை 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தியது.

இதன்பிறகு தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.  2003ம் ஆண்டு தமிழ்நாட்டில் 450 பேராகவும், சென்னையில் 55 பேராகவும் இருந்த எண்ணிக்கையானது,  (NCRB அறிக்கையின்படி பார்த்தோம் என்றால்) 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் 250 சென்னையில் 10 என 50 சதவீதமாக குறைந்திருந்தது.

தமிழ்நாட்டின் இந்த மறுதேர்வு முறையை மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இதனை நாடுமுழுவதும் அமல்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்துவருகிறோம். அதேபோல், தற்போது இந்த நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகளை அரசும், ஊடகங்களும் மிகைப்படுத்தி பூதாகாரமாக ஆக்குவதால், இது Copy Cat Suicide நடக்க வழிவகைச் செய்துள்ளது.

நீட் தேர்வில் வெற்றிபெறவில்லை என்றால் என்ன? இன்றைக்கு பல வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனை தேர்ந்தெடுத்து அந்த துறையில் சாதிக்கலாமே. அதேபோல், நீட் தேர்வு மரணங்கள் தொடர்பாகதான் அதிகளவு பேசப்படுகிறது. ஆனால், ஜேஇஇ போன்ற தகுதி தேர்வு மரணங்கள் தொடர்பாக பேசப்படாமல் உள்ளதே. அது ஏன்? இதனையும் நாம் பார்க்கவேண்டியுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் பள்ளிக்கூடங்கள் அறிவில் சிறந்த மாணவர்களை உருவாக்குவது முக்கியமா? அல்லது தன்னம்பிக்கையுடன் உள்ள மாணவர்களை உருவாக்குவது அவசியமா?

இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. இதுதான் உண்மையான நிலை.  கோவிட் தொற்று காலகட்டத்தில் பல மாணவர்கள் இன்டர்நெட்களுக்கு அடிமையாகிவிட்டனர். இதனால் சைபர் கிண்டல்களுக்கு ஆளாக நேர்கிறது. பல தற்கொலைகள் நடக்கின்றன. மாணவர்களை இன்டர்நெட் மோகத்தில் இருந்து வெளியே கொண்டுவரவேண்டும். உலகத்தில் உள்ள சக மக்களுடன் பேசவும், பழகவும் மற்றும் விளையாடவும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இணையத்தை சரியான முறையில் கையாள மாணவர்களுக்கு சொல்லித்தரவேண்டும். அனைத்து விஷயங்களும் மாணவர்களுக்கு சமநிலையில் கற்றுத்தரப்படவேண்டும். இன்றைய மாணவர்களுக்கு தோல்வியை சந்திக்கும் தைரியம் குறைவாக உள்ளது. எல்லாமே அவர்களுக்கு உடனடியாக கிடைத்துவிடும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு தோல்வியைச் சந்திக்கக்கூடிய Resilience கற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

பள்ளிக்கூட அளவில் இந்த Resilience முறையை கற்றுக்கொடுக்க என்ன செய்யவேண்டியுள்ளது?

தோல்விகளை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ளும் முறைகளை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கவேண்டும். அதேசமயத்தில் நம்முடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் எப்படி கட்டுப்படுத்துவது, இருவருக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளை அடிதடி இல்லாமல் உட்கார்ந்து பேசி சரிசெய்துக்கொள்ளும் முறை (Interpersonal Problem Solving Skill) ஆகியவற்றையும் பயிற்றுவிக்க வேண்டும். 

தற்கொலை என்ற வார்த்தைக்கு பதில் எதிர்மறையான பாசிட்டிவான சொல் ஏதேனும் வழக்கத்தில் உள்ளதா?

பொதுவாக தற்கொலை பற்றி பேசுவதற்கே பலரும் யோசிக்கிறார்கள்.  மனம்விட்டு பேசுங்கள் என்கிறோம் நாங்கள். தற்கொலை என்பது மனித உணர்வோடு சம்பந்தப்பட்டது. Depressionக்கு மனஅழுத்தம் என கூறுகிறோம். அதைப் பற்றி நிறைய பேசுகிறோம். விழிப்புணர்வு, ஆலோசனைகள், மருத்துவரீதியான சிகிச்சைகள் மேற்கொள்கிறோம்.  அதேபோல் தற்கொலை என்ற வார்த்தையும் நாம் ஏற்றுக்கொண்டு அது தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளவேண்டியதுதான்.

தற்கொலைகள் நிகழாத சமூகத்தை  உருவாக்க முடியுமா? அதற்கான சாத்தியங்கள் உள்ளதா?

உலகத்தில் தற்கொலைகளே இல்லாமல் இருக்க முடியுமா என்றால் அது முடியாது என்றுதான் கூறவேண்டும்.  அப்படி இருக்கையில் தற்கொலைகள் நிகழாத சமூகத்தை எப்படி உருவாக்க முடியும்? அது சாத்தியமில்லை. ஆனால், பெரும்பாலான தற்கொலைகளை தடுக்க முடியும்.இதுதான் நடைமுறை சாத்தியமும் கூட.

‘சிநேஹா’வில் சேர்ந்து தொண்டாற்ற என்ன தகுதிகள் இருக்க வேண்டும்?

சிநேஹா (+91 44 2464 0050  +91 44 2464 0060 ) தற்கொலை தடுப்பு மையத்தில் தன்னார்வலராக இணைய ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக 20 வயதிற்கு மேல் இருக்கவேண்டும். ஏனென்றால் எங்கள் மையத்தை தொடர்புக்கொள்பவர்கள் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்கள்.

அவர்களுக்கு ஆறுதல் கூறும் மனபக்குவம் கொண்டவராக இருக்கவேண்டும். அதேபோல், தங்கள் கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்ளும் நபர்கள் குறித்து எந்த முன் தீர்மானம்கொண்ட எண்ணமும் இருக்கக்கூடாது என எதிர்ப்பார்க்கிறோம். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் நபராக இருக்கவேண்டும்.

‘சிநேஹா’வில் அடுத்து...?

1986ம் ஆண்டு சிநேஹா (+91 44 2464 0050  +91 44 2464 0060)  எனும் தற்கொலை தடுப்பு மையத்தைத் தொடங்கினோம். தன்னார்வலர்கள் ஒருசிலர் ஒன்று சேர்ந்துதான், தொடங்கினோம். அப்போது, ‘ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை எத்தனை நாட்கள் நடத்த முடியும்.  சீக்கிரத்தில் சிநேஹா மையத்தை மூடிவிடுவீர்கள்’ என்றார்கள். ஆனால், 30 ஆண்டுகளுக்கு மேலாக தற்போதும் தன்னார்வலர் அமைப்பாக செயல்பட்டுவருகிறோம். இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் எங்களிடம் தொடர்புக்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கி தற்கொலை எண்ணத்தில் இருந்து அவர்களை மீட்டுள்ளோம்.  எங்கள் மையம் 365 நாட்களும் செயல்பட்டுவருகிறது. கொரோனா மற்றும் 2015 பெரு வெள்ளத்தின்போது மட்டுமே சிநேஹா சிறிது நாட்கள் செயல்படாமல் இருந்தது.

இன்று, நாடு முழுவதும் உள்ள தற்கொலை தடுப்பு மையங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். சர்வதேச தற்கொலை தடுப்பு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்துடனும் இணைந்து தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

சிநேஹா தற்கொலை தடுப்பு நிறுவனம் (+91 44 2464 0050  +91 44 2464 0060)  என பெயர் கொண்டிருந்தாலும்  தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள்தான் எங்கள் நிறுவனத்தை தொடர்புக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம்கிடையாது. ஏதோ ஒரு கஷ்டத்தினால் மனசோர்வுடன் இருப்பவர்களும் எங்களை தொடர்புக்கொண்டு அவர்களின் கஷ்டங்களை பகிர்ந்துக்கொள்ளலாம். எந்த மனஉளைச்சல் இருந்தாலும் நாங்கள் அவர்களுடன் பேசுகிறோம். தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறோம். தொடர்ந்து பேசுவோம். பெரிய மாற்றங்களை இனியும் செய்வோம்.

Contact: இ மெயில் help@snehaindia.org, தொலைபேசி மூலமாக +91 44 2464 0050  +91 44 2464 0060  தொடர்புகொள்ளமுடியும்.

இந்த நேர்த்திமிகு நேர்காணலின் காணொளியைக் கண்டு பயன்பெற ...

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT