ஜொராயா டெர் பீக் (Zoraya ter Beek) என்ற நெதர்லாந்து நாட்டுப் பெண்மணி, வரும் மே மாத தொடக்கத்தில் தன்னை கருணை கொலை செய்யுமாறு சமீபத்தில் கோரியிருக்கிறார். அவர் மன நோயோடு போராடி வருவதால் இந்த வேண்டுகோளை விடுத்து இருக்கிறார். தன் காதலனோடும் இரண்டு பூனைகளோடும் வாழ்ந்து வருகிறார். இந்த மூவரையும், தான் மிகவும் நேசிப்பதாகக் கூறுகிறார் இந்த 28 வயதுப் பெண்மணி. (இவர் ஒரு காலத்தில் தான் மனநோய் மருத்துவர் ஆக வேண்டும் என்று விருப்பப்பட்டிருக்கிறார் என்பது காலத்தின் கோலம்).
இவருக்கு என்னதான் மனநோய்? மனச்சோர்வு (டிப்ரெஷன்), மூளை இறுக்கம் அல்லது சிந்தனைக் குறைபாடு (ஆட்டிசம்), ஆளுமைச் சிதைவு (பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்) ஆகியவை இவரை வாட்டி வருகிறது. ‘மன்னிக்கவும். இதற்கு மேல் உங்கள் மனநோயை சரிசெய்ய இயலாது’ என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.
தீராத நரம்பு மற்றும் தசை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக தங்களைக் கருணை கொலை செய்துவிடுமாறு கேட்டுக் கொள்வதுண்டு. ஆனால் மன நோய் காரணமாக இப்படி ஒரு வெளிப்படையான வேண்டுகோளை அதிகம் பேர் வெளிப்படுத்திக் கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில் பொதுவாக கருணைக் கொலை குறித்தும், மனநோய்க்காக அப்படி ஒரு வேண்டுகோளை ஜொராயா விடுத்தது குறித்தும் மேலும் தெளிவு பெற பேராசிரியர் டாக்டர் புஷ்பராணியை அணுகினோம். இவர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மருத்துவமனையில் மயக்க மருந்துப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் பதினைந்து வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார்.
‘நான் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவராக இருப்பதால் கருணைக் கொலை மற்றும் அதன் பல்வேறு வடிவங்கள் குறித்து பல நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என்னிடம் பேசியிருக்கிறார்கள்.
பழங்காலத்தில் தலைக்கூத்தல் என்று ஒன்று உண்டு. நீண்ட காலத்துக்கு படுத்த படுக்கையாக கிடக்கும் முதியவர்களை அவர்களது உறவினர்கள் குளிக்க வைத்து இளநீர் கொடுத்து கூடவே தங்கியபடி அவரது இறப்புக்கு வழி வகுப்பார்கள். ஆனால் இதெல்லாம் சட்டத்தை மீறிய செயல்’.
முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நோயாளிக்கு மருந்தின் மூலம் உயிரைப் போக்குவதும், அவர்களின் சுவாசிப்பு மற்றும் இதே செயல்பாட்டுக்காக அவர்களின் உடலில் இணைக்கப்பட்டுள்ள கருவிகளின் நீக்குவதும் ‘செயல்படு கருணைக்கொலை’ (அதாவது ஆக்டிவ் யுதநேஷியா) எனப்படும். நம் நாட்டில் இது சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுவதில்லை.
என்றாலும் டிஎன்ஆர் (do-not-resuscitate) என்பதைப் பின்பற்ற வாய்ப்பு உண்டு. ஒரு நோயாளி மிக நீண்ட காலத்துக்கு செயற்கை சுவாசக் கருவிளைப் பயன்படுத்தி வந்தாலோ, மருந்துகளின் உதவியால் மட்டுமே அவரது இதயம் இயங்கி வந்தாலோ DNR என்பதற்கு டாக்டர்கள் ஒத்துக்கொள்ளக் கூடும்.
அதாவது சுவாசம் நின்று போனாலோ இதயத் துடிப்பு நின்று போனாலோ மருந்து கொடுத்து இயங்க வைப்பது. இதயத்தை அழுத்தி இயங்க வைப்பது போன்ற செயல்களில் மருத்துவர்கள் அப்போது ஈடுபட மாட்டார்கள். இப்படி ஈடுபடாமல் இருக்க வேண்டுமென்றால் நோயாளி இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும். அவரது நெருங்கிய உறவினர்கள் (Legal guardians) எழுத்துப்பூர்வமாக இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும். எங்கள் மருத்துவமனையை பொறுத்தவரை தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவரும் அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரும்கூட இதற்கு சம்மதிக்க வேண்டும்.
எந்தவிதமான பாதிப்பு உண்டான நோயாளிகளுக்கு DNR மேற்கொள்வோம் என்றால் இதோ சில எடுத்துக்காட்டுகள்:
மூளையின் அடிக்கணுவிலே (brain stem)பலத்த பாதிப்பு உண்டாகி இருந்தாலும், மூளைக்கு மிகக் குறைவான ஆக்சிஜன் மட்டுமே சென்றுகொண்டிருக்கும் நிலை தொடர்ந்தாலும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். அப்போது மேற்குறிப்பிட்ட நடைமுறையில் டிஎன்ஆர் மேற்கொள்வோம்.
‘தனிப்பட்ட முறையில் கருணைக் கொலைக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்களா இல்லையா?’ என்ற கேள்விக்கு, ‘யுதநேஷியா என்பதைத் தமிழில் பொருத்தமாக கருணைக்கொலை என்கிறார்கள். அதாவது கொலை என்ற வார்த்தை இதில் இடம்பெறுகிறது. இன்னொருவரின் உயிரைப் பறிக்க நான் யார்? எனினும் நோயாளியின் உறவினர்கள் மேலே குறிப்பிட்ட சூழல்களில் கேட்டுக்கொண்டால் மட்டும் சட்டம் அனுமதிக்கும் விதத்தில் அதை செய்ய ஒப்புக்கொள்கிறேன்.’
‘நெதர்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும் அவர் மனைவியும்கூட இது போன்ற முடிவெடுத்து வெளிப்படுத்தி கருணைக் கொலைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டனர்.
சமீபத்திய ஜொரையாவின் விஷயம் மேலும் சிக்கலானது. பலவிதமான மனநோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே சட்டப்படி, ஒப்புதல் அளிக்கும் மன நிலையில்தான் அவர் தன்னை கருணைக் கொலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தாரா என்பதை முதலில் ஒரு தேர்ந்த மனவியல் மருத்துவரின் உதவியுடன்தான் ஆராய வேண்டும்” என்றார் டாக்டர் புஷ்பராணி.