ஒரே நேரத்தில் 10 ஓவியங்கள் வரைந்து அசத்தும் பெண்மணி:
நெதர்லாந்து நாட்டின் செல்வாக்கு மிக்க 400 பெண்களில் ஒருவர் என்ற விருது பெற்றவர் ராஜ சென்னா வான் டேம் எனும் 31 வயது பெண்மணி. இவர் ஒரு டச்சு ஹைப்பர் ரியலிஸ்டிக் பென்சில் உருவப்படங்கள் வரையும் கலைஞர். இவரின் இந்த பெருமைக்கு காரணம் இவர் ஒரே நேரத்தில் 10 பென்சில் உருவ ஓவியங்கள் வரைந்து அசத்துவதுதான். இவர் ஒரே நேரத்தில் வெவ்வேறு உருவப்படங்களை தன் இரு கைகளாலும், கால்களாலும் வரைவதில் வல்லவர்.
ராஜ சென்னா தன் 16 வயதில் இத்தாலிய தெருவோர பென்சில் ஓவியங்கள் வரையும் கலைஞர் ஒருவரால் ஈர்க்கப்பட்டு பென்சில் உருவ ஓவியங்கள் வரையும் கலையை கற்றுக் கொண்டார். 'அமேசிங் பென்சில் போர்ட்ரெய்ட்ஸ்' என்ற கலைப் புத்தகத்தில் அவரது ஓவியம் முதல் முறையாக வெளிவந்தது.
ஆரம்பத்தில் தன் இரு கைகளின் மூலம் ஓவியங்கள் வரைந்து வந்த ராஜ சென்னா, நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர் "உங்களால் இரு கால்களையும் வைத்து ஓவியங்கள் வரைய முடியுமா?" என்று கேட்க, அதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அதன் பின்னர் தனது இரு கால்களை கொண்டும் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார். அதன் பின்னர் தனது இரு கைகளையும், கால்களையும் கொண்டு ஒரே நேரத்தில் 8 வெவ்வேறு உருவப்படங்களை வரைந்து அசத்தினார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ராஜ சென்னா தனது இரு கைகளில் இரண்டு பிரஸ்கள், கால்களில் இரண்டு பிரஸ்களையும் வைத்து ஒரே நேரத்தில் 10 வெவ்வேறு பென்சில் உருவ படங்களை வரைந்து அசத்தினார். இது பற்றி அந்நாட்டின் பிரபல நரம்பியல் நிபுணரிடம்,"இந்த திறமை சாத்தியமா?" எனக் கேட்டபோது "இது அடிப்படை நியூரோ சயின்ஸ்ல் சாத்தியமற்றது. ஆனால் ராஜ சென்னா ஆற்றலை ஸ்கேன் மூலம் ஆய்வு செய்ததில் அவருக்கு மற்றவர்களை விட அவரின் வலது மற்றும் இடது மூளை மூன்று மடங்கு அதிகமாக செயல்படுவது தெரிய வருகிறது" என்றார்.