Varalakshmi Vratam 
மங்கையர் மலர்

ஆகஸ்ட் 16 'வரலட்சுமி விரத நோன்பு' - சகோதரிகளே! இதோ உங்களுக்கான Checklist..!

ஆதிரை வேணுகோபால்

அன்புச் சகோதரிகளே,

இதோ கூப்பிடும் தூரத்தில் வரலட்சுமி அம்மா வந்து கொண்டே இருக்கிறார். ஆகஸ்ட் 16 வரலட்சுமி விரத நோன்பு. இப்போதே சின்னச் சின்ன விஷயங்களை கருத்தில் கொண்டு செய்ய அம்மனின் பரிபூரண ஆசி நமக்கு கிட்டுவது எளிதாகும்.

  • முதலில் சின்னதாய் ஒரு அட்டவணை போடுங்கள் எந்தெந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என்று.

  • அந்த அட்டவணையை தயவு செய்து மாற்றாமல் செய்து முடியுங்கள்.(உங்களால் முடியும்) 

  • முதலில் பரணில் இருந்து அம்மனுக்கு தேவையான கலச சோம்பு, சேர்மனை, முக்காலி இவற்றை எடுத்து சுத்தம் செய்து வையுங்கள்.

  • பிறகு அம்மனின் முகத்தை பாலிஷ் செய்தோ அல்லது விபூதி கொண்டு தேய்த்தோ பளபளப்பாக்கி சுத்தமான பருத்தியிலான துணியில் எடுத்து வையுங்கள்.

  • அம்மனுக்கு தேவையான அலங்கார பொருட்கள் புடவைகள் இவற்றையெல்லாம் தனித்தனியாக அழகாக எடுத்து வைத்து விடுங்கள்.

  • குத்துவிளக்கு காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் பூஜைக் குரிய சாமான்களை எல்லாம் சுத்தமாக தேய்த்து பளபளப்பாக்கி வைத்து விடுங்கள்.

  • விரதத்தின் முன்தினம் இதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து எண்ணெய் திரி போட்டு வைப்பது சுலபமாகும்.

  • விருந்தினர்கள் யார் யாரை அழைக்க போகிறீர்கள் என்பதை கணக்கில் கொண்டு அவர்களை முன்கூட்டியே அழைத்து விடுங்கள்.

  • விருந்தினர்களுக்கு தரக்கூடிய தாம்பூலப் பொருட்களை முடிவு செய்து அதற்குரிய பைகளில் போட்டு ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். அவர்கள் வந்தபோது தாம்பூலத்தை தேட வேண்டிய அவசியம் இருக்காது. முடிந்தால் தாம்பூலத்தில் அவரவர்களின் பெயர்களை குட்டியாக ஸ்டிக்கரில் எழுதி ஒட்டி வைத்து விடுங்கள்.

  • அம்மாக்களுடன் பாட்டிகளுடன் வரும் பிள்ளைகளுக்கு அவர்கள் வயதிற்கு ஏற்றார் போல் ட்ராயிங் நோட் புக்ஸ் காமிக்ஸ் புத்தகங்கள், தரமான பேனா, குட்டி குட்டி ஸ்லோகப் புத்தகங்கள் திருக்குறள்.... கொடுக்க அவர்கள் முகம் மலர்வது நிச்சயம். 

  • அதேபோல் ஆண்களுக்கும் அவர்கள் வயதிற்கு ஏற்றார் போல் மணிபர்ஸுகள், நாவல்கள், வீட்டிலேயே வளர்க்கக்கூடிய தொட்டியுடன் கூடிய செடிகள், போஃல்டருடன் கூடிய ஃபைல்ஸ்.... இப்படி சில பொருட்களை வாங்கி வைத்து விடுங்கள்.

  • நாள் முழுதும் விரதம் இருப்பதால் உடல் சோர்வாகி விடாமல் இருக்க (உப்பு சேர்க்கக்கூடாது ), அவ்வப்போது பழங்கள், பால் பாயசம் என்று கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

  • நாத்தனார் இருந்தால் அவர்களை முன்கூட்டியே அழைத்து மகிழ்வுடன் அவர்களுக்கு தாம்பூலம் தாருங்கள். உறவு நீடிக்கும்.

  • வயதில் மூத்த பெரியவர்களிடம் (குறிப்பாக வீட்டில் உள்ள அத்தை மாமா) காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுங்கள் அது முக்கியம்.

  • எப்படி பூஜை செய்வது என்று தெரியவில்லை என்று குழம்பாதிர்கள்; லட்சுமி அஷ்டோத்திரம் தமிழில் இருக்கிறது; வாங்கி படியுங்கள். வரலட்சுமி விரதக் கதையும் தமிழில் இருக்கிறது. மகாலட்சுமியை உள்ளன்போடு நினைத்தாலே போதும், அவள் நிச்சயம் நமக்கு நல்லது மட்டுமே செய்வாள்.

  • அடுத்தது வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு விருந்தோம்பல். வீட்டில் என்றால் முன்னமே என்னென்ன சமைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து விடுங்கள். இட்லி சட்னி சாம்பார் பொங்கல் வடை என்றால் அதற்கு தேவையான பொருட்களை எல்லாம் கடைகளில் சென்று வாங்கி வைத்து விடுங்கள். குறிப்பாக வாழை இலை, பாக்கு மடைத் தட்டு, குடிக்க தண்ணீர் எல்லாம் தயார் நிலையில் இருக்கட்டும்.

  • ஹோட்டலில் வாங்கப் போகிறீர்கள் என்றால் குட்டி குட்டித்தரமான கண்டெய்னர்களை கொடுத்து பேக் செய்து வாங்கி விடுங்கள். அவற்றை அப்படியே ஒரு பைகளில் போட்டு விருந்தினர்களுக்கு கொடுத்து விடலாம்.

  • நம் வீட்டில் பணிபுரிவர், அன்றாடம் குப்பை சேகரிக்கும் நபர், காய்கறி விற்கும் அக்கா, வீதியை சுத்தம் செய்யும் பெண்மணி இப்படி அவரவர்களுக்கு கொடுக்க தாம்பூலத்தை எடுத்து வைத்து விடுங்கள் (தனித்தனியே பெயரிட்டு) கொடுப்பது சுலபமாக இருக்கும். 

  • நிச்சயம் ஏதாவது ஒரு கன்னி பெண்ணுக்கு (உங்களால் முடிந்த அளவு)  துணி எடுத்துக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.

  • நீங்கள் அன்று என்ன உடை உடுத்தப் போகிறீர்களோ அதையும் முன்கூட்டியே தீர்மானித்து எடுத்து வைத்து விடுங்கள். 

  • இரவு விருந்தினர்கள் எல்லாம் சென்ற பிறகு ஆரத்தி கரைத்து எங்கள் வீட்டிலேயே இரு அம்மா என்று சொல்லி கலசத்தை லேசாக அசைத்து வைத்து விடுங்கள். மறுநாள் நைவேத்தியம் படைத்து அதற்குரிய இடத்தில் வைத்து விடலாம்.

இப்படி சின்னச் சின்ன விஷயங்களை கவனத்தில் கொண்டு செய்தால் நோ டென்ஷன் நோ பி பி. ஒன்லி ஹேப்பி.

மகாலட்சுமி நம் இல்லத்திலேயே சர்வ அலங்காரத்துடன் நிரந்தரமாக தங்கி விடுவார்... நிச்சயம்!

இனிப்பான வரலட்சுமி விரத நல்வாழ்த்துகள்.

என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

மழைக்கால சிறுநீர் தொற்று பாதிப்பும் காரணங்களும்!

பணி ஓய்விற்குப் பின் வரும் காலம் பயனற்றதா?

SCROLL FOR NEXT