Koyambedu Bus Stand...
Koyambedu Bus Stand... 
மங்கையர் மலர்

என் கனவை கலைத்த சென்னை!

கல்கி டெஸ்க்

ன் பெயர் ரேவதி. நாங்கள் தஞ்சாவூரில் வசிக்கிறோம். எனக்கும் என் மகளுக்கும் சென்னையில் வசிக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்தது. சமீபத்தில் ஒரு டி.வி. ஷோவில் கலந்து கொள்ள சென்னை சென்றோம். நாங்கள் பேருந்தை விட்டு இறங்கியதுமே ஆட்டோகாரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. கைப்பையை பிடுங்கி ஆட்டோவில் ஏற்றும் அளவிற்கு மல்லு கட்டுகிறார்கள். பத்து அடி தூரம் நடப்பதற்குள் பதினைந்து பேர் ஆட்டோ வேண்டுமா என கேட்டிருப்பார்கள். பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

நாங்கள் சென்ற சமயம் லேசான மழை பெய்து கொண்டிருந்து. சென்னை முழுவதுமே ஒரே சாக்கடை நாற்றம் நிரந்தரமாகவே இருந்து கொண்டிருந்தது.

எங்கு பார்த்தாலும் அலை அலையாக மக்கள் கூட்டம். சற்று தூரம் நடந்து செல்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. சாலைகளில்  ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கி நின்ற சேறு சகதி மேலும் எரிச்சல் அடைய வைத்தது.  சொர்க்கத்தை விட்டு, நரகத்திற்கு சென்றது போல் தோன்றியது. கடுமையான போக்குவரத்து நெரிசல். வாகனங்கள் எல்லாம் மெதுவாக ஊர்ந்து சென்றன.

எங்குமே சுத்தமும் இல்லை, சுகாதாரமும் இல்லை. கொரோனா பல லட்சம் உயிர்களை காவு வாங்கியும், இன்னும் நம் மக்கள் சுகாதாரத்தையோ, சுத்தத்தையோ கடைபிடிக்கவில்லை என்பது என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தியது.

எங்களை அழைத்துச்செல்ல உறவினர் வந்து கொண்டிருந்தார். அதற்காக சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  சற்று நேரம் அமர சிறிது கூட இடமில்லை. ஏனென்றால் கூலித்தொழிலாளர்கள் அனைவரும் அங்குதான் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். சரி அருகில் உள்ள பார்க்கில் அமரலாம் என அங்கு சென்றோம்.  அங்கு சுற்றிலும் ஒரே குப்பை, எலிகள்  அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தன. ஹோட்டலில் சாப்பிடச் சென்றால், இலை போடாமல் வெறும் தட்டில் பரிமாறினார்கள். இது எவ்வளவு சுகாதாரக்கேடு. அந்த தட்டை சரியாக கழுவினார்களா? என்று கூடத் தெரியாது. இப்படி இன்னும் பல கசப்பான அனுபவங்கள்.

ஹோட்டலில்...

சென்னையில் நிலவும் இத்தனை அவலங்களுக்கும் அடிப்படைக் காரணம், அங்கு நாள் தோறும் குவிந்து குடியேறிக் கொண்டே இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்.

இதற்கு காரணம் பல்வேறு தொழிற்சாலைகள், ஐ.டி கம்பெனிகள் அனைத்தும் சென்னையிலேயே குவிந்து கிடக்கின்றன. பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சென்னையில் பணிபுரிவதால் குடும்பத்துடன் அங்கேயே குடியேற  வேண்டிய சூழல் உள்ளது. அதனாலேயே மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது.

அரசு இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் இரு கழகங்களும் ஒன்றையொன்று குறை கூறுவதை விட்டு விட்டு, என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வந்தால் இந்த மக்கள் கூட்டம் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க முடியும் என யோசிக்க வேண்டும்.
முதலில் கூலித்தொழிலாளர்களுக்கு தங்குமிடம்  உருவாக்கி தர வேண்டும். ஆதரவற்றவர்களை, ஆதரவற்ற இல்லங்களில் முறையாக அழைத்து சென்று பராமரிக்க வேண்டும். வேலைவாய்ப்புகள் பல்வேறு மாவட்டங்களிலும் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகள், ஐ.டி கம்பெனிகள் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தொடங்க வேண்டும். சென்னையை விட மற்ற மாவட்டங்களில் வசிக்கும்  செலவு மிகவும் குறைவே. உழைப்பவர்களுக்கு செலவும் குறையும், பணமும் சேமிக்க முடியும். மாற்றம் ஒன்றே மாறாதது.

-ரேவதி பாப்பி.

உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!

நீரிழிவு எச்சரிக்கை: இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதை!

Mammoth Cave: உலகின் மிகவும் நீளமான குகையை எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா?

தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கனுமா? இந்த கோவிலுக்குப் போங்க!

டைனோசர் காலத்திலேயே அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட உயிரினம் கண்டுபிடிப்பு… சுவாரசிய தகவல்!

SCROLL FOR NEXT