ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இரண்டாம் திங்கட்கிழமையன்று “வயது வந்த நாள்” (Coming of Age Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது 20 வது வயதுக்கு வந்தவர்களின் கொண்டாட்ட நாளாகும். இளம் பெண்கள் பூப்பெய்துவது, வெவ்வேறு வயதிலும், நாட்களிலும் இருந்தாலும், அனைத்துப் பருவப் பெண்களும் 20 வது வயது தொடங்கும் போது, அதற்காகக் கொண்டாடப்படுகின்றனர்.
கி.பி 714 ஆம் ஆண்டிலிருந்து இந்த விழா சடங்குகளுடன் ஜப்பானில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1948 ஆம் ஆண்டு முதல் இந்நாள் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு, ஜனவரி 15 அன்று கொண்டாடப்பட்டது. 2000 ஆம் ஆண்டிலிருந்து இவ்விழாவானது ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இரண்டாவது திங்கட்கிழமை என மாற்றப்பட்டது.
இவ்விழா நாளன்று இருபது வயதை எட்டியவர்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் காலை நேர வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அப்போது நகராட்சி நிர்வாகிகள், இளைஞர்கள் எப்படிப் பொறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்பட்டு முன்னுக்கு வர வேண்டும் என்று அறிவுரையாற்றுவார்கள். பிறகு, இந்த இளைஞர்கள், மற்றும் இளம் பெண்களின் குடும்பத்தினர் ஆலயங்களுக்குச் சென்று வாழ்க்கையில் வெற்றியும் நல்ல ஆரோக்கியமும் வேண்டி வழிபடுவார்கள்.
விழாவின் போது பெரும்பாலான பெண்கள் நாட்டின் பாரம்பரிய உடையான கிமோனோவின் பாணியில் நீண்டு கால்கள் வரை தொங்கியபடி இருக்கும் ஆடையான ஃபுரிசோடை அணிவர். மேலும் ஸோரி என்ற செருப்புகளை அணிந்து கொண்டாடுவர். பெரும்பாலானவர்கள் இவ்வகை ஆடைகளை வைத்திருக்க மாட்டார்கள், மேலும் இந்த ஆடைகள் விலை உயர்ந்ததவை என்பதால், விலை கொடுத்து வாங்காமல் உறவினர்களிடம் இரவல் வாங்கியோ அல்லது, வாடகைக்கு வாங்கியோ அணிவர். ஆண்கள் சில நேரங்களில் பாரம்பரிய உடையை அணிவர். ஆனால், இக்காலத்தில் பல ஆண்கள் பாரம்பரிய ஆடைகள் அணிவதை விடுத்து மேற்கத்திய ஆடைகள் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அன்று மாலையில் இளைஞர்கள் மதுபானக் கேளிக்கை விருந்துகளில் கூட்டமாகக் கலந்து கொள்கின்றனர்.
மாலையில் நடக்கும் இந்த மதுபான கேளிக்கை விருந்துகளின் போக்கு தற்போதைய மூத்த ஜப்பானியர்களுக்குக் கலக்கத்தை அளித்து வருகின்றது. குடித்துவிட்டுக் கத்துவது, ஆடுவது, சண்டையில் இறங்குவது, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மகளிருடன் குலாவுவது போன்ற செயல்கள் வரம்பு மீறிக்கொண்டே வருவது கவலையை அளித்து வருகிறது. மேலும், ஜப்பானில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதும், முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதும் விழாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைவதும் ஒரு பெரிய கவலையாகிவிட்டது.
2017 ஆம் ஆண்டு 12.30 லட்சம் பேர் 20 வயதை எட்டினர். 1970 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது பாதிதான். ஜப்பானின் மொத்த மக்கள் தொகை யில் 25%-க்கும் மேல் 65 வயது மற்றும் அதைத் தாண்டியவர்கள். 2015 முதல் 2030-க்குள் மக்கள்தொகை மேலும் ஒரு கோடி குறையவிருக்கிறது என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கக் கூடும் என ஜப்பான் அரசு அஞ்சுகிறது.