Children 
மங்கையர் மலர்

உங்கள் குழந்தைகள் ஆளுமை மிக்கவர்களாய் வளர வேண்டுமா? இத முதல்ல செய்யுங்க!

ராதா ரமேஷ்

நாம் பொதுவாக மனிதர்களை சந்திக்கும்போது வாய் வார்த்தைகளையும் தாண்டி அவர்களிடம் தொடுதல் ரீதியான உணர்வுகளை கடத்துவது வழக்கம். அவர்களைப் பார்க்கும்போது கை குலுக்குவது, கட்டியணைப்பது, முத்தம் கொடுப்பது இப்படி எவ்வளவோ உணர்வுகள். இந்த உலகில் ஒருவரின் மீதான அன்பை வெளிப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு தொடு உணர்வுகளுக்கே உண்டு. அதிலும் குழந்தைகளுக்கு என்றால் அதன் அளவுக்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம்.

குழந்தைகளிடம் சிறுவயதில் இருந்தே பயம், கூச்ச சுபாவம், தயக்கம் போன்ற பண்புகள் இல்லாமல் வளர்ப்பது மிகவும் நல்லது. இத்தகைய பண்புகளை கடந்து வளரும் குழந்தைகளால்தான் மிகச் சிறந்த ஆளுமை உள்ளவர்களாக வளர முடியும். அவ்வாறு வளர்வதற்கு பெற்றோர்களாகிய நாம் செய்ய வேண்டியது அவர்களை தொடு உணர்வுகள் ரீதியாக நாம் கையாளுவதுதான்.

குழந்தைகளிடம் நாம் எவ்வளவு அன்பு வைத்திருந்தாலும், அதை நாம் மிகச் சரியான விதத்தில் பயன்படுத்தும் போது தான் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. முதலில் அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்பது, அவர்களிடம் மிகச் சரியான முறையில் பேசுவது, குழந்தைகளின் சின்ன சின்ன வார்த்தைகள் முதற்கொண்டு செயல்பாடுகள் வரை பொறுமையாக நிதானித்து பார்ப்பது, ரசிப்பது, அது குறித்து கருத்து கேட்பது இவையெல்லாம் தான் அவர்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க கூடிய மிகப்பெரிய டானிக்குகள்.

குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒரு நாளைக்கு 10 முறையாவது உடலியல் ரீதியான தொடு உணர்வுகளை பயன்படுத்தும் போது, அவர்களின் தன்னம்பிக்கையும், ஆளுமை திறனும் மேம்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவர்கள்  செய்யும் செயல்களுக்காக கை குலுக்குவது, கட்டியணைப்பது, முத்தம் கொடுப்பது, தோளில் கை போட்டு அணைத்துக் கொள்வது... இவை போன்ற உணர்வுகளை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் கடத்துவதற்கு ஒருபோதும் மறக்க கூடாது. பெரும்பாலும் நாம் அனைவரும் அவர்கள் ஒரு சிறிய ஒரு சாதனையை செய்தால் அவர்களுக்கு பிடித்த பொருள்களையோ, பிடித்த விஷயங்களையோ செய்து கொடுப்பதுதான் மிக  முக்கிய அம்சம் என்று நினைக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி நாம் அவர்களை உடலியல் ரீதியாக பாராட்டும் போது தான் அவர்களின் ஆளுமை திறன் மேம்படுகிறது.

எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் மொழி உணர்வுகளை தாண்டி, தொடு உணர்வுகளும் மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக குழந்தைகளிடம் நாம் அதை மிகச் சரியாகப் பயன்படுத்தும் போது நம்மால் அவர்களிடம் விரும்பிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் இருக்கும் போது நாம் ஒரு குழந்தையிடம் எந்த வகையான அணுகு முறையை பயன்படுத்துகிறோமோ, அதே வகையான அணுகுமுறையை தான் மூத்த குழந்தைகள் தங்கள் சகோதர, சகோதரிகளிடமும் பயன்படுத்துகின்றன. எனவே நம்முடைய குழந்தைகளை மிகச் சிறந்த ஆளுமை மிக்கவர்களாக வளர்த்தெடுப்பதற்கு  பெற்றோர்களாகிய நாம் மிகச் சரியான பாதையில் பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT