'குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல!' என்ற நாலடியார் பாடல் மூலம், எக்காலத்தும் மனிதர்கள் தலை முடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது புலனாகும்!
'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா?' என்று பாண்டிய மன்னன் கேட்க, பதில் சொல்ல அந்தச் சிவபெருமானே வந்த வரலாறும் இங்குண்டு!
தலை முடியை மையமாக வைத்து, இன்று எவ்வளவு தொழில்கள் இயங்குகின்றன என்று கணக்கிட்டால் தலையைச் சுற்றும்!
முடியை வளர வைக்கும் ஆயில்கள்,
முடி உதிர்வதைத் தடுக்கும் மருந்துகள்,
பொடுகைப் போக்கி முடியைப் பேணும் மருந்துகள்-மாத்திரைகள்,
மசாஜ்கள்,
சுருளாக்கும் முறைகள்,
சுருளைப் போக்கி முடியை நிமிர்த்தும் முறைகள்,
முடிக்கான பல வண்ண டைகள்
விதவிதமான ஹேர் ஸ்டைல்கள்...
என்று அவை நீண்டு கொண்டே போகும்!
'மயிருக்கு மிஞ்சின கறுப்புமில்லை! மச்சானுக்கு மிஞ்சின உறவுமில்லை!' என்ற பழமொழி கிராமப் புறங்களில் உண்டு! ஆம்! உலகில் பெரும்பாலானோர் கறுப்பு முடி கொண்டோரே! கறுப்பையே விரும்புகின்றனராம்! உலகின் மொத்த மக்கட் தொகையில் ஒரேயொரு விழுக்காட்டினருக்கு சிவப்பு வண்ண முடி உண்டாம்!
இதோடு மட்டுமல்ல! முடிக்கான மகத்தான ஆற்றல்கள் பலவுண்டாம்!
ஒரு முடியை வைத்தே ஒருவரின் இரத்தத்தில் உள்ள மருந்துகளின் தன்மை, தாது உப்புக்கள் மற்றும் விடமின்களின் அளவை நிர்ணயித்து விடலாமாம்! மது மற்றும் போதை வஸ்துக்கள் சாப்பிடுபவரா என்பதைக் கூட அறிந்திடலாமாம்!
ஒருவரின் ஆயுளில், சுமார் 20 முறை வரை, கொட்டிய முடியை மயிர்க்கால்கள் புதுப்பிக்குமாம்!
உடலுறவை எதிர்பார்த்திருப்போருக்கு முடிவேகமாக வளருமாம்!
சராசரியாக 50 லிருந்து 150 முடி வரை ஒரு நாளில் உதிருமாம்! இதற்குள் இருப்பவர்கள் வீணாகக் கவலைப்படத் தேவையில்லை!
செத்த பிறகும் முடி வளரும் என்பதெல்லாம் கட்டுக் கதையாம்!
நாம் கருவில் இருக்கும்போதே, மயிர்க் கால்கள் வளர்ந்து விடுகின்றனவாம்!
நமது உடலில், எலும்பு மஜ்ஜைக்கு அடுத்தபடியாக விரைவாக வளர்வது முடிதானாம்!
எண்ணை, தண்ணீருடன் கலந்திருந்தாலும், அதனை எளிதாக உறிஞ்சும் ஸ்பான்ஞ்ச் போன்ற தன்மை நம் முடிக்கு உண்டாம்!
ஒரு சராசரி மனிதனின் தலையில், ஓராண்டில் வளரும் முடி, 10 மைல் தூரத்திற்கு வருமாம்!
ஒரு கற்றை முடி, செப்புக் கம்பிக்கு (copper) இணையான விட்டமுள்ளது, செப்புக் கம்பியைவிட உறுதி கொண்டது!
நன்கு கறுத்த முடியில், கார்பன் அதிகமாகக் காணப்படுகிறதாம்! நரைத்த முடியில் கார்பனின் அளவு குறைவாக இருக்குமாம்!
உள்ளங் கைகள், கால் பாதங்கள், சளிச் சவ்வுகள், கண் இமைகள் மற்றும் உதடுகள் தவிர உடலின் அனைத்துப் பாகங்களிலும் முடி வளருமாம்!
முடியில் இவ்வளவு விஷயங்கள் ஒளிந்து கிடப்பதால்தான், மருத்துவத் தடயவியல் துறையில் முடி முக்கியப் பங்காற்றுகிறது!
1950 களில்,முடிக்கு வண்ணம் (dye) பூசும் பெண்டிரின் எண்ணிக்கை, மொத்த பெண்களின் எண்ணிக்கையில் 5 விழுக்காடாக இருந்ததாம்! தற்போது....வாயைப் பிளக்காதீர்கள் ... 75 விழுக்காடாம்!