பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது PCOS என்பது பருவமடைந்த பெண்களை பாதிக்கும் ஒரு பொதுவான உடல்நல பிரச்னையாகும். இந்த பிரச்னை இருப்பவர்களுக்கு ஒழுங்கற்ற மாதாவிடாய், கருவுறுதலில் சிக்கல், சீரற்ற உடல் எடை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இந்த பிரச்னையில் இருந்து முழுமையாக வெளிவர முறையான மருத்துவரின் ஆலோசனை தேவை.
PCOS உள்ள பெண்களுக்கு மருத்துவர்கள் உடற்பயிற்சியை பரிந்துரைக்கலாம். ஏனெனில், PCOS இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் என்பதால், உடற்பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். பொதுவாகவே, ஆரோக்கியமான உடலுக்கு தினசரி உடற்பயிற்சி தேவைதான். ஆனால் PCOS இருப்பவர்களுக்கு கட்டாயம் உடற்பயிற்சி தேவை என கூறப்படுகிறது.
ஏரோபிக் உடற்பயிற்சி
மே 2024 இல் ஜர்னல் ஆஃப் சயின்ஸ் அண்ட் மெடிசின் இன் ஸ்போர்ட்டில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஒவ்வொரு வாரமும் 150 முதல் 300 நிமிடங்கள் மிதமான - தீவிர ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது 75 முதல் 150 நிமிடங்கள் தீவிர ஏரோபிக் செயல்பாடு PCOS உள்ள பெண்களுக்கு உதவும் என கூறப்படுகிறது.
ஏரோபிக் உடற்பயிற்சி PCOS உள்ளவர்களில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம் என்றும் 2020 இல் ஜர்னல் ஆஃப் ஃபங்க்ஷனல் மார்பாலஜி அண்ட் கினீசியாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
ஓடுவது மிகவும் பயனுள்ள ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். எனவே PCOS அறிகுறிகளை அனுபவிப்பவர்களுக்கு ஓடுவது மிகவும் பயனுள்ள தீர்வு என கணிக்கப்பட்டுள்ள்ளது.
ஓடுவதினால் PCOS இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்
இன்சுலின் எதிர்ப்பு
PCOS இருக்கும் பெண்கள் அதிகளவு இன்சுலின் எதிர்ப்பை அனுபவிப்பார்கள். மற்ற ஏரோபிக் உடற்பயிற்சிகளைப் போலவே ஓடுவதும், இன்சுலினை திறமையாக செயல்படுத்தி, உடலின் திறனை மேம்படுத்தும் என்பதால், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கு ஓடுவது அவசியமாகிறது.
எடை இழப்பு
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் அதிகப்படியான 'ஆண்ட்ரோஜன்' உற்பத்தி போன்றவை PCOS அறிகுறிகளின் தீவிரத்தை அதிகப்படுத்தும். ஆனால், தினசரி ஓடுவதால், எடை இழப்பை ஊக்குவித்து இதை சரி செய்ய முடியும்.
ஹார்மோன் சமநிலை
தினசரி ஓட்டம், ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தி மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது. இதனால் அதிகரிக்கும் ஆண் ஹார்மோன்களின் (ஆன்ட்ரோஜன்கள்) அளவையும் குறைக்க முடியும். மேலும் முகப்பரு மற்றும் முகத்தில் ஏற்படும் முடி வளர்ச்சியையும் தடுக்க முடியும். கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்களையும் இது தடுக்கலாம்.
மன ஆரோக்கியம்
பொதுவாகவே ஓடுவது மனநிலையை மேம்படுத்த உதவியாக இருப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கும். மன அழுத்தம் இருந்தால் PCOS அறிகுறிகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் இது நன்மை பயக்கும். ஓடுவது உடலின் இயற்கை இரசாயனங்களான எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுவதால், PCOS உடன் தொடர்புடைய மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவியாக இருக்கும்.
இருதய ஆரோக்கியம்
PCOS உள்ள பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தினசரி ஓடுவதனால் இதயத்தை வலுப்படுத்தி அவற்றின் சுழற்சியை மேம்படுத்த முடியும். இது ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும் இதய நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
எனவே, PCOS உள்ள பெண்களுக்கு ஓடுவது ஒரு சிறந்த தீர்வாக கூறப்படுகிறது.