அண்மையில், பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். அப்போது தனது உரையில், 9 வயது முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு, பின்னாளில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer) வராமல் தடுக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதாகக் குறிப்பிட்டார்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏன் வருகிறது? என்ன அறிகுறிகள்? காவேரி மருத்துவமனை மருத்துவர் புற்றுநோய் சிகிச்சை நிபுணர், டாக்டர் சுஜய் சுசிகர் அவர்களிடம் கேட்டோம்…
செர்விகல் கேன்சர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எதனால் வருகிறது டாக்டர்?
பெண்ணுறுப்பிலிருந்து உட்செல்லும் பாதையான வஜைனா, கர்ப்பப்பையில் இணையும் இடத்தில் இருப்பது சர்விக்ஸ். கர்ப்பப்பையின் குறுகிய வாய்ப் பகுதி இது. இங்கே வரும் புற்றுநோய் சர்விகல் கேன்சர். வைரஸ் தொற்றினால் உண்டாகும் கேன்சர் இது.
இந்தியாவில் அனேகமாக பெண்களுக்கு வரும் இந்த புற்று, ‘ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ்’ (human papilloma virus (HPV) என்னும் கிருமித் தொற்றினால் ஏற்படுகிறது.
புகை பிடித்தல், மது அருந்துதல் பழக்கம் இருக்கிற பெண்களுக்கும் வரும் வாய்ப்பு உண்டு.
இந்தத் தொற்று எதனால் ஏற்படுகிறது டாக்டர்?
முக்கியமாக உடலுறவினால் ஆண்களிடமிருந்து பெண்களுக்கோ, அல்லது பெண்களிடமிருந்து ஆண்களுக்கோ தொற்று வரும். பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வரும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
வைரஸ் கிருமியின் மரபணுவான டிஎன்ஏயின் ஒரு பகுதி, கர்ப்பப்பை வாயில் இருக்கும்
மரபணுவில் பதிந்து, தொற்று உருவாகக் காரணமாகிறது. இந்தக் கிருமிகளில் பலவகைகள் இருந்தாலும், குறிப்பாக, HPV 16. மற்றும் HPV 18 என்ற வகை வைரஸ்கள், 70 சதவீதத்துக்கு மேற்பட்ட சர்விகல் கேன்சரை ஏற்படுத்துகின்றன.
இதற்கான அறிகுறிகள் (Symptoms) என்னென்ன?
உடலுறவுக்குப் பின்னோ, அல்லது மாதாந்திர பீரியட்களுக்கு நடுவே ஏற்படும் ரத்தப் போக்கு. அதிக அளவிலான வெள்ளை டிஸ்சார்ஜ், உடலுறவின்போது வலி, இடுப்புப் பகுதியில் வலி, சிறுநீர், மலம் கழிக்கும்போது வலி, களைப்பு இவையெல்லாம் அறிகுறிகள்.
நோய்க்கான சோதனைகள் எப்படி செய்யப் படுகின்றன டாக்டர்?
பாப்ஸ்மியர் (Pap smear) சோதனையில் சர்விக்ஸ் பகுதியிலிருந்து திசுக்களை எடுத்து சோதிப்பதுதன். இதன் மூலம், நோய் உள்ளதா என்று கண்டுபிடிப்பது மட்டுமின்றி வருவதற்கான மாற்றங்கள், திசுக்களில் காணப்படுகிறதா என்றும் கண்டறியலாம்.
பாப்ஸ்மியர் சோதனையில் திசுக்களின் மாற்றங்கள் இருந்தால் நோயின் ஆரம்பமாக இருக்கலாம். இதனால் நோய் இருப்பதை விரைவில் கண்டறிய முடியும்.
இன்னோரு சோதனை கால்போஸ்கோபி Colposcopy. சர்விக்ஸ், வஜைனா, வல்வா போன்ற பகுதிகளில் Colposcope என்ற கருவி மூலம் நோயின் தன்மையைக் கண்டறிவது.
பாப்ஸ்மியர் சோதனைகளை எந்த வயதில் செய்து கொள்ள வேண்டும்? எத்தனை இடைவெளிகளில் செய்ய வேண்டும்?
20 வயதிலிருந்தே செய்து கொண்டால் நல்லது தான். பிரச்னை எதுவும் இல்லையென்றால், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும், அதன் பின் பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் செய்து கொள்ளலாம். ஆண்டு தோறும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இது உயிர்க்கொல்லியா டாக்டர்?
மற்ற கேன்சர்களைப்போலவே இதிலும் நான்கு நிலைகள் இருக்கின்றன.
முதல் ஸ்டேஜான ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் குணப்படுத்த முடியும். முற்றிய நிலை என்றால் குணமாவது கடினம்.
இதற்கான சிகிச்சைகள் என்ன?
நோயின் நிலைகளைப் பொறுத்து, சிகிச்சை தரப்படும். செர்விக்ஸ் தவிர மற்ற இடங்களில் புற்றுநோய் பரவவில்லை என்றால் கர்ப்பப்பை செர்விக்ஸ் போன்ற உறுப்புக்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். அப்போது மீண்டும் வர வாய்ப்பில்லை. இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் கீமோ, ரேடியஷன் போன்றவை தேவைப்படலாம்.
எந்த வயதில் வரக்கூடும்? மெனோபாஸ் முடிந்த பெண்களுக்கும் வருமா?
பொதுவாக 50 வயதில் வரும் வாய்ப்புக்கள் உண்டு. மெனோபாஸ் கடந்த பெண்களுக்கும் வரக்கூடும்.
வராமல் தடுக்க முடியுமா?
நிச்சயமாக முடியும். இதற்கு சரியான தடுப்பூசி எடுத்துக்கொண்டால் வராமலே தடுக்க முடியும். அதுவும் 9 வயதிலிருந்து 13 வயது வரை உள்ள பெண், அதாவது அவர்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பாகவே இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு விடவேண்டும். இதனால் அவர்கள் எதிர்காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வரமல் காப்பாற்றப் படுவார்கள்.
இதற்கான தடுப்பூசி போடும்போது உடலில் எதிர்ப்பு தரும் ஆன்டிபாடி சக்திகள் உண்டாக்கப்படும். வைரஸின் இறந்த செல்களில் இருந்து தயாராகும் இந்த தடுப்பூசியை மூன்று முறை போடவேண்டும். இவை இந்நோய்க்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். முதல் இரண்டு ஊசிகளையும் தலா ஒரு மாத இடைவெளியிலும், பின்பு 4 மாத இடைவெளியில் மூன்றாவது ஊசியையும் போட வேண்டும்.
9 வயதிலிருந்து 13 வயதுக்குள் தடுப்பூசி போடவேண்டும் என்று சொல்கிறீர்களே டாக்டர், அந்த வயதில் போட விட்டுப் போனவர்கள் எப்போது போடலாம்?
எந்த வயதிலும், மெனோபாஸ் கடந்தவர்களும் கூட போட்டுக் கொள்ளலாம். ஆனால் அதன் பலன் குறைவாகத்தான் இருக்கும்.
பக்க விளைவுகள் எதுவும் இருக்காதா?
தடுப்பூசியால் எந்த பக்க விளைவுகளும் இருக்காது.
எந்த ஆண்டு இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது? எப்போது முதல் நம் நாட்டில் போடப்பட்டு வருகிறது?
க்வீன்ஸ்லாந்து மருத்துவர்களின் கண்டுபிடிப்பான இந்த தடுப்பூசி, 2006 ல் உரிமம் பெற்று, 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது.
நூற்றுக்கணக்கான நாடுகளிலும் மற்ற தடுப்பூசிகளைப்போல இதவும் அவசியமாக்கப் பட்டுள்ளது. இதனால் கடந்த 15 ஆண்டுகளில், லட்சக்கணக்கான மகளிர் சர்விக்ஸ் புற்று நோய் வருவதிலிருந்து தடுக்கப் பட்டிருக்கின்றனர்.
எனவேதான் மத்திய அரசு இந்த விழிப்புணர்வை பரவச் செய்து, தடுப்பூசியை இளம் சிறுமிகளுக்குப் போடவேண்டும், வருங்காலத்தில் சர்விகல் புற்று நோயைத் தடுக்க வேண்டும் என்றும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இதில் மத்திய அரசின் திட்டம் என்ன?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தனது பட்ஜெட் உரையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க எல்லா இளம் சிறுமியருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் கொண்டு வருவது பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.
தற்சமயம் இந்த ஊசி ஒரு டோஸ் 4000 ரூபாய் முதல் 6000 வரை ஆகிறது. இனி இது குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கருதலாம்.