Harini Amarasuriya 
மங்கையர் மலர்

இலங்கையின் பிரதமரானார் ஹரிணி அமரசூரிய... யார் இந்த ஹரிணி அமரசூரிய?

கல்கி டெஸ்க்

- கவிதா

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முடிவு கிடைக்குமா? அல்லது மேலும் தீவிரமாகுமா? என்கிற கேள்விக்கு இலங்கை அதிபர் தேர்தல் நடந்தால் தான் முடிவு கிடைக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் இடதுசாரி கட்சியான 'மக்கள் விடுதலை முன்னணி' (ஜனதா விமுக்தி பெரமுன) வேட்பாளரான அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றார். 

அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றதையடுத்து பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே, இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிய இன்னும் 11 மாதங்கள் இருந்த போதும், புதிய அரசுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஹரிணி வெற்றி பெற்றால்தான் சட்டப்படியான பிரதமராக தொடர முடியும்.

இலங்கை பிரதமர் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத அளவில் சுமார் 6.55 லட்சம் விருப்ப வாக்குகளை பெற்று ஹரிணி மிகப்பெரிய அளவில்  வெற்றி பெற்று சாதனை படைத்தார். இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் இவ்வளவு அதிகமான வாக்குகளை இதற்கு முன்னர் எந்த நாடாளுமன்ற வேட்பாளரும் பெற்றது கிடையாது. இதற்கு முன் ராஜபக்சே பெற்ற 5.2 லட்சம் வாக்குகளே அதிகபட்ச வாக்குகளாக இருந்தது. ராஜபக்சேவின் இந்த சாதனையை ஹரிணி அமரசூரிய  முறியடித்துள்ளார். புதிய பிரதமராக வெற்றி பெற்ற இவர், அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதே தனது முதன்மை பணி என்று கூறியுள்ளார்.

இலங்கையின் பெண் பிரதமர்களாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தொடர்ந்து மூன்றாவது பெண் பிரதமரானார் ஹரிணி அமரசூரிய. மற்ற இரண்டு பிரதமர்களைப் போல் இல்லாமல், குடும்ப அரசியல் பின்னணி ஏதும் இன்றி ஹரிணி பிரதமர் ஆகியுள்ளார்.

ஹரிணி அமரசூரிய டெல்லி பல்கலைக்கழத்தில் சமூகவியலில் இளங்கலைப் பட்டமும், ஆஸ்திரேலியாவின் மக்குவாரி பல்கலைக்கழகத்தில் மானிடவியலில் முதுகலைப் பட்டமும், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மானிடவியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் சில ஆண்டுகள் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உளவியல் பயிற்சியாளராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் மூத்த விரிவுரையாளராக பணியாற்ற தொடங்கினார். 

ஹரிணி அமரசூரிய பெண் உரிமை ஆர்வலராகவும், கல்வியாளராகவும் இடதுசாரி சித்தாந்தத்தில் தீவிர பிடிப்புடையவராகவும் மக்களால் நன்கு அறியப்படுகிறார். மேலும் இலங்கையின் கல்வி முறை, வேலையின்மை, பாலின சமத்துவமின்மை போன்ற பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். இலங்கையில் மிகப்பழமையான கல்வி முறையே பின்பற்றப்படுவதாகவும் அதில் மாற்றம் வேண்டும் என்றும் ஹரிணி அமரசூரிய தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இலவசக் கல்வி தொடர்பாகப் பல்வேறு தரப்பினர் தலைமையில் பல போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். கல்வி முறையில் மாற்றம் வந்தால் தான் சமூதாயத்தில் மாற்றம் வரும் என்று ஹரிணி அமரசூரிய தொடர்ந்து போராடி வந்தார். 

கல்வி அமைப்பில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த இவருக்கு, ஜேவிபி கட்சியுடன் 2019ல் தொடர்பு கிடைக்கிறது. இதனை தொடர்ந்து 2020 தேர்தலில் அநுரவுக்கு ஆதரவாக இவர் பிரசாரம் செய்தார். மறுபுறம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  

அரசு நிறுவனங்களில் ஊழலை ஒழித்தல், பின்தங்கிய சமூகத்தினருக்கு தரமான கல்வியை உறுதி செய்தல், பாடத்திட்டங்களை நவீனமயப்படுத்துதல், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல், சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகத்தை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரித்தல் போன்ற முக்கிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பது என பல திட்டங்களை ஹரிணி செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

குழந்தைகள் படிச்சதை மறக்காம இருக்க பாலோ பண்ண வேண்டிய 4 விஷயங்கள்!

SCROLL FOR NEXT