மங்கையர் மலர்

தியானம் செய்வது எப்படி? கதை மூலம் இந்த விளக்கத்தை படிக்கத் தவறாதீர்கள்!

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

"தியானம் செய்வது ஏன் கடினமாக உள்ளது என்பதற்கு உதாரணமாக ஒரு கதையைப் பார்ப்போம்."

ஒரு கோவிலில் ஒரு தர்மகர்த்தா இருந்தார். அவர் அந்தக் கோவிலில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார். இங்கும் அங்கும் என்று பல இடங்களில் அலைந்துக் கொண்டிருப்பார். அந்தக் கோவிலில் பல்வேறு இடங்களுக்குச் சென்று, அது சரியாக உள்ளதா, இது சரியாக உள்ளதா என்று நகர்ந்துக் கொண்டே இருப்பார்.

அந்தக் கோவிலில் ஒரு ஞானி இருந்தார். அவர் காலை தொடங்கி சாயந்திரம் வரை நகராமல் ஒரே இடத்தில் இறை தியானத்தில் இருப்பார். கோவிலில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஞானியான அவர் எந்த ஒரு சலனமும் இன்றி அதே இடத்தில் அத்தகைய இருப்பில் இயக்கமின்றி இருப்பார்.

தர்மகர்த்தா ஞானியை ஏளனமாகப் பார்த்தார்.

"ஏன் ஒரே இடத்தில் அசையாமல் இருந்து கொண்டிருக்கிறீர்கள் ? என்னைப் பாருங்கள். எவ்வாறு அங்குமிங்கும் அலைந்துக் கொண்டு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். கடினமான வேலைகளைச் செய்கிறேன். உங்களைப் போல் எளிதான ஒரே இடத்தில் கண்ணை மூடி தியானத்தில் உட்கார்ந்திருக்கும் வேலையைச் செய்யவில்லை" என்றார் கோவில் தர்மகர்த்தா.

"அப்படியா. சரி. இந்த எளிமையான வேலையை நீ முயற்சித்துப் பார்" என்றார் ஞானி.

கோவில் தர்மகர்த்தாவால் ஐந்து நிமிடங்கள் கூட அவ்வாறு ஒரே இடத்தில் கண்ணை மூடி அமர்ந்திருக்க முடியவில்லை. முதலில் உடல் ஒத்துழைக்கவில்லை. அடுத்தபடியாக மனமானது அங்குமிங்கும் அலைபாய்ந்தது. அவ்வப்போது கண்களைத் திறந்து அங்குமிங்கும் பார்வையைச் செலுத்தினார். ஐம்புலன்கள் சார்ந்த புறமனம், மூளை சார்ந்த நடுமனம் , ஆன்மா சார்ந்த உள்மனம் என்று மனங்களின் எண்ணங்கள் பரிமளித்து அவரிடம் பல்வேறு விதங்களில் தோன்றின.

கோவில் தர்மகர்த்தா தியானம் செய்வது எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்துக் கொண்டார். ஞானியின் மீதான அவரது மரியாதை பல மடங்கு கூடியது. தியானத்தின் மகிமையை உணர்ந்து ஞானியிடம் மன்னிப்பு கேட்டு அவரின் சீடரானார்.

பொதுவாக மனமானது 14 முதல் 40 வரை என்ற எண்ண ஓட்டத்தில், அதாவது மன அலைச்சுழலில் இருக்கும். இதனை TPS - Thoughts Per Second என்று கூறுவார்கள். அதாவது ஒரு வினாடியில் உள்ள எண்ணங்களின் எண்ணிக்கை. இந்த அலை ஓட்டத்தினை பீட்டா(Beta) என்று கூறுவார்கள். பேராசை, சினம், கடும்பற்று, கவலை, பொறாமை போன்ற உணர்ச்சி வயப்பட்ட மனநிலைகளில் மனதின் அலைச்சுழல் வேகமானது இன்னும் அதிகரிக்கும். அத்தகைய மனதைக் கட்டுக்குள் கொண்டு வருவது எளிதான விஷயம் அல்ல.

மனதை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அரிதான விஷயம். சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது என்று தாயுமானவர் பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்

கரடி வெம் புலி வாயையும்

கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்

கண் செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்

வேதித்து விற்று உண்ணலாம்

வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலா வரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்

சந்ததமும் இளமையொடு இருக்கலாம் மற்றும் ஒரு

சரீரத்தினும் புகுதலாம்

சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்

தன் நிகரில் சித்தி பெறாலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

திறம் அரிது சத்தாகி என்

சித்தமிசை குடி கொண்ட

தேசோ மயானந்தமே

- தாயுமானவர்

தியானம் செய்யும் போது மன அலைச் சுழலானது, பீட்டா(Beta) அலைச்சுழலில்(14 முதல் 40 வரை) இருந்து படிப்படியாக குறைந்து, இன்னும் மெல்லிய மன அலைச் சுழல்களுக்கு வருகிறது.

பின்வருமாறு படிப்படியாகக் குறைகிறது.

  • ஆல்ஃபா(alpha) அலைச்சுழல் — 8 முதல் 13 வரை

  • தீட்டா(theta) அலைச்சுழல்— 4 முதல் 7 வரை

  • டெல்டா(delta) அலைச்சுழல் — 1 முதல் 3 வரை

  • எண்ணங்கள் அற்ற நிலை(thoughtless state).

ஒரு குருவிடம் தியானக் கலையைப் பயின்று, தொடர்ந்து பயிற்சி செய்யச் செய்ய, மனம் மெல்லிய மன அலைச்சுழல்களில் பயின்று, அத்தகைய மன அலைச்சுழல்களில் மனமானது தங்குவது எளிதாகிறது.

ஆரம்பத்தில் மனமானது இத்தகைய மெல்லிய மன அலைச்சுழல்களில் முன்கூட்டியே அனுபவம் இல்லாததால், வெகு நேரம் நிலைத்து நிற்காது. திடீரென்று தாவிக் குதிப்பது போல ஏற்கனவே பழகிய மன அலைச்சுழலுக்கு மாறிவிடும்.

பயிற்சி செய்யச் செய்ய, மெல்லிய மன அலைச்சுழல்களுக்கு மனம் பழகி, அத்தகைய மன அலைச்சுழல்களில் நிலைப்பது எளிதாகும். மனமானது அமைதி நிலையை அடையும்.

தியானத்தினால் அடைந்த அமைதி நிலையைப் பற்றி, வேதாத்திரி மகரிஷி அவர்கள் பின்வரும் குருவணக்கப் பாடலில் கூறுகிறார்கள்.

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற சீர் அறியச் செய்த குருவே!

அந்த நிலை தனிலறிவு அசைவற்றிருக்கப் பெரும் ஆனந்தம் பொங்கு தங்கே!

இந்தப்பெரும் உலகமிசை எடுத்த பலபிறவிகளின் இறுதிப் பயன் ஆகிய

சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்

சந்தோஷச் செய்தி இதுவே.

- வேதாத்திரி மகரிஷி

"தியானத்தை முறையாக குருவிடம் கற்று, பயிற்சி செய்து, சாந்த வாழ்வினைப் பெற முயல்வோம்."

மனச்சோர்வைப் போக்கும் மாமருந்து!

அட… இதுதான் Thuglife சிம்பு லுக்கா? நாளை வெளியாகும் சூப்பர் அப்டேட்!

ஹெல்தி ஹனி மிக்ஸ் தஹி சாலட்!

DC Vs RR: ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான் அணி?

மாதாந்திர வருவானம் கிடைக்கும் அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்!

SCROLL FOR NEXT