படிக்கும்போது விளையாட்டைப் பற்றி நினைக்காதே; விளையாடும்போது படிப்பைப் பற்றி நினைக்காதே என்றார் -செஸ்டர் ஃ பீல்ட்.
வெற்றி விரும்பும் அனைவரும் குறிப்பிட்ட இலக்குகளை தேர்வு செய்து அவற்றை அடைய முயற்சி செய்வது அவசியம். அவர்கள் தேர்வு செய்யும் இலக்குகள் தெளிவாகவும், பொருள் உள்ளனவாகவும், அடையக் கூடியவையாகவும், தேவையானவையாகவும், கால நிர்ணயம் கொண்டவையாகவும் இருத்தல் வேண்டும். அவற்றை அடைவதற்கு ஒரு செயல்திட்டத்தை வகுத்து படிப்படியாக இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும். தாண்டிய ஒவ்வொரு படியும் நமக்கு மனநிறைவைத் தரும். முழுமை சிறந்தது எனினும் எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்த்தால் ஏமாற்றுமே மிஞ்சும். என்றாலும் முக்கால் திட்டம் சரியாகவே செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.
எனவே, நம் ஆற்றலுக்கு ஏற்றவாறு திறமையாக செயல்பட இலக்குகள் உதவும். இலக்குகளை எய்து வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு சில துணைகளும் தடைகளும் உண்டு ."துணைகளைப் போற்றி தடைகளைத் தகர்த்தல் வெற்றிக்கு வித்திடும்" எனவே அவை பற்றி சற்று ஆராய்ந்தால்,.
நல்ல நூல்கள், இதழ்கள், இணையதளம் ஆகியவற்றின் மூலம் நமது அறிவு மற்றும் உள்ளம் ஆகியவை மேம்படுவதற்கான கருத்துக்களை ஈர்த்துக்கொண்டு இலக்குகளை அடையலாம்.
பெரியவர்களின் வாழ்க்கை வரலாறு, நமக்கு தக்க பாடம் தரும் நீதி நூல்கள், நமக்கு நெறி காட்டும் முதுமொழிகள் ஆகியவை செம்மையாக நம்மை வழி நடத்தும்.
இறை நம்பிக்கை ஆன்மீகவாதிகளால் மட்டுமின்றி உளவியல் நிபுணர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது. நம் மனதிற்கு அமைதியை தந்து பிரச்னைகளை பதற்றம் இன்றி அணுக உதவுகிறது.
'இலக்குகளை அடைய இறை நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இரண்டு கண்களாகும்'. லட்சியப் பாதையில் இருந்து மனம் விலகி சோர்வடைந்தால் இலக்குகளை அடைய முடியாது. இலக்கில் கவனம் இருந்தால் வெற்றி நிச்சயம். இதற்கு வழி சொல்லும் ஒரு கதையைக் காண்போம்!
இறை பக்தியுள்ள ஒரு மன்னன் இருந்தான். தினமும் கடவுளுக்கு பூஜை செய்யாமல் அவன் உணவு அருந்தியதே இல்லை. ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டுக்குச் சென்ற மன்னன் இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால் அங்கேயே தங்கினான். மறுநாள் வழக்கம்போல் விழித்தெழுந்த மன்னன் குளித்து முடித்து பூஜைக்கு தயாரானாரன். ஈர மண்ணைப் பிடித்து கடவுளாக வைத்து, மலர்களால் பூஜித்து விட்டு, தியானத்தில் ஆழ்ந்தான்.
அப்போது அந்தப் பக்கமாக ஒரு வேடன் மானைத் துரத்திக்கொண்டு ஓடினான். வேடனின் கால் மன்னன் கடவுளாக பாவித்து வழிபட்ட மண் மேட்டின் மேல் போடப்பட்டிருந்த பூக்களில் பட்டது. அப்போதும் அந்த வேடன் மன்னரையோ, அங்கிருந்த மற்றவர்களையோ அங்கு பூஜை நடப்பதையோ கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. அவனது கவனம் முழுக்க அந்த மான் மீதே இருந்தது. தொடர்ந்து மானைத் துரத்தியபடி ஓடினான்.
எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த மன்னனுக்கு கடும் கோபம் வந்தது. "கடவுளுக்கு பூஜித்த பூக்களை மிதித்ததோடு, என்னையும் மதிக்காமல் போகிறான். என்ன ஆணவம்? பிடியுங்கள் அந்த வேடனை,” என்று ஆணையிட்டார்.
உடனே வீரர்கள் வேடனை துரத்தினார்கள். ஆனால் காட்டில் ஓடி பழக்கப்படாததால் வேடனின் வேகத்துக்கு ஈடு தர முடியாமல் தோல்வியோடு திரும்பினார்கள். மன்னனின் கோபம் மேலும் அதிகரித்தது.
வேட்டையாடிக் கொன்ற மானுடன் கொஞ்ச நேரத்தில் வேடன் அந்த வழியே திரும்பினான். வீரர்கள் ஓடிப்போய் அவனை பிடித்து மன்னன் முன்பாக கொண்டுவந்து நிறுத்தினார்கள்.
அப்போதுதான் மன்னரைப் பார்த்தான் வேடன். அவரை வணங்கி "எங்கள் வேடர்களின் வசிப்பிடமான இந்த காட்டிற்கு வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்" என்றான். அவனை எரித்துவிடுவது போல பார்த்தான் மன்னன் ."இதே வழியாக மானைத் துரத்தியபடி சென்ற நீ என் பூஜையையும் கெடுத்தாய். என்னையும் அலட்சியம் செய்து அவமானப்படுத்தினாய். இப்போது மாட்டிக்கொண்டதும் பணிவானவன் போல் நடிக்கிறாயா? என்று சீற்றமாகக் கேட்டார்.
"மன்னிக்க வேண்டும் மன்னா! வேட்டையின்போது என் கவனம் முழுவதும் மான்மேல்தான் இருந்தது. அதனால்தான் நான் எதையும் கவனிக்கவில்லை” என்றான் வேடன்.
மன்னனுக்கு ஏதோ உறுத்தியது. வேட்டையில் இருந்த வேடனின் கவனம் இரை மீது குவிந்திருக்கிறது. ஆனால் தியானத்தில் ஆழ்ந்திருந்த நம் மனம் இறைவன் மீது குவிந்திருக்கவில்லையே! .
அதனால்தானே வேடனை கவனிக்க முடிந்தது. தனக்கு பாடம் கற்பித்த வேடனுக்கு பரிசு கொடுத்து அனுப்பினான் மன்னன். பிறகு மௌனமாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான். தன் மனம் இறைவன் நினைவில் இருந்து விலகியது ஏன்? புதிய சூழல், முதல் நாள் அலைந்ததால் ஏற்பட்ட களைப்பு, சுற்றிலும் விதவிதமான சத்தம் எனக் காரணங்கள் புரிந்தன .
இந்த மன்னனை போன்றுதான் நாம் இருக்கிறோம். லட்சிய பாதையில் இருந்து மனம் விலகி விடுகிறோம். அப்படி சோர்வடைவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து, அதை சரி செய்ய வேண்டும். இலக்கில் கவனம் இருந்தால் வெற்றி நிச்சயம்.
அன்பர்களே!
இலக்கில்லாத பயணம்
விளக்கில்லா வீடு போலாகும்
வறுமையிலும்
வாழ்க்கையோடு போராடுகிற வலிமை வேண்டும்
திறமை இருந்தால்
எட்டுத் திசைகளும்- உங்களை எட்டிப் பார்க்கும்
உழைப்பை மூலதனமாக்கி உறுதியோடு உழையுங்கள்
வசந்த காலம் - உங்களின் வாசலில் நிற்கும்
வெற்றித் திருமகள் -
உங்களை முத்தமிடுவாள்!
இப்ப சொல்லுங்கள், வெற்றிக்கு வழி வகுப்பவை இலக்குகள்தானே!