வடக்கே கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த துவாபர யுகத்தில் கொண்டாடப்பட்ட இந்திர விழா, தெற்கே தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது!
ஆனால் கடவுளர்களுக்கான விழாக்களும் கால மாற்றத்திற்கு உட்பட்டவைதான் என்பது போல நாளாவட்டத்தில் அந்த விழா தமிழ்நாட்டில் வழக்கொழிந்து போய்விட்டது.
கி.மு 2 முதல் 5ம் நூற்றாண்டுவரை சங்க காலத்தில் தமிழர்களுக்கு இந்திரனே செல்வாக்குள்ள இறைவனாகத் திகழ்ந்தார். அப்போதைய தமிழகச் சமவெளிப் பகுதி மருதம் என்று அழைக்கப்பட்டது. விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்டிருந்த மக்கள் வாழ்க்கை, மழை பொழியும் வருணனையே பெரிதும் நம்பியிருந்தார்கள். ஆகவே வருணனுக்கும் தலைவனான இந்திரனை வழிபட்டார்கள். தங்களது வளமான வாழ்க்கைக்கும், சொத்து, வசதிகளுக்கும் அவனே காரணம் என்று பூரணமாக நம்பினார்கள்.
சோழர்களின் துறைமுகப் பட்டினமான காவிரிப்பூம் பட்டினத்தில் கொண்டாடப்பட்ட இந்திர விழா மிகவும் கோலாகலமானது. இந்த விழா எவ்வாறெல்லாம் கொண்டாடப்பட்டது என்பன போன்ற விவரங்கள், தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டான, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் விரிவாகக் காணப்படுகின்றன.
ஒருமுறை காவிரிப்பூம் பட்டினத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. அப்போது அப்பகுதிக்கு வந்தார் குறுமுனி அகஸ்தியர். அப்போதைய சோழ அரசனான செம்பியனிடம், இந்திரனுக்கு விழா எடுத்தால் அவன் மனம் மகிழ்வான், மழை பொழிவான், வளம் செழிக்கச் செய்வான் என்று யோசனை சொன்னார் என்று மணிமேகலை விவரிக்கிறது.
அதன்படி மன்னனும், மக்களும் ஒன்றுகூடி இந்திர விழா எடுப்பித்தனர். விழா முடிவதற்குள் பெருமழை பொழிந்து அனைவரையும் மகிழ்ச்சிக்குள் மூழ்கடித்தது. பஞ்சம் விலக, மன்னன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
விழாவின் நிறைவில் இவ்வாறு மழை பொழிந்ததால், ஒவ்வொரு ஆண்டும் அவ்வாறு விழா கொண்டாடியும், அடுத்தடுத்து வந்த அரசர்களும் இந்த வழக்கத்தைப் பின்பற்றியும் வளமாக வாழ்ந்தார்கள். சித்திரை மாதம் பவுர்ணமி அன்று ஆரம்பித்து வைகாசி மாதம் பவுர்ணமி நாள்வரை இந்திர விழா கொண்டாடப்பட்டது.
விழா தொடக்கத்தில் முரசுகள் அதிர்ந்தன. மக்கள் தத்தமது வீடுகளையும், சுற்றுப்புறங்களையும், நீரால் சுத்தப்படுத்தி கோலங்களால் அழகுறச் செய்தனர். வீடுகள் மட்டுமல்லாமல், வீதிகளிலும் மலர்த் தோரணங்கள் அலங்கரித்தன. சாதாரண குடிமக்களும், பிரமுகர்களும், மன்னனுக்கு மரியாதையையும், காணிக்கையையும் செலுத்தினார்கள். எல்லோரும் நலம் பெற வேண்டும் என்று பொதுவாக இந்திரனிடம் வேண்டிக் கொண்டார்கள். வெடிகள் அதிர, பாட்டு, நடனக் கச்சேரிகள் என்றெல்லாமும் விழா அமர்க்களப்பட்டது. விழாவின் நிறைவு நாளன்று மக்கள் கடலில் நீராடி, இந்திரனுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
ஆனால் காலம் உருண்டோட, ஒருசமயம் காவிரிப்பூம் பட்டினத்தை கடல் கொண்டது. மக்களின் உடைமைகளையும், உயிர்களையும் அவ்வாறு கடல் பலி வாங்கியதிலிருந்து மக்கள் வெறுப்புற்றார்கள் என்றும், அதற்குப் பிறகு இந்திர விழா கொண்டாடப்படவில்லை என்றும் காப்பியம் தெரிவிக்கிறது.
இன்றைக்கு இந்திர விழா என்று இல்லாவிட்டாலும், காவிரிப்பூம் பட்டினம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலுமுள்ள எல்லா கோவில்களிலும் வெவ்வேறு பெயர்களில் விழாக்கள் அனுசரிக்கப்படுகின்றன.
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களில் மட்டும் இந்திர விழா விவரம் உயிர்ப்போடு இருக்கிறது!